பூலோக வைகுண்டமான ” ஸ்ரீரங்கம்” வரலாறு

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் முதன்மையானமதுமான ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம், தென்னரங்கம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஆசியாவிலேயே உயரமான கோபுரமாக ஸ்ரீரங்கத்தின் ராஜகோபுரம் அமைந்துள்ளது. இதன் உயரம் 236 அடியாகும். 500 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணதேவராயரால் அடிக்கல் நாட்டப்பட்டு முற்று பெறாமல் இருந்த கோபுரம் கிபி 1987 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்களும், இராமானுஜர் உட்பட பல வைணவ ஆசாரியார்களும் மனமுருகி வணங்கிய தலம் திருவரங்கமாகும்.

திருவரங்கத்தின் பெருமையை உணர்ந்த இராமனுஜர் திருவரங்கத்தின் மண் புழுதியை தன் தலையில் இட்டுக்கொண்டாராம்.

8 திருச்சுற்றுகளும் 21 கோபுரங்களும் 51 சுற்று சன்னதிகளும் கொண்டு இத்தலம் புகழ் பெற்று விளங்குகிறது.

“நீலமேகம் நெடும்பொற் குன்றத்துப் பால்விரிந்தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளிப் பரர்தொழுத தேத்த விரிதிரைக் காவிரி வியனுபெருந் துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்” எனும் சிலப்பதிகாரத்தின் வரிகள் காவிரியின் கரையில் திருவரங்க பெருமான் பாம்பணையிலொ பள்ளிக்கொண்டு இருந்ததை குறிப்பிடுகிறது.

“பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல” எனும் அகநானூற்று பாடல் சங்க காலத்தில் திருவரங்கத்தில் நடந்த பங்குனி உத்திர திருவிழா பற்றி குறிப்பிடுகிறது.

8-வது திருச்சுற்று அடையவளஞ்சான் வீதயை கொண்டது. இந்த சுற்றில்தான் ராஜகோபுரம் அமைந்துள்ளது.இங்குள்ள ஆண்டாள் சன்னதி வல்லபதேவ பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.

7வது திருச்சுற்றில் சித்திரை வீதி அமைந்துள்ளது.- இங்கு கூரத்தாழ்வார் திருமாளிகை மற்றும் பெரியநம்பி திருமாளிகை அமைந்துள்ளது.

6 வது திருச்சுற்று விக்ரம் சோழனால் கட்டப்பட்டது. இங்குள்ள வீதி விக்ரம சோழன் திருவீதி என்றழைக்கப்படுகிறது. பூபதி திருநாள் இங்கு நடைபெறுகிறது- மணவாள மாமுனிகள் சன்னதி இச்சுற்றில் அமைந்துள்ளது.

5வது திருச்சுற்றில் நான்முகன் கோபுர வாசல் அமைந்துள்து. யானையேறும் மண்டபம்,ஆண்டாள் சன்னதி, நாதமுனிகள் சன்னதி கூரத்தாழ்வார் /பொடியாழ்வார்/திருப்பாணாழ்வார்/ சக்கரத்தாழ்வார் முதலியோர் சன்னதிகள், சேசகிரியார் மண்டபம்,இராமானுசர் சன்னதி அருங்காட்சியகம் அகளங்கண் திருவீதி/ ஆயிரங்கால் மண்டபம்/தாயார் சன்னதி/வெள்ளைக்கோபுரம் முதலியவை இச்சுற்றில் உள்ளன.

4வது திருச்சுற்று ஆலிநாடன் திருச்சுற்று என்றழைக்கப்படுகிறது. கிபி 7 ஆம் நூற்றாண்டில். திருமங்கை ஆழ்வாரால் கட்டப்பட்டது.இச்சுற்றில் கார்த்திகை கோபுரம்/ கருடாழ்வார் / சடகோபர் / நம்மாழ்வார்/ மதுரகவி ஆழ்வார்/ திருமங்கை ஆழ்வார்/செங்கமல நாச்சியார்/ முதலாழ்வார்கள் /திருமிழிசை ஆழ்வார் முதலியோர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள கோதண்டராமர் சன்னதி சோழேந்திர சிம்மனால் கட்டப்பட்டது.
3வது திருச்சுற்று குலசேகர ஆழ்வாரால் கட்டப்பட்டது. இங்கு குலசேகரன் திருவீதி அமைந்துள்ளது. இங்கு பொன்தகடால் வேயப்பட்ட கொடிமரம் உள்ளது. இச்சுற்றின் வடக்கு வாயிலாக பரமபத வாசல் உள்ளது. இச்சுற்றின் நுழைவாயில் ஆரியபடாள் வாசல் என அழைக்கப்படுகிறது.

2வது திருச்சுற்று ராஜமகேந்திர சோழனால் கட்டப்பட்டதால் ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று என அழைக்கப்படுகிறது.இச்சுற்றின் நுழைவாயில் நாளிகை கேட்டான் வாயில் என அழைக்கப்படுகிறது. இச்சுற்றில் கருவூலம்/யாகசாலை-/விஜயரங்க சொக்கநாத நாயக்கர் சிலை/பங்காரு திருமலை சிலை/தொண்டைமான் குறடு எனும் மண்டபம் / பஞ்சுக்கொண்டான் திருவாசல்/சேனைமுதலியார் சன்னதி/ சேரகுலவள்ளி நாச்சியார் சன்னதி/சுரானி துலுக்க நாச்சியார் சித்திரம் முதலியவை உள்ளன.

முதலாம் திருச்சுற்று தர்ம வர்மா சுற்று என அழைக்கப்படுகிறது. இங்கு ஐந்து தலை கொண்ட ஆதிசேசனில் படுத்த நிலையில் திருமால் உள்ளார். அரங்கநாதர் சிலை ஸ்ரீதேவி பூதேவி முதலியோருடன் உள்ளது.

மன்னர்களும் திருவரங்கமும்

👉 இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பவித்ர உற்சவ மண்டபம் குலசேகர அழ்வாரால் கட்டப்பட்டது.
👉 குலசேகர பெருமான் மூன்றாம் பிரகாரத்தில் சேனைவென்றான் கோபுரத்தை எழுப்பி அந்த பிரகாரம் முழுவதும் சீர்படுத்தினான். இந்த பிரகாரம் குலசேகரன் திருச்சுற்று என அழைக்கப்படுகிறது.
👉 இரண்டாம் பிரகாரமான இராஜ மகேந்திரன் திருச்சுற்றில் வடகிழக்கில் ஒரு மணி மண்டபமும், நான்காம் திருச்சுற்றும் திருமங்கை ஆழ்வாரால் அமைக்கப்பட்டது. இந்த நான்காம் திருச்சுற்று ஆலிநாடன் திருச்சுற்று என அழைக்கப்படுகிறது.
👉 காவிரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கிப்போன திருவரங்கம் ஆலயம் கிளிகண்டசோழனால் நிர்மாணிக்ப்பட்டது. இவரது நினைவாக கிளி மண்டபம் அமைந்துள்ளது.
👉 இக்கோயில் கல்வெட்டுகளில் பழமையானது முதலாம் பராந்தக சோழனின் 17 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும். இம்மன்னன் ஸ்ரீரங்கத்துக்கு 51 பொற்காசுகளை அளித்துள்ளான். மூன்று இரவுகள் வேதம் ஒத தானங்களும் அளிக்கப்பட்டது.

👉 இரண்டாம் பிரகார வாசல் மற்றும் தெற்கு வாசல் கோபுரம் ராசமகேந்திர சோழனால் கட்டப்பட்டது.
👉திருமாமணி மண்டபம், திருமதில்கள் கோபுரங்கள் நந்தவனங்கள் நந்தசோழனால் அமைக்கப்பட்டது.
👉 அகளங்கன் எனும் விக்ரமசோழன் ஐந்தாம் திருச்சுற்றையும் அதில் மூன்று கோபுரங்களும், வடமேற்கு மூலையில் ஸ்ரீரங்க நாச்சியார் திருக்கோயிலும் ஆலிநாடன் திருச்சுற்றில் ஒரு பெரிய மண்டபமும் அதனுள் கருடாழ்வாரையும் பிரதிஷ்டை செய்தான்.
👉 பங்குனி மாத திருவிழாவின் போது திருவமுது செய்ய விக்ரம சோழனால் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது.

👉இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள உள்கோடை மண்டபம் விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது.
👉 இரண்டாம் பிரகாரத்தில் ஆர்யபடாள் வாசலுக்கு கிழக்கில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபம் சடையவர்மன் சுந்தரப்பாண்டிய தேவரால் கட்டப்பட்டது.
👉 கருடர் சன்னத்தியின் முன் உள்ள கருடர் மண்டபம் சுந்தரபாண்டிய தேவர் மன்னரால் கட்டப்பட்டது.
👉 சடையவர்மன் சுந்தரப்பாண்டிய தேவர் அழகிய மணவாளன் மண்டபத்தில் பொன் வேய்ந்த பெருமாள் என்ற விக்ரகத்தையும், பெரிய திருவடி நாயனார், சேரகுல வல்லி முதலிய விக்ரகங்களையும் எழுப்பினார்.இது தவிர ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பல்வேறு கொடைகளையும் இம்மன்னர் அருளினார்.
👉 ஓரு முறை சுந்தரப்பாண்டிய தேவர் திருவரங்க பெருமானை தரிசித்துக்கொண்டு இருந்தபோது , அச்சமயம் பெருமாளின் தீர்த்தத்தை அளிக்கும் பாத்திரத்தை காணாமல் அர்ச்சகர் திகைத்தார். இதைக்கண்ட பாண்டிய தேவர் தனது கிரீடத்தை எடுத்து கவிழ்த்து தீர்த்தத்தை ஏற்றுக்கொண்டதாக கோயிலொழுகு கூறுகிறது. இதன் நினைவாக இன்றும் சுந்தரப்பாண்டியன் பெயரால் சுந்தரப்பாண்டியம் பிடித்தேல்” எனும் அருள்பாடு இன்றும் வழக்கில் உள்ளது.
👉கிபி 13 ஆம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரப்பாண்டியன் மூன்றாம் பிரகாரத்திற்கு பொன் வேய்ந்தான்.

👉 முதலாம் சடையவர்மன் சுந்தரப்பாண்டியன் ஒரிசாவிலுள்ள கட்டா அரசணை வென்று அங்கிருந்து கொண்டு வந்த பொற்குவளைகள், மரகதமாலை, பொன் பாத்திரங்கள், பொற்கிரீடம் மற்றும் பல பொன் ஆபரணங்களை அரங்கனுக்கு அணிவித்து மகிழ்ந்தான்.

👉இம்மன்னன் காவிரி நதியில் தெப்போற்சவம் நடத்த இரண்டு தங்கப்படகுகள் செய்வித்தான். ஒரு யானை மீது தான் அமர்ந்து மற்றொன்றில் பொன்னும் மணியும் சேர்த்து எடை சரியானதும் அனைத்தையும் அரங்கனுக்கு அற்பணித்தான். தன்னுடைய எடைக்கு சமமாக தங்கத்தில் திருமாலின் உருவத்தை செய்து அளித்தான். இங்குள்ள கொடிமரம் முதன்முதலில் இப்பாண்டிய மன்னரால் உருவாக்கப்பட்டது. இக்கொடிக்கம்பம் பின்னாளில் முஸ்லீம் படையெடுப்பில் அழிக்கப்பட்டு கிபி 1461ல் மல்லிகார்சுனராயரால் புதுப்பிக்கப்பட்டு செப்புத்தகடு பதிக்கப்பட்டது.
👉 பிற்கால பாண்டியர்கள் இக்கோயிலுக்கு பல்வேறு கொடைகளை அளித்துள்ளனர்.

👉 இங்குள்ள சேஷராயர் மண்டபம் கிருஷ்ண தேவராயரின் பிரதானியான சேஷராயரால் கட்டப்பட்டது.
👉 முதல் பிரகாரத்தின் கதவு கிருஷ்ணதேவராயரால் செய்யப்பட்டது.
👉 இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 953 தூண்கள் உள்ளன. இந்த மண்டபம் விஜயநகர அரசர் காலத்தில் கம்பைய தண்டைய நாயக்கர் , சிங்கள தண்டைய நாயக்கர் ஆகியோரால் கட்டப்பட்டது.
👉 சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று நடைபெறும் தேர் திருவிழா விருப்பன் திருநாள் என அழைக்கப்படுகிறது.இந்த உத்சவத்தை விருப்பண்ண உடையார் முதன் முதலில் நடத்தியதால் இப்பெயர் பெற்றது.
👉 அரங்க விலாச மண்டபம் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது.
👉 கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் காவிர தென்கரையில் அம்மா மண்டபம் கட்டப்பட்டது.கிருஷ்ணப்ப நாயக்கரின் மகனான குமார கிருஷ்ணப்பன் வைகுண்ட ஏதாதசி அன்று பெருமாள் அணிந்துக்கொள்ளும் விலையுயர்ந்த இரத்தினங்களையும் இரத்தின கிரீடத்தையும் அளித்தான்.
👉 கிபி 1706-1732 காலத்தில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மூன்றாம் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தையும், கண்ணாடி அறையையும் கட்டினார்.அரங்கநாதர் தினசரி பாலமுது செய்யும் தங்கவட்டில், தங்கத்தடி, தோளுக்கினியான் எனும் தங்கப்பல்லக்கு, 365 பட்டு பீதாம்பரங்கள், 1000 செப்புக்குடங்கள் முதலியவை இம்மன்னரால் அளிக்கப்பட்டவையே.

👉 விஜயரங்க சொக்கநாத நாயக்கர் முத்தங்கி மற்றும் விலை உயர்ந்த ஆபரங்களை செய்து அளித்தார். இவரது பரம்பரையில் வந்த நரச நாயக்கர் மற்றும் நாகண்ண நாயக்கர் ஆகியோர் விலை உயர்ந்த ஆபரணங்களை அளித்து, பல திருப்பணிகளையும் மேற்கொண்டனர். இன்று ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள பெரும்பாலான ஆபரணங்களும் பாத்திரங்களும் விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் அளிக்கப்பட்டவையே.
👉 கிபி பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுக்கோட்டை மன்னர் வம்சத்தை சேர்ந்த தொண்டைமான் ஒருவர் இரண்டாம் சுற்றில் ஒர் மண்டபத்தை எழுப்பியுள்ளார். இது தொண்டைமான் குறடு என அழைக்கப்படுகிறது.
👉 கிபி 1875ல் வேல்ஸ் இளவரசர் ஏழாம் எட்வர்ட் ஸ்ரீரங்கம் வந்தபோது ,பொற்குவளை ஒன்றை பரிசாக அளித்தார். அது இன்றும் கருவூலத்தில் உள்ளது.


கிபி 11 ஆம் நூற்றாண்டில் இராமானுஜர் இக்கோயிலில் தங்கி, ஸ்ரீரங்கத்தின் நிர்வாகத்தை சீர்படுத்தி, வைணத்தை பரப்பினார். சிற்ப அழகும், தொன்மையும் கொண்ட ஸ்ரீரங்கம் தென்னாட்டு வைணவத்தின் தலைமைபீடமாக அமைந்து, காவிரி ஆற்றினு கரையை பக்திமயமாக மாற்றுகிறது.

ஆதார நூல்கள்: திருவரங்கம் தேவஸ்தானம் வெளியிட்ட “ திருவரங்கம் திருக்கோயில் தலவரலாறு” / இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட “ திருகோயில்கள் வரலாறு – திருச்சிராப்பள்ளி மாவட்டம்”

தொகுப்பு : www.sambattiyar.com

Total views 1,393 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *