முதல் சோழன் உதித்த திருவாரூர்

தமிழக வரலாற்றில் அரிய பல சாதனைகள் புரிந்து தமிழர்களின் மணி மகுடமாக விளங்குபவர்கள் சோழ மன்னர்கள்.  கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொடரும் அரச மரபை கொண்டிருந்த சோழ வேந்தர்கள் தங்களது ஆதி பூமியாக காவிரித் தாயால் வளம் பெற்று விளங்கும் காவிரிப் படுகையை கொண்டிருந்தனர்.

முதலாம் ராசராசசோழன் வெளியிட்ட பெரிய லெய்டன் எனும் ஆனைமங்கல செப்பேடுகள் சோழர்களின் முன்னோர்கள் குறித்த பல தகவல்கள் தருகின்றன.  திருமாலின் வழிவந்ததாக குறிப்பிடப்படும் பிரம்மன் காசியபரை உருவாக்கியதாகவும்,  அதன் பிறகு காசியபரின் மகனாக சூரியன் உதித்ததாகவும்,  சூரியனில் இருந்து முதல் சோழ மன்னனான மனு இப்பூவுலகில் தோன்றியதாகவும் செப்பேட்டு தகவல்கள் உணர்த்துகின்றன.

முதல் சோழ வேந்தனின் தலைநகரமான திருவாரூர்

முதல் சோழ மன்னனான மனு குறித்து பல வரலாற்று சிறப்புகள் நமக்கு கிடைக்கின்றன.சோழ மன்னனான மனு தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவாரூரில் இருந்து ஆட்சி புரிந்தாரென பல இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன. இவரே மனுநீதி சோழன் என்று குறிப்பிடப்படுகிறார்.

மனுநீதி சோழன் ஆட்சி செய்த திருவாரூரின் சிறப்புகள் சேக்கிழாரால் திருத்தொண்டர் புராணத்தில் திருநகர் சிறப்பு எனும் பகுதியில் பாடப்பட்டுள்ளது.

“சொன்ன நாட்டிடைத் தொன்மையின்
மிக்கது  மன்னு மாமல ராள்வழி பட்டது
வன்னி யாறு மதிபொதி செஞ்சடைச்
சென்னி யார்திரு வாரூர்த் திருநகர்”

சோழநாட்டிலே உள்ள பல நகரங்களிலேயும் 
மிகப்பழமை வாய்ந்தது என்றும் வன்னியும் கங்கையும் 
நிலாவும் தங்கிய சிவந்த சடைமுடித் தலைவராகிய தியாகேசர் எழுந்தருளிய சோழர்களின் தலைநகரான திருவாரூர் என்றும் போற்றப்படுகிறது. சோழர்களின் முழுமுதற் கடவுள் என்பதால் சென்னியர் எனும் சோழர்களின் பட்டத்திலேயே சிவனும் குறிப்பிடப்படுகிறார்.

” மாட மாளிகை சூளிகை மண்டபங் 
கூட சாலைகள் கோபுரந் தெற்றிகள
நீடு சாளர நீடரங் கெங்கணும்
ஆடன் மாத ரணிசிலம் பார்ப்பன”

திருவாரூர் திருநகரில் மாட மாளிகைகளும் கோபுரங்களும் ஆடல் பாடல் நடைபெறும் மண்டபங்களுமாக சோழரின் தலைநகர் சிறப்புற்று இருந்தததாம்.

“நிலம கட்கழ கார்தரு நீணுதற்  றிலக
மொப்பது செம்பியர் வாழ்பதி மலர்
கட்குவண் டாமரை போன்மலர்ந்
தலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால்”

நிலமாகிய மகளுக்கு அழகு நிறைந்த 
நீண்ட நெற்றியிலே திலகம் போல சோழர்கள் அரசுபுரிந்து வாழும்  வளமுடைய தாமரைபோல மலர்ந்து அளவில்லாத சிறப்புடைய  திருவாரூர் என இவ்வூரின் சிறப்புகள் போற்றப்படுகிறது.

” அன்ன தொன்நகருக்கு அரசாயினன்
   துன்னு வெங்கதி ரோன் வழித்தோன்றினான்
   மன்னுசீர் அநபாயன் வழிழுதன்
   மின்னு மாமணிப் பூண் மனு வேந்தனே”

இத்தகைய தொன்மை மிகுந்த திருவாரூரின் அரசனாக  சூரியன் வழிதோன்றிய மனுநீதி சோழன் குறிப்பிடப்படுகிறார். அநபாயன் எனும் இரண்டாம் குலோத்துங்க சோழனின் முன்னோராக மனுநீதி சோழன் இங்கு குறிப்பிடப்படுகிறார்.
   

பசுவுக்கு நீதியளித்த மனுநீதி சோழன்

மனுநீதி சோழனின் ஆட்சி காலத்தில் இவரது மகன் ஒட்டிச் சென்ற தேரின் சக்கரத்தில் சிக்கி ஒரு இளம் கன்று இறந்தது. துயரமடைந்த தாய் பசு  சோழ மன்னரிடம் நியாயம் கேட்டு நீதி கேட்கும் மணியை ஒலித்தது. .நடந்த நிகழ்வை கண்டு வருத்தமுற்ற மனுநீதி சோழன் இதற்கு ஈடாக தனது மகனையும் சக்கரத்தில் ஏற்றி கொல்ல முயன்றார் என்பது வரலாறு.

இதைப்பற்றி கூறும் சிலப்பதிகாரம் பாடல்

“வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார்என்”  என மனுநீதி சோழன் பற்றி குறிப்பிடுகிறது.

( வழக்குரை காதை 50-63)

” அறவாழி மைந்தன் மேல் ஊர்ந்தோன்” என இராசராச சோழனுலா மனுநீதி சோழனை பற்றி குறிப்பிடுகிறது.

மனுநீதி சோழன் திருவாரூரில் உள்ள சிவன் கோயிலான புற்றிடங்கொண்ட பெருமானுக்கு பூசைக்குரிய நிவந்தங்கள் அனைத்தையும் சிவாகம விதிப்படி செய்து முடித்தாராம்.

இதனை ” பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர் எங்கு மாகி இருந்தவர்” என சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார்.

திருத்தொண்டர் புராணத்தில்

“பொன்றயங்கு மதிலாரூர்ப் பூங்கோயி 
 லமர்ந்தபிரான் வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே 
யருள்கொடுத்துச் சென்றருளும் பெருங்கருணைத் திறங்கண்டு தன்னடியார்க் கென்றுமெளி வரும்பெருமை யேழுலகு மெடுத்தேத்துமே” எனும் வரிகள் அழகிய மதில்களையுடைய திருவாரூரில் அழகிய கோயிலில் வீற்றிருந்த பெருமான்,  மனுநீதி சோழனின் மகனால் கொல்லப்பட்ட பசுவுவை உயிர்ப்பித்து அருளியதாக குறிப்பிடுப்படுகிறது.

இந்த அற்புத நிகழ்வை பற்றி குறிப்பிடும் திருவாரூர் கோயில் கல்வெட்டு பல அரிய தகவல்களை தருகின்றது. திருவாரூர் திருக்கோயிலின் இரண்டாம் பிரகார தென்புறச்சுவரில் உள்ள கிபி 1123 ஆம் ஆண்டை சேர்ந்த விக்கிரம சோழன் கால கல்வெட்டில் பின்வரும் தகவல் உள்ளது.

” சூரிய புத்திரனான மனு என்னும் சோழ அரசனின் மகன் ப்ரியவிருத்தன் திருவாரூரில் தேரில் சென்ற போது இளங்கன்று ஒன்று தேரில் அடிபட்டு இறந்தது. இதனால் தாய்பசு திருவாரூரில் இருந்த சோழ அரண்மனை வாயிலில் இருந்த மணியை ஒலித்து நீதி கேட்டது.  நடந்த நிகழ்வுகளை அறிந்த சோழ மன்னன் , தனது மந்திரியான பாலையூருடையான் உபய குலாமலனிடம் தேரில் சென்று தனது மகனான ப்ரிய விருத்தனை கொல்ல ஆணையிட்டார். ஆனால் அமைச்சரோ இதை செய்ய மறுத்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இதையடுத்து சோழ மன்னனே தேரை எடுத்து தனது மகனின் உயிரை பறிக்க புறப்பட்டார். இந்த நேரத்தில் சிவபெருமான் தோன்றி இறந்த பசுவுக்கும் , இறந்துபோன மந்திரிக்கும் உயிரூடியதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.( திருவாரூர் திருக்கோயில்- குடவாயில் பாலசுப்ரமணியம்)

உயிர்பெற்ற மந்திரியான பாலையூருடையானுக்கு சோழ மன்னன் மாளிகை முதலியவை அளித்து பல சிறப்புகள் செய்துள்ளார். பாலையூருடையான் வம்சத்தில் வந்த மந்திரியான மகாபலி வாணதிரையனுக்கு விக்கிரம சோழன் காலத்தில் மாளிகை மற்றும் மனை முதலியவை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் தஞ்சை – திருவாரூர் மாட்டங்களில் வாணதிரையர்கள் வாழ்த்து வருகின்றனர்.

வாணாதிரையர், சோழகர், மழவரையர்

மனுவேந்தனின் மந்திரியாக குறிப்பிடப்படும் பாலையூருடையான் எனும் பெயருக்கு ஏற்ப இன்றும் குடவாசல்- திருவாரூர் வழிதடத்தில் பாலையூர் எனும் ஊர் உள்ளது.

முதலாம் சோழ வேந்தனின் தலைநகராக திருவாரூர் புகழ்பெற்று விளங்கியது இலக்கியம் மற்றும் கல்வெட்டு ஆதாரங்களில் உறுதிபடுத்தப்படுகிறது.  சோழ நாட்டில் இருந்த நகரங்களிலேயே திருவாரூர் தான் தொன்மையுடன் விளங்கியதை சோழர் கால ஆவணங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இலங்கை வரலாறு கூறும் பழமையான நூலான மகாவம்சத்திலும் மனுநீதி சோழர் கால நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் நடந்த காலம் கிமு 2 இரண்டாம் நூற்றாண்டு என மகாவம்சம் குறிப்பிடுகிறது.(Geigers mahavamsa ch 21-25)

இன்றும் திருவாரூர் ,தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் சோழங்கர், சோழகர், சோழங்கத்தேவர், சென்னியர்(சோழர்),சென்னித்தலைவர், சோழப்பிரியர்,சோழத்தரையர்  சோழகோன், சோழங்கநாட்டார்,  சோழன் கிளையார், சோணாடர், சோணாடுகொண்டார், செம்பியங்கொண்டார், செம்பியத்தரசர் முதலிய பட்டங்களை கொண்ட கள்ளர் மரபினர் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட இராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சோழர்களின் முதல் தலைநகரமாக விளங்கிய திருவாரூர் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்…..

Total views 2,041 , Views today 1 

Author: admin

1 thought on “முதல் சோழன் உதித்த திருவாரூர்

  1. நன்றி சகோ…
    சோழகர் மாமன் முறை..
    எங்க அம்மா சோழகர் தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *