தானவ நாட்டை சேர்ந்த சேந்தங்குடி ஜமீன் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிபி 1920 ஆம் ஆண்டு எழுதப்பட்ட புதுக்கோட்டை மேனுவல் பாகம் 1 ல் தானவ நாடானது கள்ளர் நாடுகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. கள்ளர் நாடுகளில் ஒன்றாக வழுவாடி நாடும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Cambridge பல்கலைக்கழகம் வெளியிட்ட Hollow crown : Ethinohistory of an indian kingdom எனும் புத்தகத்தில் தானவ நாடு கள்ளர் நாடுகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அம்புக்கோயில் சிவன் கோயிலில் கிடைத்த கல்வெட்டு ” தானவநாட்டு நெடுவாசல் சீமைக்கு கர்த்தாவாக மாவலி வாணாதிராயர்” என்பவர் இருந்ததாக குறிப்பிடுகிறது. இன்றும் கள்ளர் குல வாணாதிராயர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
புதுக்கோட்டையில் ஆட்சி செய்த சிவந்தெழுந்த பல்லவராயர் காலத்தில் வெள்ளார்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் பல்லவராயரின் ஆணையை ஏற்று வல்ல நாடு, அம்பு நாடு, பாலைய நாடு, செங்கவளநாடு, பெருங்களூர் நாடு முதலிய பகுதிகளை சேர்ந்த கள்ளர்கள் பங்கேற்றதாக தேக்காட்டூர் ஒலைச்சுவடிகள் குறிப்பிடுகின்றன.
கிபி 1716 ஆம் ஆண்டை சேர்ந்த அறந்தாங்கி மன்னர் அருணாச்சல வணங்காமுடி தொண்டைமான் அவர்கள் திருப்பெருந்துறை கோயிலுக்கு தானவநாட்டை சேர்ந்த சில பகுதிகளை தானமாக அளித்ததை அறந்தாங்கி தொண்டைமான் செப்பேடு கூறுகிறது. அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்களின் வம்சத்தினராக தற்காலத்தில் பாலையவனம் ஜமீன்தார்கள் அறந்தாங்கியில் வசித்து வருகின்றனர். இவர்கள் கள்ளர் மரபினர் என புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று நூல் கூறுகிறது.
தானவ நாட்டில் அமைந்துள்ள சேந்தங்குடி ஜமீன் கள்ளர் மரபினை சேர்ந்தவர்கள் என பல வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
கிபி 1830ல் எழுதப்பட்ட தஞ்சை மராத்தியர்களின் மோடி ஆவணக்குறிப்பில் சோழ நாட்டில் கள்ளர் பாளையங்கள் உருவான வரலாறு பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்படி ” தஞ்சை மன்னர் பிரதாப் சிங்(1739-1763) காலத்தில் கள்ளர்கள் வாழும் பட்டுகோட்டை சீமையில் கள்ளர்களின் கிளர்ச்சியை தடுக்க அங்கு குதிரை சிப்பாய்களை நிறுத்தி வைத்திருந்தார். பட்டுக்கோட்டை சீமையை தாண்டி தஞ்சை சமஸ்தான எல்லை பரந்து இருந்ததால், கள்ளர்களை அழைத்து அவர்களோடு சுமூகமாக செல்ல பாளையங்களை ஏற்படுத்தினார். பாளையங்கள் ஏற்படுத்தப்பட்ட காலம் ( கிபி 1780-1790) காலக்கட்டம் ஆகும். அப்பகுதியில் இருந்த கள்ளர்கள் கத்தி வேலை( வாள் வீச்சு) அறிந்த வீரர்களாக இருந்துள்ளனர். இதன்மூலம் தஞ்சையில் இருந்த 13 பாளையங்களும் ஆதியில் கள்ளர் பாளையங்கள் என அறியலாம்.
