கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் ஆட்சி காலத்தில் மதுரையில் ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னர்களுக்கு இடையே வாரிசுரிமை போர் ஏற்பட்டது. மதுரையில் அச்சமயம் ஆண்டு கொண்டிருந்த பராக்கிரம பாண்டியன் என்பவனை அவனுடைய தாயாதியான குலசேகர பாண்டியன் தாக்கி மதுரையைக் கைப்பற்றிக் கொண்டு பராக்கிரம பாண்டியனையும் கொன்றுவிட்டான். அங்கிருந்த தப்பி ஓடிய பராக்கிரம பாண்டியனின் மகனான வீர பாண்டியன் இலங்கை மன்னனான பராக்கிரம பாகுவிடன் உதவி கோரினான். இதை ஏற்று இலங்காபுரித் தண்டநாயகனின் தலைமையில் ஒரு படையை பாண்டி நாட்டிற்கு இலங்கை மன்னன் அனுப்பினான். இந்தப் படை பாண்டி நாட்டில் புகுந்து பல அழிவுகளை ஏற்படுத்தி மதுரையைத் தாக்கி குலசேகரனை அங்கிருந்து விரட்டியது. பிறகு குலசேகர பாண்டியன் சோழ மன்னனிடம் உதவி கோரினான். பாண்டிய நாட்டில் இலங்கைப் படைகள் ஏற்படுத்திய அழிவுகளைக் கேள்விப்பட்டிருந்த ராஜாதிராஜன் திருச்சிற்றம்பலமுடையான் பெருமாள் நம்பிப் பல்லவராயன் தலைமையில் ஒரு படையை பாண்டிய நாட்டிற்கு அனுப்பினான்.
பராக்கிரம பாண்டியனின் மகனான வீரப்பாண்டியனுக்கு உதவ ஜகத் விஜயத் தண்டநாயகன் தலைமையில் சிங்கள துணைப்படை பாண்டிய நாடு வந்தது. இவ்விரு படைத்தலைவர்களுக்கும் பல்லவராயன் தலைமையில் இருந்த சோழப்படைகளுக்கும் இடையே தொண்டி, பாசிப்பட்டணம் ஆகிய இடங்களில் கடும் போர்கள் நடைபெற்றன. இறுதியில் சோழப்படைகள் பெரு வெற்றி பெற்றன. பல்லவராயன் இலங்கைத் தண்டநாயகர்கள் இருவரையும் கொன்று அவர்களின் தலையை மதுரைக் கோட்டை வாசலில் நட்டுவைத்தான். அரசையும் குலசேகர பாண்டியனுக்கு அளித்தான். இவ்வெற்றியை குறிக்கும் விதமாக புதுக்கோட்டையை ஆட்சி செய்த பல்லவராய மரபினர் தங்களை ” பாண்டியன் முடிகாத்தான்” என கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்.( க.வெ IPS 752)
இத்தகைய பெருமை மிகுந்த பெருமா நம்பி பல்லவராயரின் குடும்பத்தை சேர்ந்த வெங்கடாசல பல்லவராயர் என்பவர் கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவருடன் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து வந்து புதுக்கோட்டையில் குடியேறினார். புதுக்கோட்டையின் தெற்கு பகுதியில் குடியேறிய இவர்கள் பிறகு வடக்கு நோக்கி நகர்ந்து பெருங்களூர், அம்புக்கோயில் முதலிய இடங்களில் குடிபெயர்ந்தனர்.

கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் புதுக்கோட்டையை ஆட்சி செய்யத் தொடங்கிய பல்லவராயர்கள் கிபி 1686 வரை ஆண்டு வந்தனர்.
இத்தகைய பெருமை மிகுந்த புதுக்கோட்டை பல்லவராயர் மரபில் மிகவும் பலம் வாய்ந்தவராக சிவந்தெழுந்த திருமலைராச பல்லவராயர் குறிப்பிடப்படுகிறார். கிபி 1539 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை திருவரங்குளம் கல்வெட்டில் இவரது புகழ்மொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கோனேரிராச பல்லவராயரின் மகனான சிவந்தெழுந்த திருமலைராச பல்லவராயர் “ பாண்டியன் முடிகாத்தான்” , சாளுவமானங்காத்தான், அடைக்கலங்காத்தான், பகைமதியாதான் உள்ளிட்ட பல்வேறு புகழ்மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவரது முன்னோர்கள் பாண்டியர்களுக்கு செய்த உதவியின் விளைவாக “ பாண்டியன் முடிகாத்தான்” எனும் பட்டம் சூட்டிக்கொண்டனர். இவர்களின் நேரடி வழிவந்த சிவந்தெழுந்த திருமலைராச பல்லவராயரும் இதே பட்டத்தை சூட்டிக்கொண்டுள்ளார். மதுரை விசுவநாத நாயக்கரின் பிரதிநியான ஈரப்ப நாயக்கனுக்கு சிவந்தெழுந்த பல்லவராயர் அளித்த போர் உதவியின் காரணமாக இவருக்கு நிலங்கள் அளிக்கப்பட்டதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவரது புகழ்மொழியான “ சாளுவ மானங்காத்தான் “ இந்த நிகழ்வோடு தொடர்புடையதாக இருக்கலாம்.
குடுமியான்மலை சிவன் கோயிலில் அமைந்துள்ள கற்பகிரகம் , அர்த்த மண்டபம் முதலியவை சிவந்தெழுந்த திருமலைராச பல்லவராயர் காலத்தில் கட்டப்பட்டதாக புதுக்கோட்டை வரலாற்று சரிதம் குறிப்பிடுகிறது. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவந்தெழுந்த பல்லவராயர் பற்றி குறிப்பிடும் சிவந்தெழுந்த பல்லவராயர் உலா இவரது முன்னோர்களில் ஒருவர் குடுமியான்மலையில் ஆயிரங்கால் மண்டபம், கற்பகிரகம், பாரசங்கிலி மண்டபம் முதலிய பகுதிகளை கட்டியதாக குறிப்பிடுகிறது.

சிவந்தெழுந்த திருமலைராச பல்லவராயரின் கல்வெட்டில் “ பாரசங்கிலி இட்டான்” என பல்லவராயர் பாராட்டப்படுகிறார். புதுக்கோட்டை குடுமியான்மலையில் அமைந்துள்ள கற்பக கிரகத்தின் பின்புறம் சிவந்தெழுந்த திருமலை ராச பல்லவராயரின் சிலை அமைந்துள்ளதாக புதுக்கோட்டை சரிதம் குறிப்பிடுகிறது.
சிவந்தெழுந்த திருமலைராச பல்லவராயர் தான் பிறந்த மார்கழி- ரேவதி நாளில் திருவரங்குளம் கோயிலுக்கு “ பல்லவன் சந்தியாக” கொடைகள் அளித்துள்ளார். புதுக்கோட்டை பல்லவராயர்கள் தங்களது பிறந்தநாளில் பல்லவன் சந்தி மற்றும் பல்லவன் திருநாள் என தங்களது பெயரில் கோயில்களில் விழா எடுத்துள்ளதை புதுக்கோட்டை வரலாறு குறிப்பிடுகிறது.

புதுக்கோட்டையை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த பல்லவராயர்கள் கள்ளர் மரபினர் என Manual of pudukkottai state vol2 part 1 பக் 581 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
Article by : www.sambattiyar.com
Total views 826 , Views today 1