போர்க்குடியில் உதித்த கலைஞானி:-தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இசை அரங்குகளில் தெலுங்கு மொழி ஆதிக்கம் செலுத்திய போது, நாடக மேடைகளில் தமிழ் மொழியை சிங்கமென ஒலிக்கச் செய்தவர். நாடகத் தமிழை வளர்த்த தந்தை, தமிழ் நாடகப் பேராசிரியர் என தமிழ் சான்றோர்களால் போற்றப்படும் சங்கரதாஸ் ஸ்வாமிகள் கிபி 1867 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தூத்துக்குடி காட்டுநாயக்கன்பட்டியி எனும் ஊரில் வெள்ளையத்தேவன் பரம்பரையில் வீர மறவர் குடியில் தாமோதர பிள்ளை- பேச்சியம்மாள் தம்பதியருக்கு  திருமகனாய் உதித்தார்.

தமிழ் கல்வியில் சிறந்து விளங்கியதால் “ராமாயணப் புலவர்” என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட,  தாமோதர பிள்ளை தனது மகனான சங்கரதாஸ் ஸ்வாமிகளுக்கு முத்தமிழையும் ஊட்டி வளர்த்தார்.

புலவரேறு” என போற்றப்பட்ட பழனி தண்டபானி சுவாமிகளிடம் தமிழ் கல்வியை பயின்றார் சங்கரதாஸ் சுவாமிகள்.

தூத்துக்குடி உப்பு பண்டக சாலையில் சிறுது காலம் கணக்கராக பணிபுரிந்த சங்கரதாஸ் தனது 24வது வயதில் நாடகத்துறையில் நுழைந்தார்.

திருவாளர் சுவாமி நாயுடு அவர்களினு நாடக சபையில் நாடக ஆசிரியராக சில காலம் பணிபுரிந்தார். நாடக நுணுக்கங்களையும்,  நீதிகளையும் விளக்கும் சூத்திரதாராக சங்கரதாஸ் அவர்களின் பேச்சை கேட்க மக்கள் பெருமளவு கூடுவது வழக்கமாக இருந்துள்ளது.

சிறிது காலத்தில் வாழ்வின் அர்த்தத்தை தேடி,  முருகப் பெருமான் மீது கொண்ட பக்தியால் ஆண்டிக்கோலம் பூண்டு தீர்த்த யாத்திரைகள் செய்ய தொடங்கினார்.

மாமுன்டியா பிள்ளை

தீர்த்த யாத்திரைகள் முடிந்த பின் சங்கரதாஸ் சுவாமிகள் சிறிது காலம் புதுக்கோட்டை வித்துவான் மான்பூன்டியா பிள்ளை என்பவருடன் தங்கியிருந்தார். ” கஞ்சிரா” எனும் இசைக்கருவியை முதன்முதலாக கண்டுபிடித்தவர் இவரே.  தேவரின கள்ளர் சமூகத்தவரான மான்பூன்டியா பிள்ளை,   சங்கரதாஸ் சுவாமிகளின் சொற்சிலம்பங்கள் கையாளும் திறமைகளைக் கண்டு வியந்து அவரை தனது புத்ரராக ஏற்றுக்கொண்டார்.

சங்கரதாஸ் சுவாமிகளை சந்தங்கள் பாடச் சொல்லி அதற்கேற்ப கஞ்சிரா வாசித்து மாமுன்டியா அவர்களை களிப்பபடைவது வழக்கம். இந்த காலகட்டத்தில் மிருதங்க வித்துவான்களான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி மற்றும் பழனி முத்தையா பிள்ளை ஆகியோர் மாமுன்டியா அவர்களிடம் மாணவர்களாக இருந்தனர்.

மாமுன்டியா பிள்ளை அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,  சங்கரதாஸ் சுவாமிகள் மீண்டும் நாடகத்துறையில் நுழைந்து பணியாற்றினார். நாடக பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் ” மனோகரன்” நாடகத்திற்கு சுவாமிகள் பாடல்களை இயற்றினார். சங்கரதாஸ் அவர்களின் பயிற்சியில் பல்வேறு திறமையான நாடக நடிகர் நடிகைகள் உருவாயினர்.

சமரச சன்மார்க்க நாடக சபை எனும் பெயரில் சங்கரதாஸ் சுவாமிகள் சொந்தமாக நாடக சபையை தொடங்கினார். இந்த நாடகக் குழு மூலம் பல புகழ்பெற்ற நடிகர்கள் உருவாக்கப்பட்டனர்.

பாடல்கள் மட்டுமே பாடப்பட்டு வந்த நாடக உலகில்,  உரையாடல்கள் மூலம் நடிக்கும் முறையையும் பல புதிய நாடகங்களையும் உருவாக்கினார் சங்கரதாஸ் சுவாமிகள்.