(தஞ்சை மராத்தியர் மோடி ஆவணங்கள் Vol 1 page 159)l
கிபி 1883ல் எழுதப்பட்ட Manual of tanjore in madras presidency எனும் நூலில் தஞ்சையில் இருந்த 13 ஜமீன்களில் கோனூர் ஜமீன் தவிர மற்ற அனைத்தும் கள்ளர்களின் வசம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பன்னிரண்டு கள்ளர் ஜமீன்களில் சேந்தங்குடி ஜமீனும் ஒன்றாகும்.(Manual of tanjore in madras presidency pg 682)
கிபி 1906 ஆம் ஆண்டு எழுதப்பட்ட Tanjore gazetter எனும் நூலில் பக்கம் 193 ல் தஞ்சையில் உள்ள ஜமீன்கள் அனைத்தும் கள்ளர் மற்றும் மறவர் பிரிவினை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிபி 1923 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ” கள்ளர் சரித்திரம்” எனும் நூலில் தஞ்சையில் உள்ள பதிமூன்று ஜமீன்களில் பதினொரு ஜமீன்கள் கள்ளர் மரபினர் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதினொரு கள்ளர் ஜமீன்களில் சேந்தங்குடியும் ஒன்றாகும். மீதமுள்ள இரண்டு ஜமீன்களில் அத்திவெட்டி ஜமீன் முக்குலத்தோர் மறவர் பிரிவை சார்ந்தவர்களிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
” தமிழக வரலாற்றில் சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு” எனும் நூலில் சேந்தங்குடி ஜமீன்கள் பற்றிய பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. இந்த நூலினை எழுதியவரே சேந்தங்குடி ஜமீன்கள் வழிவந்த திரு சே.சி.கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் உள்ள தகவல்களை காண்போம்.
சேந்தங்குடி பாளையக்காரர்களின் முன்னோரான வீராத்தேவன் என்பவர் குளமங்கலம் எனும் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். வீராத்தேவன் கொள்ளை நோயால் இறந்து போனபின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து கர்ப்பவதியான வீராத்தேவனின் மனைவி பொன்னம்மாள் அங்கிருந்து அகன்று அரசர்குளம் எனும் பகுதியில் தஞ்சம் புகுந்தார்.
இந்த காலகட்டத்தில் அரசர்குளம் பகுதியை ஆட்சி செய்தவர் அழகிய மணவாளத் தொண்டைமான் ஆவார். இவரது அரண்மனையில் பொன்னம்மாள் தஞ்சம் பெற்று வாழத் தொடங்கினாள். பொன்னம்மாளுக்கு அழகான ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு விஜயத்தேவன் என பெயரிட்டனர். விஜய தேவன் போர்க்கலைகளை கற்று வீரராக திகழ்ந்தார்.
இந்த காலகட்டத்தில் அரசர்குளத்தின் அரசர் அழகிய மணவாளத் தொண்டைமான் பாலையவனம் பகுதிக்கு வேட்டைக்குச் சென்றபோது பட்டுக்கோட்டையில் ஆட்சி செய்து வந்த பட்டு மழவராயன் மற்றும் வீராச்சாமி மழவராயர் முதலிய கள்ளர் குல வீரர்கள் அரசர்குளத்தின் மீது படையெடுத்து தாக்கினார். இது குறித்து குறிப்பிடும் செய்யுள் வரிகள் பின்வருமாறு:-
அரசர் ஊரில் இல்லாத இந்த நிலையிலும் விஜயதேவன் மழவராயர்களை எதிர்த்து வீரத்துடன் சண்டையிட்டுள்ளார். இறுதியில் மழவராயர்களிடம் இருந்து அரசர்குளம் காக்கப்பட்டது. இந்த செய்தியை அறிந்த அழகிய மணவாளத் தொண்டைமான் மகிழ்வுற்று, விஜயத்தேவனின் வீரத்தை பாராட்டினார். தமது ஆட்சிப் பகுதியில் இருந்த சேந்தங்குடி, கீரமங்கலம், குளமங்கலம்,பனங்குளம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு முதலிய பகுதிகளை ஒன்றிணைத்து புதிதாக சேந்தங்குடி பாளையத்தை உருவாக்கி விஜயத்தேவனுக்கு பரிசளித்தார். இந்த நிகழ்வு நடந்தது கிபி 1486 ஆம் ஆண்டாகும்.
விஜயத்தேவன் தனது சகோதரர்களுக்கு ஆலங்காடு, சூரன்விடுதி, கீழாத்தூர் முதலிய ஊர்களில் இருந்த கள்ளர்
குல தொண்டைமான் குடும்பங்களில் பெண் எடுத்துள்ளார். இவ்வூர்கள் ஆலங்குடி நாடு எனும் கள்ளர் நாட்டை சேர்ந்த கிராமங்களாக இன்றும் திகழ்கின்றன.
மாவீரர் விஜயத்தேவன் கள்ளர் குல மழவராயர் பிரிவில் உதித்த இராசம்மாள் என்பவரை திருமணம் செய்தார். இதை குறிப்பிடும் செய்யுள் வரிகளாக ” இந்திரக்குலக் கள்ளர் மழவராயர் இளங்கன்னி இராசம்மாள் இவ்விரண்டு சுந்தரவதனத்தார்” அமைந்துள்ளது.
கிபி பதினேழாம் நூற்றாண்டில் சேந்தங்குடி பாளையக்காரர் வழுவாட்டித் தேவன் என்பவர் ராமநாதபுரம் மன்னர் சேதுபதியுடன் போரிட்டதாகவும் அச்சமயத்தில் ஆலங்காடு, கீழாத்தூர் மற்றும் சூரன்விடுதி தொண்டைமான்கள் வழுவாட்டியாருக்கு ஆதரவாக போரிட்டதாக சேந்தங்குடி ஜமீன் வரலாற்று செய்யுள் குறிப்பிடுகிறது.
” இடியேறாலங்காட்டு வீராத் தொண்டைமான் கீழாத்தூர் ராமனோடு வெற்றிவீரன் கிழத்து சூரன்விடுதி முத்து தொண்டைமான் “
சேந்தங்குடி பாளையக்காரர்களோடு திருமண உறவு கொண்ட சூரன்விடுதி, ஆலங்காடு மற்றும் கீழாத்தூர் தொண்டைமான்கள் இன்றும் குளமங்கலம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.(பக் 88)
சேந்தங்குடியின் பதிமூன்றாவது ஜமீன் முத்துக்குமார் வணங்காமுடி வழுவாட்டியார் பழனியை சேர்ந்த வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் குல பெண்களை திருமணம் செய்துள்ளனர்.(பக் 127)
பாலையவனம் ஜமீன், கல்லாக்கோட்டை ஜமீன் மற்றும் சேந்தங்குடி ஜமீன் முதலியவை திருமண உறவில் இணைந்து இருந்தன.
கிட்டத்தட்ட பதினைந்து பாளையக்காரர்கள் சேந்தங்குடி ஜமீனை ஆட்சி செய்துள்ளனர். சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு எனும் நூலில் பக்கம் 126 ல் சேந்தங்குடியின் தற்போதைய ஜமீன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
” சேந்தன்குடி ஜமீன் வழி வழி வந்தவர்கள் கள்ளர்கள்”. இவர்களுக்கு கள்ளர் இன பெண்களையே ஆதியில் ஆலங்காடு, சூரன்விடுதி, கீழாத்தூர் தொண்டைமான் பெண்களையும், பனங்குளம் மழவராயர் குடும்பங்களில் எடுத்து வந்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
இன்றும் சேந்தங்குடி ஜமீனின் உறவினர்கள் தானவ நாட்டில் சீரும் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
Total views 2,348 , Views today 2