பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருவரங்கம் அரங்கநாதர் கோயில் 108 வைணவ தலங்களில் முதன்மையானதாக அமைந்துள்ளது. பழம்பெருமை வாய்ந்த இக்கோயிலின் 2 வது திருச்சுற்றில் வடமேற்கு மூலையில் தொண்டைமான் மன்னரால் கட்டப்பட்ட மண்டபம் அமைந்துள்ளது. இது தொண்டைமான் குறடு என அழைக்கப்படுகிறது.

தொண்டைமான் குறடு அமைந்துள்ள இந்த 2ஆம் திருச்சுற்றில் மதுரை நாயக்க மன்னரான விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தாரின் உருவ சிற்பங்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் இரண்டாம் பிரகாரத்தில் விஜய ரங்க சொக்கநாத நாயக்கரின் திருப்பணிகள் நடைபெற்றுள்ளதை உறுதியாக கூறலாம்.
இக்கால கட்டத்தில் ரங்க கிருஷ்ண முத்து விரப்ப நாயக்கரின் கோரிக்கையை ஏற்று நாகலாபுரம் உள்ளிட்ட பாளையங்களை புதுக்கோட்டை மன்னர் வகையராவை சேர்ந்த நமண தொண்டமான் வென்று அடிக்கினார். இவரது வீரத்தை மெச்சிய முத்து வீரப்ப நாயக்கர் தொண்டைமானுக்கு பல உரிமைகளும் சன்மானங்களும் அளித்தார். நமண தொண்டைமானும் முத்து வீரப்ப நாயக்கருடனான தன்னுடைய நட்பை குறிப்பிடும் வகையில் ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நமண தொண்டைமான் என்றே தன்னை அழைத்துக்கொண்டார்.

வைணவத்தை பின்பற்றியவர்களான நாயக்கர்கள் ஸ்ரீரங்கத்திற்கு பல்வேறு கொடைகளை அளித்துள்ளனர். இவர்களுடன் நட்பு கொண்டிருந்த புதுக்கோட்டை தொண்டைமான்களும் வைணவத்தை வளர்க்க பல்வேறு திருப்பணிகள் செய்தனர். ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நமண தொண்டைமான் புதுக்கோட்டை குளத்தூரில் ஒரு பெருமாள் கோயிலையே கட்டிவித்து வரதராஜ பெருமாள் என பெயரிட்டார்.
தொண்டைமான்கள் ஸ்ரீரங்க பெருமாள் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் உள்ள திருப்பூர் எனும் ஊரை ஸ்ரீரங்கத்திற்கு தானமாக அளித்துள்ளதை புதுக்கோட்டை கல்வெட்டு எண் 877 குறிப்பிடுகிறது.கிபி 1712 ஆம் ஆண்டை சேர்ந்த இக்கல்வெட்டில் ஸ்ரீ ரகுநாதராய தொண்டைமான் மற்றும் நமண தொண்டைமான் ஸ்ரீரங்கத்திற்கு தானம் அளித்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

நமண தொண்டைமானின் மகனான ராமசாமி தொண்டைமான் மதுரை நாயக்க மன்னரான விஜய ரங்க சொக்கநாத நாயக்கரின் பெயரை தன் பெயரொடு சேர்த்து விஜயரங்க சொக்கநாத ராமசாமி தொண்டைமான் என அழைத்துக்கொண்டார். விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் பல விலை உயர்ந்த ரத்தனங்களை ஸ்ரீரங்கத்திற்கு அளித்துள்ளார்.
தங்களது நண்பர்களான மதுரை நாயக்கர் வழியில் வைணவ கோயில்களுக்கு தானங்கள் அளித்த தொண்டைமான்கள், ஸ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தொண்டைமான் குறடு எனும் மண்டபத்தை அமைத்து உள்ளார்கள். விஜயரங்க சொக்கநாத தொண்டைமான் கள்ளத்திருமங்கை ஆழ்வார் வம்சத்தில் உதித்தார் என புதுக்கோட்டை கல்வெட்டு எண் 879 குறிப்பிடுகிறது. எனவே ஸ்ரீரங்கத்தில் உள்ள தொண்டைமான் குறடு, புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தை சேர்ந்த நமண தொண்டைமான் காலத்திலோ அல்லது இவரது மகனான ராமசாமித் தொண்டைமான் காலத்திலோ கட்டப்பட்டு இருக்கலாம் என்பதே வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் சாத்தியமான ஒன்றாக அமைகிறது.
ஆக்கம்: இளையர் பெருமகன்
Total views 1,305 , Views today 1