புகழ்பெற்ற நாடகங்களான வள்ளித் திருமணம் பவளக்கொடி, அல்லி அர்ஜூனா, சீமந்தனி, சதியனுசூயா, மணி மேகலை, சாவித்திரி, சதி சுலோசனா, பிரகலாதன், சிறுத்தொண்டர்,பிரபுலிங்கலீலை,பார்வதி கல்யாணம்,  வீர அபிமன்யு முதலியவை சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும். இவற்றில் வள்ளித் திருமணம் நாடகத்தை அறியாதவரை காண்பது அரிது.

ஓரு சமயம் இராமநாதபுர மன்னர் சேதுபதியின் காரியதரிசி சங்கரதாஸ் சுவாமிகளை சந்தித்து ” இராமநாதபுர மன்னரை புகழ்ந்து அனைத்து புலவர்களும் பாடுகின்றனர்,  நீங்களும் பாடினால் உங்களுக்கு கனகாபிஷேகம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதைக்கேட்டு கோபம் அடைந்த சுவாமிகள், நானு தெய்வத்தை தவிர வேறு யாரையும் புகழ்ந்து பாடுவதில்லை,  நானும் மறவன் சேதுபதியும் மறவன் , நான் அவரைவிட எந்த வகையில் குறைந்து விட்டேன் என கடைசிவரை மன்னரை புகழ்ந்து பாட மறுத்துவிட்டார்.  சுவாமிகள் தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்துள்ளார்.

சுவாமியின் பாடல்களை திரட்டி அச்சிட சில அச்சகத்தார் சுவாமியிடம் அனுமதி கேட்டபோது” எனது பாடல்களை இலவசமாக வெளியிடுவதாயின் அச்சிடுங்கள், தமிழை விற்க யாருக்கும் உரிமையில்லை” என கூறிவிட்டார்.

1921 ஆம் ஆண்டு சங்கரதாஸ் சுவாமிகள் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடியில் சிகிச்சை பெறத் தொடங்கினார்.  இந்த நிலையிலும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாரே தனது நாடகப் பணிகளை தொடர்ந்தார் சுவாமிகள்.

பல்வேறு நாடக பாணிகளையும், பல புகழ்பெற்ற நாடக கலைஞர்களையும் உருவாக்கிய சங்கரதாஸ் சுவாமிகள் 1922 ஆம் ஆண்டு நவம்பர் பதிமூன்றாம் தேதி உயிரிழந்தார்.

சங்கரதாஸ் சுவாமிகள் தனது வாழ்நாளில் மொத்தம் 40 நாடகங்களை இயற்றியுள்ளார். யாழ்பான தமிழ் சங்கம் இலங்கையில் நடத்திய கூட்டத்தில் பங்கேற்று வலம்புரி சங்கை பரிசாக பெற்றார்.

1967 ஆம் ஆண்டு சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு,  நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட்டது. 1968 ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் திடலின் நுழைவாயிலில் சங்கரதாஸ் சுவாமிகளின் சிலை அமைக்கப்பட்டது.

  மதுரை தமுக்கம் திடலில் உள்ள நாடக அரங்கிற்கு தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கம் எனப் பெயரிடப்பட்டு உள்ளது. மதுரை ஒப்பனைக்காரத் தெருவில் இயங்கிவரும் நாடகக் கலைஞர்கள் சங்கத்திற்கும் சங்கரதாசரின் பெயர் இடப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகத்துறைக்கு தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைத் துறை எனப் பெயரிடப்பட்டு உள்ளது.

2009 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் வீ. அரசு தற்பொழுது கிடைக்கக்கூடிய 18 பனுவல்களையும் தொகுத்துள்ளார். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு – பதினெட்டுப் பனுவல்கள் என்ற பெயரில் புதுச்சேரியைச் சார்ந்த வல்லினம் பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.

தமிழ் நாடகத்துறையின் முன்னோடிகளில் ஒருவராகவும், தமிழ் நாடக பேராசிரியராகவும் செயல்பட்டு முத்தமிழுக்கும் பெருமை சேர்த்த சங்கரதாஸ் சுவாமிகளின் புகழ் தமிழுள்ளவரை நிலைத்திருக்கும்..

(தகவல்கள்: தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்: டி கே சண்முகம்)

நன்றி: விஜய்பாண்டியன் செயங்கொண்டார்

தொகுப்பு: www.sambattiyar.com

Total views 2,897 , Views today 1 

Author: admin

2 thoughts on “போர்க்குடியில் உதித்த கலைஞானி:-தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *