தற்காலத்தில் பல தளங்களிலும் கேட்கப்படும் பல கேள்விகளில் ஒன்றாக கட்டாயம் இருப்பது” அப்படி என்னடா கிழிச்சீங்க தேவர் சமுதாயம்”?
நீங்களெல்லாம் சாதி வெறியர்கள், திருடர்கள், காட்டுமிராண்டிகள், படிப்பறிவு அற்றவர்கள், பழமைவாதிகள் என பல்வேறு இழிசொற்களை இந்த சமுதாயத்தின் மீது வைப்பதே ஒரு புரட்சியாக பார்க்கப்படுகிறது…
இதே போல தேவர் சமூக அம்பலங்களுக்கும் நாட்டார்களுக்கும் கோயில்களில் முதல் மரியாதை அளிப்பது ஏதோ கொலைக்குற்றம் போல சில இயக்கங்கள் சித்தரிப்பதும் வழக்கமான ஒன்றாக மாறியிருக்கிறது…..
இவர்கள் அனைவருக்கும் பதில் அளிக்கும் விதமாக 14 ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு நிகழ்வை காண்போம்….
கிபி பதினான்காம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்து 20 மைல் தொலைவில் உள்ள சூரக்குடி எனும் ஊரை தலைமையாக கொண்டு சூரைக்குடி தொண்டைமான்கள் அல்லது சூரைக்குடி தேவர்கள் ஆட்சி செய்தனர்.
இவர்கள் அதளையூர் நாடாள்வார் என்றும் திருத்தியூர் முட்டத்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கிபி 1222 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை நெய்வாசல் கல்வெட்டில் ” திருத்தியூர் முட்டத்தாரான வண்டாங்குடி கள்ளர்” என கள்ளர் மரபினர் திருத்தியூர் முட்டத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.( பு.க.எண் 260)

கிபி 1228 ஆம் ஆண்டை சேர்ந்த சிவகங்கை அழகாபுரி சிவன் கோயில் கல்வெட்டில் ” திருத்தியூர் முட்டத்தில் இருந்த அதளையூர் நாடாள்வானின் நிலத்தை கிளிப்பற்றூருடையான் என்பவருக்கு விற்பனை செய்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. திருத்தியூர் முட்டம் கள்ளர்களின் வாழிடம் என ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளதை கண்டோம். அதளையூர் நாடாள்வான் திருத்தியூர் முட்டத்தில் இருந்த தன்னுடைய நிலத்தை விற்பனை செய்யும் பொழுது அந்த எல்லைக்குள் இருந்த கள்ளர்களின் காணியையும் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலங்களையும் தவிர்த்து பிறவற்றை விற்பனை செய்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளர்களே திருத்தியூர் முட்டத்தார் என அழைக்கப்பட்டதையும், திருத்தியூர் முட்டத்தை சேர்ந்த அதளையூர் நாடாள்வான் தனது நிலத்தை விற்பனை செய்த பொழுது அதிலிருந்த கள்ளர் காணி மற்றும் கோயில் நிலங்களை தவிர்த்து பிறவற்றை விற்பனை செய்ததை கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது.அதளையூர் நாடாள்வான் நிலவிற்பனை செய்ததற்கு சாட்சியாக கள்ளர் குல பல்லவராயர் மற்றும் சேதிராயர்கள் கையொப்பம் இட்டுள்ளனர்.
உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ” அறந்தாங்கி தொண்டைமான்கள்” நூலில் இவர்களைப்பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:-


“பேரரசர்கள் பலரிடம் பணிபுரிந்த தொண்டைமான்கள் புதுக்கோட்டை, அறந்தாங்கி, சூரைக்குடி போன்ற இடங்களிலும் குடியேறி வாழ்ந்தனர் ( பக் 4-5)
திருமெய்யம் அகத்தீஸ்வரர் கோயிலில் கிடைத்த கல்வெட்டில்
” அதளையூர் நாட்டு சூரைக்குடி அவையன் பெரியானான தொண்டைமானார்” என சூரைக்குடி தலைவர் குறிப்பிடப்படுகிறார்.( பக் 18)
இத்தொண்டைமானாருக்கு பின் வந்தவர்கள் அவையன் பெரியான் விசையாலத்தேவர் எனும் பட்டங்கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.
கோயில்களை மீட்ட தேவர்
கிபி பதினான்காம் நூற்றாண்டில் வீரபாண்டியன் ஆட்சியின் பிற்பகுதியில் தலைநகராகிய மதுரையை முகமதியர் தலைவன் ஜலாலுடீன் அசன்ஷா என்பவன் கைப்பற்றினான். அவன் டில்லிமாநகரிலிருந்த மகமதுபின் துக்ளக் என்னும் அரசனால் தென்னாட்டிற்கு அனுப்பப்பட்டவன். அவன் பாண்டிய அரசனை வென்று நாட்டைக் கவர்ந்து கொண்டதோடு டில்லி மன்னன் பிரதிநிதியாக மதுரையிலிருந்து அரசாளவும் தொடங்கினான். சில நாட்களுக்குப் பின்னர், அவன் டில்லி வேந்தனுடைய தொடர்பை முழுவதும் ஒழித்துவிட்டு மதுரையில் அரசு செலுத்தி வந்தான். பாண்டிநாட்டில் முகமதியரது ஆளுகை கி. பி. 1330-ஆம் ஆண்டளவில் கி. பி. 1378 வரையில் நடைபெற்றது.
இக்காலகட்டத்தில் கோயில்கள் கொள்ளையிடப்பட்டு மக்களின் செல்வங்கள் சூரையாடப்பட்டது. மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாயினர். துலக்கர் கலகம் பற்றி குறிப்பிடும் திருப்பத்தூர் திருத்தளீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள், பல அரிய தகவல்களை தருகிறது.
கிபி 1342 ஆம் ஆண்டை சேர்ந்த சடையவர்மன் வீரப்பாண்டியன் காலத்தில் திருத்தளீஸ்வரர் கோயில் சபையினர் கூடி ஒரு முடிவுக்கு வருகின்றனர். அதன்படி அதளையூர் நாட்டு தேனாற்றுபோக்கு சூரைக்குடி அவையன் பெரிய நாயனான விசையாலய தேவர் அவர்கள் துலக்கர்களின் கலகத்தால் ஊரெங்கும் அழிவு ஏற்படும்போது
ஊர்மக்களையும் கோயிலையும் காத்து, திருமேனிகளை மீட்டு மீண்டும் கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இதற்கு நன்றிக்கடனாக ஒவ்வொரு மா நிலத்தில் இருந்தும் குறிப்பிட்ட அளவு கொல்லும், இன்னும் பிற சலுகைகளும் ஊர் மக்களால் தரப்பட்டுள்ளது.

இது பற்றி குறிப்பிடும் கல்வெட்டு வரிகள்” அதளையூர் நாட்டு தேனாற்றுபோக்கு சூரைக்குடி அவையன் பெரிய நாயனான விசையாலய தேவர்ற்கு பிடிபாடு பண்ணிக்கொடுத்த பரிசாவது உடையார் திருத்தளியாண்ட நாயனார் கோயிலிலே துலுக்கர் இருப்பார் யூருங் கோயிலும் அழிகையில் இன்னாளிலே நாயனாரையும் ஏறியருப்பண்ணி எங்களையும் ரக்சிக்கையில்“(119 of 1908)
இதே கோயிலில் கிடைத்த கிபி 1342 ஆம் ஆண்டை சேர்ந்த மற்றொரு கல்வெட்டில் துலுக்கர் கலகத்தில் இருந்து ஊர்மக்களை காத்து, கோயில் திருமேனிகளையும் காப்பாற்றியதால் இதற்கு நன்றிக்கடனாக திருத்தளீஸ்வரர் கோயிலில் விசயாலய தேவர்க்கு பரிவட்ட மரியாதை அளிக்க ஊரார் முடிவு செய்தனர், ஆனால் விசாயலத்தேவரோ தனக்கு வழங்காமல் தனது ஊரான சூரைக்குடிக்கு ஊரின் பெயரில் பரிவட்ட மரியாதை வழங்குமாறு கூறியுள்ளதை கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இது பற்றி குறிப்பிடும் கல்வெட்டு வரிகள் “அதளையூர் நாட்டு தேனாற்றுபோக்கு சூரைக்குடி அவையன் பெரிய நாயனான விசையாலய தேவர்க்கு பிடிபாடு பண்ணிக்கொடுத்த பரிசாவது துலுக்கர் கலகமாய் திருத்தளியாண்ட கோயிலிலே பாளையமாக துலுக்கர் இருந்து திருமெனி சலனங்களுண்டாக்கையில்“
” திருவாசல் காரியமாக குடுத்த சுவாந்தியங்களாவது நாயனார் திருமுன்பே ஒடுக்கும் பரிவட்டமும் தன் மகத்தாவான பெரிய நாயன் விசாலய தேவர்க்கு என்று வழங்குவதாக குடுக்க இவர் தாம் பிறந்த ஊரின் பேராலே வழங்க வேண்டுமென்கையால் ஒடுக்கும் பரிவட்டமும் சூலைக்குடிக்கென்று“(120 of 1908)
இங்கனம் போர்குடி தேவர் இனத்தில் உதித்த சூரைக்குடி அரையன் விசாலயத்தேவர் டெல்லி சுல்தான்களால் ஏற்பட்ட கலகத்தில் இருந்து மக்களை காத்தருளியுள்ளதை கல்வெட்டு உணர்த்துகிறது. இதற்கு நன்றிக் கடனாக ஊர்மக்கள் பரிவட்ட மரியாதை உள்ளிட்ட பல சிறப்புகளை விசையாலய தேவர்க்கு அளித்துள்ளனர்.
இன்றைக்கு சாதி வெறியர்கள், காட்டு மிராண்டிகள் என சில திடீர் புரட்சியாளர்களால் தூற்றப்படும் தேவர் குல வீரர்களே நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் பொழுது தங்களது இன்னுயிரையும் தந்து நாட்டு மக்களை காத்துள்ளனர்
இவர்களுக்கு வழங்கப்படும் முதல் மரியாதை மற்றும் பரிவட்ட மரியாதைகள் சாதி ஆதிக்கத்தால் கிடைத்தவை அல்ல, போர்க்களத்தில் சிந்திய குருதிக்கு ஊரார் அளித்த மரியாதை என இக்கல்வெட்டு சான்றுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
Article by : www.sambattiyar.com
Total views 1,639 , Views today 1
அரிய தகவல்.. 👏👏👏👏👏
Thank u sister