கல்வெட்டுகளில் பிறமலை கல்லகநாடு

கல்லகநாடு என கல்வெட்டுகளில் குறிக்கப்படும் பகுதியானது மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி, வாடிப்பட்டி, திருமங்கலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை வட்டங்களின் நிலப்பரப்பினை உள்ளடக்கியதாக இதன் எல்லைகளை கொண்டுள்ளது.இன்றைய பிறமலை கள்ள நாட்டின் பெரும்பான்மை பகுதிகளை உள்ளடக்கிய இந்த பகுதி தென்கல்லகநாடு கல்லநாடு, கல்லகநாடு என கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது.

கல்லகநாடும் கள்ளர் நாடும்

கிபி 1488 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ( SII vol 25, no 44)
மகாபலி வாணாதிராஜா நாயக்கத்தனமாகப் புரமலைக் கல்லகநாட்டில் மேற்படி தொண்டைமண்டலத்து திம்மச்சி நாயக்கர் ” என குறிக்கிறது. திம்மச்சி நாயக்கன் என்பவன் அளித்த நிலக்கொடை பற்றி கூறுகிறது.அச்சமயத்தில் இப்பகுதி விஜய நகர அரசர் மேலாண்மையை ஏற்ற வாணாதிராயரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. புரமலை கல்லகநாடு என குறிக்கப்படும் இப்பகுதி இன்றைய பிறமலை கள்ளர் நாட்டு பகுதியாகும். இப்பகுதியில் கள்ளர்களே தன்னரசு நாடுகளை உருவாக்கி வாழ்ந்தனர். இப்பகுதியில் வாழ்ந்த கள்ளர்களின் வாழ்விடத்தை குறிக்கவே கல்லகநாடு என குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலவியல் அமைப்பில் இன்றும் 80% க்கும் மேல் வாழ்பவர்கள் கள்ளர்கள் மட்டுமே.

புறமலை கல்லகனாடு (SII vol 25/ 44)

புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டு 675, இதே காலகட்டத்தை சேர்ந்ததாகும். இந்த கல்வெட்டு வாணாதிராய மன்னரை பற்றிய புகழ் மொழிகளை கொண்டுள்ளது. ” வாணர் குலத்தவன் , மதுராபுரி காவலன் போன்ற புகழ் மொழிகள் வாணாதிராயர் மதுரையை ஆட்சி செய்ததை குறிப்பிடுகின்றது. இந்த கல்வெட்டில்” வார்கழற் கல்லமலை எனும் தொடர் வருகிறது. அதாவது வீரமிக்க கழல் அணிந்த பாதம் கொண்ட கல்லர்கள் வாழும் மலை எனவும், கழற் கல்ல அசுரர், அதாவது வீரக்கழல் அணிந்த கல்ல அசுரர்கள் எனவும் குறிப்பிடுகிறது. இதே கால கல்வெட்டு புரமலை கல்லகநாடு என குறிப்பிடுவது மேற்குறிப்பிடப்பட்ட கல்ல மலை மற்றும் கல்ல அசுரர் எனும் கள்ளர்களைத்தான். பாண்டியர் மேலாண்மையை தூக்கி எறிந்த வாணர்கள் பாண்டியர் படைபற்றுகளான புறமலை கள்ள நாடுகளின் மேல் போரிட்டு அடக்கி தன் ஆதிக்கத்தை நிறுவியதை தெரிவிக்கும் கல்வெட்டாக இது இருக்கலாம். வார் கழற் கல்லமலை , கழற் கல்ல அசுரர் போன்றவற்றில் வரும் கல்லர் என்பது மனிதர்களையே குறிக்கிறது. ” கழற் திருந்தடிக் கள்வர் கோமான் ” என மாமன்னர் புல்லியை அகநானூறு பாடல் 61 குறிப்பிடுகிறது.வாணர் தன்னை மதுராபுரி காவலன் என குறித்திருப்பது மூலம், அவர்கள் மதுரை ஆட்சி செய்ததும், புறமலை கல்லகநாடு என வழங்கப்பட்ட கல்வெட்டுகள் பிறமலை கள்ளர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கள்ள நாட்டையே குறிப்பவையாகும்.

வார் கழல் அணிந்த கல்லர் மலை என குறிப்பிடுவதால், கல்லகநாடு என்பது கல் பாறைகளை கொண்ட பகுதி என சிலர் வரலாற்றாசிரியர்களின் யூகம் பொய்யாகிறது. கள்ளர்களை கல்லர் எனவும் மறவரை மரவர் எனவும், பறையரை பரயர் எனவும் பல்வேறு கல்வெட்டுகளில் குறித்துள்ளதை காணலாம்.
கள்ளரை கல்லர் என குறிக்கும் கல்வெட்டுகளில் சில:
மேற்படி கானவன் சேந்தன் கல்லன் ” ( புதுக்கோட்டை கல்வெட்டு 50)
” கொனாட்டு உறத்தூர் கூற்றத்து கொடும்பாளூர் கல்லன் ஆதித்தபடாரி ” ( SII vol 7 :975)
” பாண்டி நாட்டு முத்தூர் கூற்றத்து கல்லஅம்பலவன் ” (IPS 60)
முருக்குடையான் காணி இந்த கல்லன் ” ( IPS 281)

Inscriptions of pudukkottai state 675

தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்ட ” தென்கல்லகநாடு ” எனும் புத்தகத்தில் முனைவர் ஜெயக்குமார், கல்லகநாடு என்பது அங்கு வாழும் கள்ளர்களோடு நேரடி தொடர்பை கொண்டது என விளக்கியுள்ளார்.

தென்கல்லகநாடு, பக் 9, தமிழ் பல்கலைக்கழகம் வெளியீடு

பிறமலை நாட்டு கள்ளர் படைபற்றுகள்

பிறமலை பகுதி கள்ளர் நாடுகள், தன்னரசு நாடுகளாக உருவாவதற்கு முன் சோழ /பாண்டியர்களின் முக்கிய படைபற்றாக இருந்துள்ளது.முடி மன்னர் ஆட்சி முடிவுற்றபின் தன்னரசு நாடுகளாக உருவான கள்ளர் பற்றுகள் திருமலை நாயக்கர் காலம் முதல் வெள்ளையர் காலம் வரை பல போர்களில் ஈடுபட்டு வீரதீரம் காட்டியுள்ளனர். பல வெளிநாட்டு ஆய்வாளர்களின் முக்கிய ஆய்வுக்களமாக இன்று வரையும் விளங்குவது பிறமலை கள்ள நாட்டு பகுதிகளாகும்.கள்ளர் படைபற்றுகள் பற்றிய ஆனையூர் ஐராவதேசுவரர் கோயில் கல்வெட்டுகளை காண்போம்.

ராசராசசோழன் கால தென்கல்லநாட்டு படைத்தலைவன்

கிபி 996 ஆம் ஆண்டு ராசராசன் கால ஆனையூர் நாட்டு ஐராவதேசுவரர் கோயில் கல்வெட்டில் (500/1962-63)


இராசராசவளநாட்டு தென்கல்லநாட்டு திருக்குருமுள்ளூர் படைத்தலைவன் வேளான் சேந்தன் மற்றும் படைத்தலைவன் அரையன் பல்லவன் ” என கள்ளர் படைத்தலைவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர்.

ARE 500/1962-1963

இரண்டாம் இராசராச கால கல்ல நாட்டு படைத்தளபதிகள்

கிபி 1150 ஆம் ஆண்டு ஆனையூர் கோயில் கல்வெட்டு (503/1962-63)


இராசராச மண்டலத்து தென்கல்லக நாட்டு….உலகன் மண்டகத்து எரிய படைத்தலைவன் காடன் ஊரனுக்கு ” என
தென்கல்ல நாட்டை சேர்ந்த எரிபடை தலைவன் குறிக்கப்படுகிறார்.

503/1962-63

சுந்தர சோழ பாண்டிய தேவர் கால பிறமலை கள்ளர் படைத்தலைகள்

506/1962-1963

தென்கல்லக நாட்டு படைத்தலவனான மாறனாசகன் படைத்தலைவன் சேந்தன் சோலை இருநாளிக்கு கொடுத்த பசு எட்டு படைத்தலைவன் அட்டக் கடவால் னாநாழி படைத்தலைவன் சுரனாச்சன் ” என பிறமலைக் கள்ளர் படைத்தலைவர்கள் கொடுத்த கொடையானது குறிப்பிடப்படுகிறது.

505/1962-63

மதுராந்தக வளநாட்டு தென்கல்லக நாட்டு படைத்தலைவன் சோமன் எழுநூற்றுவனும் “(505/1962-63) எனும் கல்வெட்டு சோமன் எழுநூற்றுவன் என்பவர் அளித்த கொடை பற்றி கூறுகிறது.

தென்னகல்லகநாடு, தமிழ் பல்கலைக்கழகம்

மதுரை மண்டலத்தில் உதய வளநாட்டு பிறமலை பற்றில் திடியன் சீமைக்கு உட்பட்ட தங்களாச்சேரி” ( கிபி 1570) ( விஜயவேணுகோபால் மற்றும் வெங்கடராமன் 1996 பக் 68-70)

இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் திடியன் எனும் பகுதி பிறமலை கள்ளர்களின் நாட்டமைப்பான எட்டு நாட்டில் ஒன்றாக உள்ளது.

தென்னகல்லகநாடு, தமிழ் பல்கலைக்கழகம்

இதே பகுதியில் கிடைத்த மற்றொரு கல்வெட்டு வாலாந்தூர் எரியபடைத்தலைவனை குறிப்பிடுகிறது. வாலாந்தூரும் பிறமலைக் கள்ளர்களின் எட்டு நாடுகளில் ஒன்றாக உள்ளது.

அகநானூறு பாடல் 342ல் மதுரையில் இருந்து ஆட்சி செய்த பாண்டிய மன்னரை “கள்வர் பெருமகன் தென்னன்” என மதுரை கணக்காயனார் பாடுகிறார். இதன் மூலம் சங்க காலத்திலேயே மதுரையில் கள்ளர்கள் வேறூன்றி ஆட்சி செய்தது உறுதியாகிறது.

அழகாபுரி பாளையம் வம்சாவளி


அழகாபுரி ஜமீன்தார் பாளைய வம்சாவளி ஒலைச்சுவடியில்(D.2849) மதுரை கள்ள நாடு பற்றிய குறிப்பு:- ” அப்பால் அழகப் பெருமாள் ராசாவுடனே, மதுரைக்கி போயிருந்ததில் கள்ள நாட்டு சல்லியத்தில் இவர் முகனித்து அந்த கள்ள நாட்டுக்கெல்லாம் தலைவன் காளாக்களநாயன் மேலாளக்கன் என்று பேருடைய கள்ளனுடே வெகு சாகசம் பண்ணி அந்த கள்ளனை இவர் பிடித்து ராசாவிடம்” : அழகாபுரி ஜமீன் முன்னோர் இரட்டைக்குடை வன்னியனார், தென்காசி அழகப்பெருமாள் பாண்டியருடன் மதுரை செல்லும்போது, அங்குள்ள மதுரை கள்ளர் நாட்டு மக்கள் மதுரையில் படை கொண்டு வந்து கலகங்கள் செய்ததால், இரட்டைகுடை வன்னியனார், கள்ளர் நாட்டு மக்களிடம் போரிட்டு, கள்ளர் தலைவன் காளாக்களநாயன் என்பவரை அடக்கியதாக குறிப்பிடப்படுகிறது. மதுரை கள்ளர் நாடுகள் 15 ஆம் நூற்றாண்டு முதலே, தன்னரசு நாடாக விளங்கி வருவதை இந்த செய்தி விளக்குகிறது.

1645 ஆம் ஆண்டை சேர்ந்த திருமலை புன்னத்தேவன் செப்பேடு, பிறமலைக் கள்ளர்களின் எட்டு நாடுகளைக் குறிப்பிட்டுள்ளது. எட்டு நாடுகளும் தென்கல்லகநாட்டுப் பகுதிகளில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சங்க இலக்கியத்தில் பாடப்பட்ட மதுரை கள்ளர் மரபினர், கிபி 10 ஆம் நூற்றாண்டு முதல் கள்ளர் நாடுகளாக சோழர் பாண்டியர் மன்னர்களின் படைத்தலைவர்களாக விளங்கினர். இக்கள்ளர்களில் தென்கல்லக நாட்டு பகுதிகளில் வாழ்ந்தவர்கள் பிறமலைக் கள்ளர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர். கள்ளர்களின் நாட்டுப்பகுதியை குறிக்கவே கல்லகநாடு எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூவேந்தர் ஆட்சியின் முடிவுக்கு பின் தன்னரசு கள்ள நாடுகளாக அந்நியர்களுக்கு எதிராக பல போரக்களங்களில் உதிரம் சிந்தியுள்ளதை வரலாற்று ஏடுகள் எடுத்துரைக்கின்றது.

கல்வெட்டு ஆதாரங்கள் : தென்கல்லக நாடு ( முனைவர் ஜெயக்குமார்) தமிழ் பல்கலைக்கழகம் /புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள்

Article by : www.sambattiyar.com

Total views 2,342 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *