பிற்கால சோழப் பேரரசின் புலிக்கொடி தென் கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் பறக்கத் தொடங்கிய போது, இந்த பெரும் நிலப்பரப்புக்கு தலைநகராக விளங்கிய பெருமை தஞ்சாவூருக்கு உரியதாகும்.
சோழ மன்னர்கள் தங்களை தஞ்சையர்கள் என்றே பல ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். பாண்டியன் ராசசிம்மனின் சின்னமனூர் செப்பேட்டில் சோழ மன்னனை ” மடைப்பகர்நீர் தஞ்சையர்கோன் தானைவரை” ” கொடிக்குமரன் எனச்சீறித் தென்தஞ்சை காவலன்” என்றெல்லாம் குறிப்பிட்டு சோழ மன்னரை தஞ்சையின் காவலன் என அடையாளப்படுத்தியுள்ளனர்.
திருவிசைப்பாவில் கண்டராதித்த சோழன் ” கோழி வேந்தன் தஞ்சையர் கோன் ” என அடையாளப்படுத்தப் படுகிறார். முதலாம் ராஜராஜ சோழனின் அரண்மனை தஞ்சையில் இருந்ததை ” ஸ்ரீராஜராஜதேவர் தஞ்சாவூர்க் கோயிலுன்னால்” என தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.



ராஜேந்திர சோழன் காலத்தில் தலைநகர் மாற்றப்பட்டாலும் வெகு சில காலத்திலேயே சோழர்களின் தலைநகர் தஞ்சாவூருக்கே மாற்றப்பட்டு இருந்தது.கிபி 13 ஆம் நூற்றாண்டில் சுந்தரப்பாண்டியனின் படையெழுச்சி சோழ சாம்ராஜ்ஜியத்தின் முடிவுரையை எழுத ஆரம்பித்தது. இப்படையெடுப்பில் சுந்தரபாண்டியன் தஞ்சை மற்றும் உறந்தையை தீக்கிறையாக்கி, திருவையாறு தாலுகாவில் அமைந்துள்ள கண்டியூர் ஆயிரத்தளியில் முடிசூட்டிக் கொண்டார். எனவே பதிமூன்றாம் நூற்றாண்டு வரையிலும் தஞ்சையே சோழர்களின் தலைமை பீடமாக அமைந்திருந்ததை அறிகிறோம்.
கிபி பதினாறாம் நூற்றாண்டில் தஞ்சையில் இருந்து வீர சோழன் எனும் சோழ அரசன் ஆட்சி புரிந்ததாகவும், அவருக்கும் மதுரையை ஆண்ட சந்திர சேகர பாண்டியனுக்கும் போர் மூண்டதில் விஜய நகர அரசு பாண்டியருக்கு ஆதரவாக போரிட்டு தஞ்சை மன்னன் வீர சோழனை வீழத்தியதாகவும் விஜய நகர வரலாற்று ஒலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரே வரலாற்றில் குறிப்பிடப்பட்ட கடைசி சோழ அரசன் ஆவார்.( List of antiquaries present in presidency of madras vol 1 (1882) பக்கம் 271 )
இத்தகைய பெருமை வாய்ந்த தஞ்சை எனும் ஊர் கல்வெட்டுகளில் பாண்டிய குலாசினி வளநாட்டு தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் என்றும், நித்த வினோத வளநாட்டு தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுகளின் அடிப்படையில் தஞ்சாவூர் கூற்றத்தில் கண்ணந்தக்குடி, கருந்திட்டைக்குடி, குருவாடி, நத்தமங்கலம் , நெற்குப்பை , பெண்ணாகடம், கள்ளப்பெரம்பூர் , தஞ்சாவூர் முதலிய ஊர்கள் அமையப் பெற்றிருந்தது.( தஞ்சாவூர்-, திரு. குடவாயில் பாலசுப்ரமணியன்: பக் 35)
பழம்பெருமை வாய்ந்த தஞ்சையில் போர்குடியினரான கள்ளர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்ததை கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன.
கிபி 7-8 ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் ஆட்சி செய்த சோழ மன்னரின் முக்கிய படைத்தளபதியாக கள்ளர் குல திருமங்கை ஆழ்வார் இருந்ததாக திவ்ய சூரி சரிதம் உரைக்கிறது.
செந்தலையில் கிடைத்த பெரும்பிடுகு முத்தரையரின் 8 ஆம் நூற்றாண்டு தூண் கல்வெட்டுகளில் கள்வர் கள்வன், தஞ்சைக்கோன், வல்லக்கோன் எனும் அடையாளங்களின் மூலமாக தஞ்சையானது கள்ளர் குல முத்தரைய மன்னர்களின் ஆட்சியில் இருந்ததை உணர்த்துகின்றது.( Epigraphica indica vol 13 பக் 139)
கிபி எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியன் மாறஞ்சடையனின் கல்வெட்டில் பேரையூர் நாட்டு பனையூர் அரையன் கள்வன் என்பவர் திருக்கோடிக்காவல் கோயிலுக்கு அளித்த பொற்கொடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.(21 of 1930-1931). இன்றும் இங்கு குறிப்பிடப்பட்ட பேரையூர் நீடாமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வூரை சேர்ந்த கள்ளன் அரையன் இவ்வூரின் ஆட்சியாளராக இருந்துள்ளார்.
கிபி 1015 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் ” தஞ்சை வீரன் சூற்றி கள்ளன்” எனும் கள்ளர் குல போர் வீரர் குறிப்பிடப்படுகிறார். ( 684 Of 1904)

இவ்வகையில் ஆதிகாலம் முதலே தஞ்சையின் பூர்வ போர்க்குடிகளாக விளங்கிய கள்ளர் மரபினரே இன்றும் தஞ்சையின் பெரும் நிலவுடைமையாளர்களாக விளங்குகின்றனர். தஞ்சை கள்ளர்களின் ஆளுமைக்கும் வீரத்திற்கும் ஆதாரமாக கள்ளர்களின் நிலவுடைமை சாம்ராஜ்ஜியம் அமைந்துள்ளது.
கிபி 1735 ஆம் ஆண்டை சேர்ந்த சரஸ்வதி மகால் செப்பேட்டில் சிங்கவனம் ஜமீன்களான கோபாலர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இச்செப்பேட்டில் ” பட்டுக்கோட்டை சீமையிற் பாளையக்காரரில் ஸ்ரீ கோபாலசாமி வரபுத்திரரான விசைய ரகுநாத மெய்க்கண் கோபாலஞ் சேருவைக்காரர் தன்னுடைய தான முசுறி முப்பதிரண்டு கிராமத்தில் ” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சிங்கவனம் ஜமீன்களான கோபாலஞ் சேர்வைக்காரர் வசம் 32 கிராமங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் கள்ளர் மரபினர் ஆவர்.
கிபி 1883 ஆம் ஆண்டு எழுதப்பட்ட Manual of tanjore In madras presidency எனும் நூலில் பக்கம் 195ல் ” காவிரி டெல்டாவின் மிக வளமான நிலப்பகுதியான திருவாடி தாலுகாவில்( திருவையாற்றில்) பெரும்பான்மையான நில உடைமையாளர்கள் கள்ளர்கள் என்றும் இவர்கள் செல்வ வளம் படைத்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நூலில் பிராமணர்கள் வசம் இருந்த நிலங்கள் அனைத்தும் பிற்காலத்தில் கள்ளர்கள் வசம் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே நூலில் தஞ்சையில் உள்ள அனைத்து ஜமீன்களும் கள்ளர்கள் என்றும், கள்ளர் மரபில் உதித்த பதிமூன்று ஜமீன்தார்களின் பெயர்களும் அவர்களின் ஆளுமை பகுதியும் தரப்பட்டுள்ளது. (Manual of tanjore In madras presidency. பக் 683


கந்தர்வகோட்டை ஜமீன்- 53 கிராமங்கள்- 54468 ஏக்கர்
பாப்பாநாடு ஜமீன்- 36 கிராமங்கள்- 23412 ஏக்கர்
சேந்தங்குடி-9 கிராமங்கள்- 18909 ஏக்கர்
கல்லாக்கோட்டை ஜமீன்- 17 கிராமங்கள்- 15,481 ஏக்கர்
சில்லத்தூர் ஜமீன்- 10 கிராமங்கள்- 14,345 ஏக்கர்
பாலையவனம் ஜமீன்- 52 கிராமங்கள்- 13,984 ஏக்கர்
மதுக்கூர் ஜமீன்- 12 கிராமங்கள்-13,549 ஏக்கர்
நெடுவாசல் ஜமீன்-15 கிராமங்கள்-9532 ஏக்கர்
பாதரங்கோட்டை ஜமீன்- 7 கிராமங்கள்-8896 ஏக்கர்
சிங்கவனம் ஜமீன்- 26 கிராமங்கள்-8631 ஏக்கர்
அத்திவெட்டி ஜமீன்- 11 கிராமங்கள்- 6287 ஏக்கர்( தற்போது தேவர் மறவர் ஜமீன்)
புனல்வாசல் ஜமீன்-1 கிராமம்- 2527 ஏக்கர்
கோனூர் ஜமீன்-2 கிராமம்- 1612 ஏக்கர்
தஞ்சை தரணியில் இருந்த கிராமங்களில் கிட்டதட்ட 250 கிராமங்கள் 13 கள்ளர் ஜமீன்களின் வசம் இருந்துள்ளது
கிபி 1906 ஆம் ஆண்டு எழுதப்பட்ட Tanjore gazetter எனும் நூலில் பக் 262 ல் ” காவிரி டெல்டாவின் மிகப்பெரிய ஜமீனாக கந்தர்வகோட்டை ஜமீன் விளங்குவதாகவும், இவர்கள் கள்ளர் மரபினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிபி 1923 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ” கள்ளர் சரித்திரம்” நூலில் கள்ளர்களின் நிலவுடைமை பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்படி ” சோழ நாட்டில் கள்ளர்களில் சிலர் ஆயிரம் வேலி நிலம் உடையவர்களாகவும் முப்பது நாற்பது குடும்பங்கள் நூறு முதல் இருநூறு வேலி நிலம் உடையவர்களாக விளங்குவதாகவும் நெற்களஞ்சியமான தஞ்சையின் பெரும் பாகம் இவர்களுக்கு உரியதாக உள்ளது என்றும், இவர்களில் பல குடும்பங்கள் பல்லக்கில் செல்லும் வழக்கத்தை கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ( நாட்டார்- கள்ளர் சரித்திரம் – பக் 130)
இதே நூலில் ” பெரும் நிலக்கிழார்களான பூண்டி ஜமீன் வசம் 7000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலமும் , உக்கடை தேவர் ஜமீன் மற்றும் சாவடி நாயக்கர் முதலிய நிலக்கிழார்களும் ஆயிரம் வேலிக்கு மேற்பட்ட நில உடைமையாளராக விளங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.( நாட்டார்- கள்ளர் சரித்திரம்- பக் 90)
தஞ்சையில் கள்ளர்கள் வாழும் ஊர்களில் பெரும்பாலான ஊர் பெயர்கள் கள்ளர்களின் பட்டத்தோடு தொடர்புடையதாக அமைந்திருப்பது இவர்களின் ஆளுமையை விளக்கும். அவற்றில் சில: காங்கெயன்பட்டி , சோழகன்பட்டி , ராயமுண்டான்பட்டி , வாலியன்பட்டி , தொண்டைமான்பட்டி,கண்டியன்பட்டி ,சாதகன்பட்டி ,துண்டுராயன்பாடி ,ஆரமுண்டான்பட்டி ,ஓசையன்பட்டி,வில்லவராயன்பட்டி ,மலைராயன்பட்டி,கலியராயன்பட்டி ,பத்தாளன்கோட்டை,பாப்பரையன்பட்டி ,மாதைராயன்பட்டி,சேதிராயன் குடிக்காடு,நல்ல வன்னியவன் குடிக்காடு , வல்லாண்டான்பட்டி ,வாண்டையானிருப்பு ,தென்கொண்டானிருப்பு ,நரங்கியன்பட்டி ,சாளுவன்பேட்டை, நாய்க்கர்பாளைம் (சாவடி நாயக்கர் கிராமம்)
பிற்கால கால சோழர்களின் தலைமை பீடமாக, மாபெரும் தமிழ் பேரரசின் தலைநகராக நான்கு நூற்றாண்டுகள் கோலாச்சிய தஞ்சை தரணியின் பெரும்பான்மை நிலவளங்கள் கள்ளர் மரபினரின் வசம் இருப்பதை சான்றுகள் உணர்த்துகின்றன. தஞ்சை தரணியில் கள்ளர்களின் நிலவுடைமை இவர்களின் ஆயிரம் ஆண்டு கால ஆளுமைக்கு சான்றாக அமைகிறது.
Article by: www.sambattiyar.com
Total views 2,187 , Views today 3