தஞ்சையை மீட்ட புதுக்கோட்டை தொண்டைமான்

சாதாரண சிப்பாயாக இருந்து படிப்படியாக மைசூரின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ஐதர் அலி மாபெரும் படைபலத்தை பெற்று தென்னிந்தியாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர எண்ணினான். 

ஆங்கிலேயரும் ப்ரெஞ்சுகாரரும் அதிகாரப்போட்டியில் இருந்தப்போது ப்ரெஞ்சு அரசாங்கத்துக்கு பேராதரவை அளித்து வந்தான். கிபி 1779 ல் ஐரோப்பாவில் ஆங்கிலேயருக்கும் ப்ரெஞ்சு காரர்களுக்கும் ஏற்பட்ட போரின் விளைவு பற்றி எரிய, போர் மேகங்கள் தென்னிந்தியாவிலும் சூழ்ந்தது. ப்ரெஞ்சு காரர்களின் மாகே துறைமுகத்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர், இதனால் ஐதர் அலிக்கு வெளிநாட்டில் இருந்து வந்துக்கொண்டிருந்த போர் தளவாடங்களின் வருகை நின்றது. ஆங்கிலேயருக்கு எதிராக ப்ரெஞ்சு காரர்கள் தலைமையில் பெரும் கூட்டணியை உருவாக்க எண்ணினார் ஐதர் அலி.
கிபி 1780 , ஜுலை மாதம் பெரும்படை கொண்டு மைசூரில் இருந்து கிளம்பிய ஐதர், இரு வாரங்களில் பல குறுநிலமன்னர்களை வென்றான். அடுத்து மதுரையை தாக்கிய ஐதர் அலி 11 கிராமங்களை தீக்கிரையாக்கினான். நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பாளையக்காரர்களை தன்னுடன் இணைய வலியுறுத்தினான். தமிழகத்தில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரும் ஐதரின் பக்கம் சென்றனர். தஞ்சை மன்னர் ஐதருடன் சேரும் பேச்சுவார்த்தையில் இருந்தார். தஞ்சை மன்னர் எந்த முடிவும் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். புதுக்கோட்டை அரசர் ராய ரகுநாத தொண்டைமான் நவாப் மற்றும் ஆங்கிலேயர் பக்கம் இருந்தார். தமிழகத்தின் மற்ற ஏனைய பாளையக்காரர்கள் ப்ரெஞ்சு கூட்டணியில் ஐதருக்கு ஆதரவாக இருந்தனர். தனது பக்கம் வரும்படி ஐதர் அலி அனுப்பிய தூதுகளை மறுத்து தொடர்ந்து ஆங்கிலேயர் பக்கம் இருந்தார் தொண்டைமான்.(General history of pudukkottai state 1916 R.aiyar page 262-263)


தஞ்சையை சூரையாடிய ஐதர் அலி

மே மாதம் 1781, ஐதர் அலி தன் பக்கம் சேராத தஞ்சையை தாக்கினான்.23 ஜூலை 1781 அன்று தஞ்சையின் கோட்டை தவிர மற்ற அனைத்து பகுதிகளையும் ஐதர் கைப்பற்றினான்.தஞ்சையின் மற்ற அனைத்து கோட்டைகளையும் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். தஞ்சையின் மன்னர் துளஜா தலைமறைவானார். தஞ்சையில் இருந்து கால்நடைகள் கடத்தப்பட்டன. விவசாய நிலங்கள் கொளுத்தப்பட்டது. கிராமங்கள் தீக்கிறையாயின.குளங்கள் மற்றும் ஏரிகள் உடைக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தப்பட்டது. கிணறுகளில் மனித பிணங்களே மிதந்தன. ஆயிரக்கணக்கான சிறுவர்கள் அடிமைகளாக மைசூருக்கு இழுத்துசெல்லப்பட்டனர். கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டு, பழமையான தெய்வ சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.அந்த சமயத்தில் தஞ்சையில் வசித்து வந்த பாதிரியார் சுவார்ச் தனது குறிப்பில் :-

வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், கோயில்கள் சூரையாடப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான சிறுவர்கள் (7-8 வயது) மைசூருக்கு கடத்தப்பட்டதால் அவர்களின் பெற்றோர்கள் கண்ணீருடன் தஞ்சை வீதிகளில் சுற்றி வருவதாகவும், பல பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், பல ஏரிகளும் அணைகளும் உடைக்கப்பட்டு விவசாய நிலங்கள் பாழாகி போனதாக எழுதியுள்ளார்.
ஐதரால் மைசூருக்கு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இஸ்லாமியராக மதமாற்றம் செய்யப்பட்டு, அனைவரையும் தனது பணியாளராக மாற்றினான். விவசாயம் பல ஆண்டுகள் தடைப்பட்டது. வறட்சியால் வீதிகளில் தினமும் மக்கள் மடிந்து விழுந்தனர். பிணங்களை அகற்றி மொத்தமாக எரிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.மக்கள் பசியால் கண்ணீர் விட்டனர். ஒரு சமயம் 1200 பேர் எலும்புக்கூடுகளை போல் நிற்க கூட முடியாமல் உணவுக்காக கையேந்தி நின்றுக்கொண்டு இருந்ததாகவும், பசியால் வீதிகளில் இறந்து கிடந்தவர்களின் உடல்களை நாய்களும், பறவைகளும் தின்றதாகவும், அவர்களுக்கு உதவ சென்ற கிறிஸ்தவ மிசனரி குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.(The history of christian missions 1864 p147-148)(General history of pudukkottai state 1916 R.aiyar page 264-265)


தஞ்சையில் நடந்த ஐதர் கலகத்தை நேரில் கண்ட 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  பாதர் பவுச்சே(Baauche) தன்னுடைய புத்தகமான Marutha pandiyan – the fateful 18 th century எனும் நூலில் கூறியிருப்பதாவது:-

” 1781ல் தஞ்சையை ஐதர் அலி தாக்கி சூரையாடியதில், அங்குள்ள வளமான நிலங்கள் பாழானது, கால்நடைகள் திருடப்பட்டது, வாய்க்கால்கள் அழிக்கப்பட்டது,  மக்கள் உண்ண உணவின்றி கண்ணீர் வடித்தனர், 12000 பேருக்கு மேல் திப்பு சுல்தானால்(ஐதரின் மகன்) கடத்தப்பட்டனர், 6500 பேர் நாட்டை விட்டு வெளியேறினர், எங்கும் குழப்பமும் அழுகுரலுமாக இருந்தது, மீண்டும் விவசாயம் செய்ய விதைகள்கூட இல்லை, நிலத்தை உழ கால்நடைகள் இல்லை, அணைகள் உடைக்கப்பட்டன, தஞ்சையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ஆண்களும், கைவினைஞர்களும் பள்ளத் தாக்குகளில் தங்க வைக்கப்பட்டனர், அவர்களில் பலர் கொள்ளிடத்திற்கு வடக்கே உள்ள காடுகளிலும், தொண்டைமான் நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர், தஞ்சையில் இருந்து சாரை சாரையாக தானியங்களை சுமந்துக்கொண்டு மக்கள் வெளியேறினர், தஞ்சையில் இருந்து குடிபெயர்ந்த பெருமளவிலான உடையார்கள் தொண்டைமான் சீமையில் அடைக்கலம் புகுந்தனர்” 


தஞ்சையில் ஐதர் அலி செய்த கலகம் பற்றி கூறும் தஞ்சை மராத்தியர் மோடி ஒலை ஆவணங்கள் பின்வரும் செய்திகளை தருகிறது:-

” அயிதர்(ஐதர் அலி) வந்தவன் பெரிய அணைக்கரையை வெட்டிக்கவிழ்த்தான்”
” அயிதர் படை அணைகள் முதலியவற்றை அழித்ததோடு நாட்டையும் கொள்ளையடித்தது”
” அயிதர் படை வந்திறங்கி அக்கிரகாரம் பண்டாரவாடை மரம் செடிகள் எல்லாம் போய் சுத்தமாக ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன்” 
” அயிதர் படையெடுப்பால் ஏற்பட்ட பஞ்சத்தை சமாளிக்க முடியாமல்,  பலர் தஞ்சையை விட்டு இடம்பெயர்ந்தனர் “
” கோயில்களில் இருத்த விக்கிரகங்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, மக்களால் மறைத்து வைக்கப்பட்டது ” 
” அயிதரலிகான் தஞ்சை கோட்டைக்கு மேலவந்து சீமையெல்லாம் ஜப்தி பண்ணினான்,  தஞ்சாவூர் ராச்சியத்திலே பொல்லாத பஞ்சம், தானியம் கொள்ளக்கிடைக்காமல் வெகு பிறசைகள் நித்தம் அறனூறு எழுநூறு இத்தப்படிக்கு செத்துப்போய் விட்டார்கள்,  அந்த சமயத்தில் மனுசாள் மனுசாளைக்கூட பட்சித்தார்கள் ” 
(தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும் கே எம் வெங்கட்ராமையா பக் 91-93)/ தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு கே எம் வெங்கட்ராமையா பக் 139)
மேலே கொடுக்கப்பட்ட வரலாற்று தகவல்கள் மூலம் ,  ஐதர் அலி தஞ்சையில் ஏற்படுத்திய பெரும் சேதத்தையும், அதனால் விளைந்த பஞ்சம் மற்றும் உயிரிழப்புகளின் கோர முகத்தை நமக்கு காட்டுகிறது. தஞ்சையை சூரையாடிய ஐதர் அலி தனது அடுத்த இலக்காக புதுக்கோட்டை சமஸ்தானத்தை தாக்கத் தொடங்கினான்.

புதுக்கோட்டையை தாக்கிய ஐதர் அலி

ஐதர் படையின் முதல் தாக்குதல்:-
கிபி 1781 ல் , ஐதர் அலியின் பெரும்படை தனது எதிரணியில் உள்ள புதுக்கோட்டை தொண்டைமானை அழிக்க புறப்பட்டது. புதுக்கோட்டை எல்லையில் இருந்த ஆதனக்கோட்டை எனும் ஊரின் வழியே ஐதர் அலி படையின் ஒரு பிரிவு தாக்கியது. ராய ரகுநாத தொண்டைமான் தனது தளபதி சர்தார் மண்ண வேளார் தலைமையில் படையை அனுப்பி, ஐதரின் படைகளை ஆதனக்கோட்டையில் எதிர்க்கொண்டு விரட்டி அடித்தனர். பல நூறு ஐதர் குதிரை வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். (சர்தார் மண்ண வேளார் வம்சாவளிகள் இன்றும் வைத்தூர் அம்மன் கோயிலில் முதல் மரியாதை பெறுகின்றனர். இவர்கள் புதுக்கோட்டை பல்லவராயர்களுடன் மண உறவில் இணைந்தவர்கள்) . இந்த சமயத்தில் ஐதர் அலியின் கைகளில் சிக்கியுள்ள கீழாநிலைக்கோட்டையை மீட்கும்படி தஞ்சை மன்னர் தொண்டைமானுக்கு கடிதம் எழுதினார். ஐதருக்கு ஆதரவாக மருங்காபுரி பாளையக்காரனான பூச்சி நாயக்கனும், நத்தம் பாளையகாரன் லிங்க நாயக்கன் புதுக்கோட்டையில் தாக்குதல் நடத்தினர். தொண்டைமான் இவ்விரு பாளையக்காரர்களையும் விரட்டி அடித்தார். புதுக்கோட்டை தொண்டைமானின் ஏறுமுகத்தை அறிந்த தஞ்சையை சார்ந்த அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் தொண்டைமானிடம் தஞ்சம் அடைந்தனர். ஐதர் அலி தாக்குதலில் இருந்து தப்ப பெரம்பூர் ஊரை சேர்ந்த மக்கள் ஒரு வாய்க்காலை உடைத்துவிட்டதாகவும்,  பிற்காலத்தில் அந்த வாய்க்கால் சீரமைக்கப்பட்டு அதற்கு ” ஐதர் வாய்க்கால் என பெயரிடப்பட்டதாக புதுக்கோட்டை வரலாறு கூறுகிறது. 

ஐதர் படையின் இரண்டாம் தாக்குதல் :-
ஐதர் அலியின் மற்றொரு படைப்பிரிவு புதுக்கோட்டை – திருச்சி எல்லையில் உள்ள மல்லம்பட்டி, எனும் பகுதியின் வழியாக புதுக்கோட்டையை தாக்கினர்.ராய ரகுநாத தொண்டைமான் தானே நேரடியாக களத்தில் இறங்கினார்.ஐதர் அலியின் வீரர்களின் தலைகளை கொய்தார்.
தொண்டைமானின் வீரத்தை பாடும் வெங்கண்ண சேர்வைக்காரர் வளந்தான் எனும் நூல்
” மலம்பட்டி வாடியிலே வந்த ஐதர் சேனையை தலையோட வெட்டி சமர்பொருதுந் தொண்டைமான்” என இந்நிகழ்வை குறிப்பிடுகிறது.

ஐதர் படையின் மூன்றாம் தாக்குதல் :-

ஐதரின் தளபதி ஒருவனை, ஒற்றைக்குதிரைக்காரன் என மக்கள் குறிப்பிட்டுள்ளனர். அவனும் மற்றொரு பகுதி வழியாக தாக்குதல் நடத்தியுள்ளான். அவனது தாக்குதலை தவிர்க்க எண்ணிய பேராம்பூர் மக்கள், ஒரு ஏரியில் உடைப்பை ஏற்படுத்தினர். உடைப்பினால் ஏற்பட்ட வாயக்கால் இன்றும் ஐதர் வாயக்கால் என அழைக்கப்படுகிறது.இந்த ஒற்றைக்குதிரைக்காரன் புதுக்கோட்டை பகுதியில் தாக்குதல் நடத்தினான். இந்த போர் நிகழ்ச்சிகளை பற்றி அம்புநாட்டு வளந்தான் மற்றும் வெங்கண்ண சேர்வைக்காரர் வளந்தான் எனும் இரு இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி தன் நாட்டில் புகுந்து சூரையாட தொடங்கிய ஒற்றைக்குதிரைக்காரனை தொண்டைமான் விரட்டி அடித்து, விராலிமலை பகுதியில் ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவில் வைத்து கொன்றுள்ளார்.

” மஸ்தகம் பதித்ததொரு விராலிமலை தன்னில்ஒற்றைக்குதிரைக்காரன் ஒருமையாக வந்தவனை பற்றித் துரத்திவெட்டும் பகதூர் தொண்டைமான்” 
என தொண்டைமானின் வீரத்தை புகழ்கிறது. தேசத்தில் இருந்த தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை சாப்பிட வைக்க ஒற்றைக்குதிரைக்காரனிடம் பிடித்து கொடுத்து விடுவேன் என மிரட்டும் பழக்கம் கிபி 20 ஆம் நூற்றாண்டு வரை இருந்துள்ளதை புதுக்கோட்டை வரலாறு எழுதிய ராதாகிருஷ்ண ஐயர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கிபி 1781, ஜூலை மாதம், ஐதர் அலியின் மகனான திப்புவுக்கு, ஒற்றர்கள் மூலம் தகவல் வந்தது. தொண்டைமானின் படைகள் தஞ்சையில் இருந்த சிறுபடையோடு திருக்காட்டுப்பள்ளியை மீட்க வருவதே அந்த தகவல்.சையது சாகிப் எனும் ஐதரின் தளபதி தாக்குதலை சமாளிக்க தயாரானார்கள். ஆனாலும் தொண்டைமான் கள்ளர் படையால் ஐதரின் படை விரட்டப்பட்டு , திருக்காட்டுப்பள்ளி மீட்கப்பட்டது. இந்த வெற்றியை குறிப்பிடும் ஆங்கில ஆவணம் , ” The officer commanding the troops had frequently been shamefully defeated by kullars of tondaiman and regular cavalry of tanjore ” என விளக்கியுள்ளது. 
(General history of pudukkottai state 1916 R.aiyar page 267)

மன்னார்குடியை மீட்ட தொண்டைமான்

பட்டுக்கோட்டை, தஞ்சை, அறந்தாங்கி, கீழாநிலை ஆகிய பகுதிகள் ஐதரின் வசம் தொடர்ந்து இருந்தது. கிபி 1781, செப்டம்பர் மாதம், தொண்டைமான் படைகள் மன்னார்குடியில் இருந்து ஐதரின் படைகளை விரட்டியது. சிதறி ஒடிய ஐதர் படை பட்டுக்கோட்டையில் தஞ்சம் அடைந்தது.

தஞ்சை, அறந்தாங்கி, கீழாநிலை, பட்டுக்கோட்டையை மீட்ட புதுக்கோட்டை பல்லவராயர் படை


புதுக்கோட்டை தொண்டைமான் அடுத்த தாக்குதலுக்கு தயாரானார். தஞ்சை ஐதரின் கோர பிடிகளில் சிக்கித் தவித்தது. ஆங்கிலேயரும் நவாபும் ஐதரை விரட்டியடிக்க வேண்டுகோள் விடுத்தனர். 
தஞ்சையை மீட்க வலிமையான படை ஒன்றை உருவாக்கினார் தொண்டைமான். பெருங்களூர் போரம் பல்லவராயர், ராமசாமி ராங்கியத்தேவர், சுப்ரமணிய முதலியார் தலைமையில் பெரும்படையை அனுப்பினார். தஞ்சை, கீழாநிலைக்கோட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய பகுதிகள் மீட்கப்பட்டது. 
ஐதருக்கு ஆதரவாக செயல்பட்ட, சேதுபதியின் உறவினர் மாப்பிள்ளை தேவன், தொடர்ந்து போரிட்டார். அவரை வீழ்த்த நலம் கொண்ட ஆவுடையப்ப சேர்வைக்காரர் தலைமையில் ஒரு படையை அனுப்பினார் தொண்டைமான். மாப்பிள்ளை தேவன் தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கிபி 1781 இறுதியில் ஐதர் படை சோழ தேசத்தில் இருந்து பின்வாங்கியது. 
சோழதேசத்தில் துலுக்கரால் ஏற்பட்ட கலகங்களை ஒடுக்கி, ஐதர் படையை விரட்டி அடித்து, மக்களையும் பாரம்பரிய சின்னங்களையும் காக்க தன் உயிரை துட்சமாக எண்ணி போரிட்ட தொண்டைமான் தலைமையிலான படையினருக்கு சோழ நாட்டு மக்கள் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளனர். தஞ்சையை ஆட்சி செய்த மராத்திய மன்னர் தன் உயிரை காக்க தப்பி ஒடியபோதும், தன் நாடான புதுக்கோட்டையில் எந்த சலசலப்பும் ஏற்படாமல் காவல் தெய்வங்களை போல காத்து நின்றவர் புதுக்கோட்டை மன்னர் ராய ரகுநாத தொண்டைமான்! ராய ரகுநாத தொண்டைமானாரின்  வீரமும்,  போர் வியூகங்களும் காலத்திற்கும் போற்றுதலுக்குரியது! 
சோழ தேச கேடு களைந்த ராய ரகுநாத தொண்டைமான் என்றால் மிகையாது! 
General history of pudukkottai state R aiyar 1916/ p 264-271
தொகுப்பு : www.sambattiyar.com

Total views 1,620 , Views today 2 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *