நடிப்பின் உலகம்,
பாவனைகளின் அரசன்,
உச்சரிப்பின் அரக்கன்,
எல்லா தலைமுறையும்
வியக்கும் பெரும் பிரபஞ்சம்
நடிகர் திலகம் அவர்கள்…
நடிப்பு என்ற சொல்லுக்கு முழுப்பொருளே சிவாஜி கணேசன்தான்… கலைஞரின் வசனத்தில் உருவான
பராசக்தி’ வெளியான நாளில் இருந்து, தன் பராக்கிரம நடிப்பால், சக்திமிக்க திறமையால் மொத்த சினிமாவையும் தன் பக்கம் ஈர்த்தவர் சிவாஜி.
நடிகர் திலகத்தைப் பற்றி வெறும் வார்த்தைகளுக்குள்ளோ, கட்டுரைகளுக்குள்ளோ அடக்கிட முடியாது.
வீரபாண்டிய கட்டபொம்மனில் இருந்து அனைத்து தலைவர்களையும் நம் கண்முன்னே உயிரோட்டமாய் காட்டியவர் சிவாஜி தான். அதேபோல சிவபெருமான் முதல் சேக்கிழார் வரை கடவுள்களையும், சமண சமய புலவர்களையும் கண்முன் நிறுத்திய பெருமை சிவாஜியையே சேரும்.
அவருடைய பழைய படங்கள் அதிகம் பார்த்தில்லை, 90’காலங்களில் ஒன்ஸ்மோர், படையப்பா, என்ஆச ராசாவே உள்ளிட்ட பல படங்களை இந்த கொரோனா காலத்தில்தான் பார்க்கமுடிந்தது.
“என் ஆசராசாவே” படத்தில் கதையின் உயிரே சிவாஜிதான்.. அந்த படத்தில் சிவாஜி பற்றி கஸ்தூரிராஜா ஒரு பேட்டியில், “சிவாஜி அய்யா அந்த படத்தை ஒப்புக்கொண்ட சமயம், உடல்நிலை சற்று சரியில்லாமல் இருந்தது, மருத்தவர் அவரை கட்டாய ஓய்வு எடுக்க சொல்லியும், படத்தை ஒப்புக்கொண்ட ஒரே காரணத்துக்காக நடித்தும் கொடுத்தார். அந்த அளவிற்கு நடிப்பை நேசித்த உயர்ந்த மனிதன் அவர். ஷூட்டிங்க்கு அவரை கைத்தாங்கலாகத்தான் கூட்டிவருவோம், சலங்கையை கட்டி ஆடும் சீனிலெல்லாம் சிங்கத்தின் தோரணையோடு பின்னி பெடலெடுப்பார், வயதானாலும் சிங்கம் சிங்கம் தான்” என குறிப்பிட்டிருக்கிறார்.
உண்மையாகவே அந்த படத்தை யார் பார்த்தாலும் விழியோரம் நம்மையறியாமலே நீர் கசியும்..
மகனாய் முரளி நடித்திருப்பார். அவரை தூங்க வைக்க ஒரு தாலாட்டு பாடுவார் பாருங்க,
“தெக்கு தெசக் காத்து
தேடி வந்து வீச
பத்து வகப் பாட்டு
நானெடுத்துப் பாட
என் மடியில் நீ உறங்கு
உன் அலுப்பு தீரும் வர
உம் மடியில் நான் இருப்பேன்
என் வாழ்க்க தீரும் வர..”
அப்டியே கண்ணெல்லாம் கலங்கிடும் எனக்கு இப்பவும்.
அந்த படம் முழுக்க முழுக்க நான் ரசித்தது சிவாஜி அய்யாவ மட்டும்தான்..
கலையை நேசிக்கும் மாமனிதன் என்பதை அந்த படத்தின் மூலம் சொல்லிவிட்டுதான் போயிருக்கார்..
மகாநதி சங்கர், சிவாஜியை கத்தியால் குத்துவதற்கு முன்னால் சொல்லுவார், “மத்தவங்களுக்கெல்லாம் சலங்கை கட்டினால் கால் மட்டும்தான் ஆடுமாம், ஆனா இவருக்கு நாடி, நரம்பு, ரத்தம்ன்னு உடம்பே சேர்ந்து ஆடுமாமேன்னு சொல்லி குத்துவார்.
அதேபோல, திருவிழாவில் நாதஸ்வரமும் மேளமும் ஒலிக்க ஒலிக்க தன் கை கால் தலை எல்லாம் முறுக்கிக்கொண்டு கட்டிலில் உதறுவார். ராதிகா சலங்கையை கட்டியதும் வீறுகொண்டு எழுந்து காலை விரைத்துக் கொண்டு ஒவ்வொரு அடியாய் எடுத்துவைப்பார். பார்க்கும் நமக்கே சிலிர்க்கும் அந்த நிமிடம்..
தன்கடைசி மூச்சு இருக்கும்வரை கலைப்பெயரை காப்பாற்றுவேன் என வினுச்சக்கரவர்த்தியிடம் சொன்ன சபதத்தை நிறைவேற்ற, கத்திக்குத்திய காயத்தோடு ஆடுவாரே பாருங்க ஒரு ஆட்டம், அப்பப்பா… வெறிகொண்ட வேங்கை சீறிசீறி ஆக்ரோசம் காட்டுவதுபோல…
மலேசியா வாசுதேவனின் குரலா இல்லை சிவாஜியின் குரலா என கண்டேபிடிக்க முடியாத அளவிற்கு உச்சரிப்பாய் பாட்டு பாடிக்கொண்டே ஆடுவார்..
“கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்ன
அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல
சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம்
என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே..”
தேவாவின் இசை பயங்கர பக்கபலம்..
கண்களை சுற்றிக்கொண்டே, தலையிலுள்ள கரகத்தோடு அகல ஆடுவார் ஆக்ரோமாய். கரகம் விழும்சமயம் முரளி வந்து ஏந்தி அடுத்த சரணத்தை ஆரம்பிப்பார், அப்போது ஒருபாவனை சிவாஜி முகத்தில்..
பாடலின் இடையிலே எழுந்துபோய் ஆடுவார் ஒரு ஆட்டம், அடைக்கமுடியாத காட்டாற்று வெள்ளம் எப்படி சுழன்று சுழன்று வீசுமோ அதேபோல்… இந்த படத்தை முழுசாய் பார்த்தபின் எவராலும் கண்ணீர் துளிகளை சிந்தாமல் இருக்கமுடியாது.. சிவாஜிக்காகவே பலமுறை பார்த்து அழுதிருக்கிறேன் பைத்தியமாய்..
சிவாஜி போல நடிக்க அவரே மீண்டும் பிறந்துவந்தால்தான் சாத்தியம், இப்பேர்பட்ட மனிதனுக்கு தேசியவிருதுகூட வழங்காதது மிகவும் கவலைக்குரிய விசயம்தான். ஆனால்என்ன, இன்றளவிலும் மக்கள் மனதில் தேசிய விருதையும் தாண்டி வாழ்க்கிறார் அய்யா சிவாஜி கணேசன்..
சிவாஜி… 20ம் நூற்றாண்டின் அதிசயம். 21ம் நூற்றாண்டிலும் தொடர்கிற ஆச்சரியம். எத்தனை நூற்றாண்டுகளானாலும் சரித்திரம்…
இது மக்கள் அவருக்கு தந்த உயரிய விருது, இந்த விருதுகளுக்கு முன்னால் தேசியவிருதுகள் எல்லாம் போலிதான்..
இப்போதுமட்டும் சிவாஜி இருந்திருந்தால் எப்பாடுபட்டாவது சந்தித்து அவரை ஒருமுறை தொட்டுப் பார்த்திருப்பேன்.. காலம் கடந்தும் வாழும் சாதனை சரித்திரம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளில் வணங்கி மகிழ்கிறேன்…
நன்றி:- வானதி வெண்ணிலா
Total views 1,517 , Views today 1