” தஞ்சாவூர்” பெயர் காரணம் என்ன?

சோழப் பேரரசின் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் தமிழகத்தின் பெருமை மிக்க ஊராக விளங்குகிறது. தெற்காசியாவின் பெரும்பான்மை நாடுகளின் தலைமையாக தஞ்சை விளங்கியது.

தஞ்சை எனும் பெயரின் மூலம் தண்+ செய் என்பதாகும். இதன் பொருள் காவிரியின் கொடையால் குளிர்ச்சியும் வளமும் நிறைந்த நிலம் என்பதாகும். தண்+ செய்+ ஊர் பிற்காலத்தில் தஞ்சாவூர் என்றானது.

தஞ்சை என்ற பெயர் குறிப்பை முதன் முதலாக நமக்கு காட்டுபவர் திருநாவுக்கரசர் எனும் அப்பர் அடிகளாவார். இவரது காலம் கிபி ஆறாம் நூற்றாண்டு ஆகும். இவர் சிவாலயங்கள் நிறைந்த ஊர்களில் ஒன்றாக தஞ்சையை குறிப்பிடுகிறார்.

” மஞ்சு ஆர் பொதியில் மலை, தஞ்சை வழுவூர்
வீரட்டம், மாதானம், கேதாரத்தும்”

” ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார்
தஞ்சை தளிக்குளத்தார்”

முதலிய வரிகள் மூலம் அப்பர் ” தஞ்சை” பற்றி குறிப்பிடுகிறார். ( நாவுக்கரசரின் ஆறாம் திருமுறை)

தஞ்சாவூரை பற்றி குறிப்பிடும் முதல் கல்வெட்டு திருச்சிராப்பள்ளி மலைக்குன்றில் உள்ளதாகும். மகேந்திர வர்ம பல்லவன் காலத்திய எழுத்தமைப்பில் ” தஞ்சைஹரக” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தஞ்சையை வென்றவன் எனும் பொருளில் மகேந்திர வர்மனை குறிப்பிடுகிறது. இவரது காலம் கிபி 600- 630 ஆகும். ( கல்வெட்டு எண் : ARE 135/1937-1938 B

இவற்றின் மூலம் கிபி 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பில் இருந்தே தஞ்சாவூர் எனும் பெயர் பயன்பாட்டில் இருந்து இன்றைய தஞ்சையை குறித்துள்ளதை அறிகிறோம்.

ஆதார நூல்கள்: தஞ்சாவூர் ( குடவாயில் பால சுப்ரமணியன்)/ ராஜராஜேச்சுரம்( குடவாயில் பால சுப்ரமணியன்)

Total views 3,178 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *