திருநெல்வேலியை சேர்ந்த தாருகாபுரம் ஜமீன் பரம்பரையை சேர்ந்த திரு. இந்திர ராமசாமிப் பாண்டியன் என்பவரிடம் இருந்து அண்மையில் பெறப்பட்ட ” தாருகாபுரம் செப்பேடு” பல அரிய தகவல்களை தருகிறது. இவர்கள் ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி குடும்பத்தாரோடு மணத் தொடர்பு உடையவர்கள்.
இந்த செப்பேட்டின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக கணிக்கப்படுகிறது.அக்காலத்தில் தென்காசிப் பாண்டியரான சீவிலி மகாராசா ஆட்சி எல்லைக்கு உட்பட்ட மலையங்காட்டுப் பகுதியில் சந்திரன் எனும் தீயவன் அரசர்களை எதிர்த்து கலகங்கள் செய்து வந்தான். அந்த தீயவனை கொண்டையங்கோட்டை மறவரில் ஒரு வீரரான திருவண்ணாத் தேவர் என்பவர் வீழ்த்தினார். தேவரின் வீரத்தை கண்டு வியந்த பாண்டிய மன்னர், திருவண்ணாத் தேவருக்கு ” இந்திரத் தலைவன்” எனும் பட்டத்தை அளித்து கவுரவித்தார். இவருக்கு 22 கிராமங்கள் பாண்டிய மன்னரால் அளிக்கப்பட்டது. நாகபுரம் எனும் இந்திரபுத்தில் கோட்டையும் கொத்தளமும் அமைத்துக் கொடுக்கப்பட்டது. திருவண்ணாத் தேவருக்கு தண்டிகை, பல்லக்கு, இரட்டை தீவட்டி, இரட்டைக் குடை, மகரக் கொடி, கெருடக் கொடி, சாமரம் முதலியவை வைத்துக் கொள்ளும் உரிமை பாண்டிய வேந்தரால் அளிக்கப்பட்டுள்ளதை செப்பேடு உரைக்கிறது.
இது தவிர சங்கரன் கோயில் ஆவுடைத்தாய் சன்னதியில் தீர்த்தம், திருநீறு, சந்தனமாலை, பாக்கு, வெத்திலை பெற்று தேர்வடத்தை தொட்டு இழுக்கும் மரியாதையும் அளிக்கப்பட்டது.
செப்பேடு அளித்ததற்கு சாட்சிகளாக பொக்குஷம் சூரசங்கு நாயக்கர், கடம்பூர் தடியத் தலைவன், வடகரை முடி பொறுத்த செம்புலித் தேவன் முதலோனோர் கையொப்பமிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மன்னர்களும் தங்களை ” இந்திர குலத்தார்” என குறிப்பிட்டுள்ளனர். இதே போல திருவண்ணாத் தேவரும் ” இந்திர தலைவன்” என போற்றப்பட்டுள்ளார். இந்திரன் எனும் அரச மரபினரான முக்குலத்தோர் குடிகளுக்குள் இருந்த ஒற்றுமையை இது விளக்குகிறது. தென்காசி பாண்டியர் தனது மறக்குலத் தலைவரின் வீரத்தை போற்றி வழங்கிய கொடைகளை இச்செப்பேடு நமக்கு உணர்த்துகிறது.




நன்றி: விஜய்பாண்டியன் செயங்கொண்டார்
தொகுப்பு:www.sambattiyar.com
Total views 2,094 , Views today 4