தமிழக வரலாற்றில் தங்களுக்கென தனி முத்திரை பதித்தவர்கள் தொண்டைமான் மரபினர். தமிழக பேரரசுகளிடம் படைத்தலைவர், அமைச்சர் என உயர் பதவிகளை வகித்த தொண்டைமான்கள் புதுக்கோட்டை வட்டாரத்தில் அரசர் நிலைக்கு உயர்ந்து விளங்கினர்.
தொண்டைமான்களின் பூர்வீகமாக சங்க இலக்கியங்கள் கூறுவது இன்றைக்கு திருப்பதி என அழைக்கப்படும் வேங்கட மலையாகும். தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கிய வடவேங்கடத்தில் புகழ்பெற்ற மன்னராக அறியப்படுவர் கள்ளர் கோமான் புல்லி என்பவராவார். இவரே வரலாற்றில் தொண்டையர் என குறிக்கப்பட்ட முதல் அரசராவார்.
வேங்கடமலையில் தொடங்கும் தொண்டைமான்களின் வரலாறு பிற்காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் மன்னர்களிடம் இன்றும் தொடர்கிறது.
தொண்டைமான்களின் நெடிய வரலாறு முழுவதும் யானைகளும் பின்னிப்பிணைந்தே தொடர்கிறது. திருப்பதி மலையில் யானைகளை பிடித்து அவற்றை போருக்கு பழக்குவதை கள்ளர் கோமான் புல்லி வழக்கமாக கொண்டிருந்ததாக சங்க இலக்கியங்கள் உரைக்கின்றன.
தொண்டைமான்களின் வரலாற்றில் யானைகளின் தொடர்பை காண்போம்.

தொண்டையர்கள் வல்லமையுடைய போர் யானைகள் கொண்டிருந்ததாகவும், அவர்களின் நாடு வேங்கடமலை என்றும் அகநானூறு பாடல் 213 குறிப்பிடுகிறது.
பகைவர்களின் நாட்டை வென்று அடிமைப்படுத்தும் வேங்கடத்தை ஆண்ட தொண்டையர்கள் போர் பயிற்சி பெற்ற யானைகளையும், வளம் பொருந்திய தேர்களையும் உடையவர் என்று குறுந்தொகை பாடல் 260 உரைக்கிறது.
வேங்கட மலையாண்ட புல்லியிடம் இருந்து பெற்ற போர் யானைகளைக் கொண்டு பாண்டியர் போர்களில் வெற்றி பெற்றதாக அகநானூறு பாடல் 27 கூறுகிறது.
கள்வர் கோமான் புல்லி மிகுந்த போர் திறனை கொண்ட யானைகளை கொண்டிருந்தாக ” மாஅல் யானை மறப்போர் புல்லி ” என அகநானூறு பாடல் 209 போற்றுகிறது.
வேங்கடத்தை ஆண்ட புல்லியின் வீரர்கள் யானைக் கன்றுகளை பிடித்து வந்து அவற்றை கள்ளுக்காக விற்பார்கள் என அகநானூறு பாடல் 83 குறிப்பிடுகிறது.
புல்லியின் வேங்கடமலையில் யானைகள் முழுங்குவது இடி சத்தத்திற்கு ஒப்பாக விளங்கும் என அகநானூறு பாடல் 359 குறிப்பிடுகிறது.
திருப்பதியில் இருந்து தென் தமிழ்நாட்டில் குடியேறிய தொண்டைமான் மரபினர் அன்பில், அறந்தாங்கி, சூரைக்குடி முதலிய பகுதிகளில் குடியேறினர். புதுக்கோட்டை தொண்டைமானார்கள் யானைகளை கையால்வதில் வல்லவர்களாக திகழ்ந்தனர்.
கிபி 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீவல்லப பாண்டியதேவர் கால கல்வெட்டில் அம்புநாட்டு தொண்டைமான் ஒருவர் ” ஆனை தொண்டைமானார்” என குறிப்பிடப்பட்டுள்ளார். யானைகளுக்கும் தொண்டைமான்களுக்கும் உள்ள தொடர்பினால் தங்களது பெயரிலேயே யானையை ஆனை என பயன்படுத்தியுள்ளனர்.
கிபி 1639 ஆம் ஆண்டில் விசய நகர மன்னர் ஸ்ரீரங்க ராயர் புதுக்கோட்டை வழியாக இராமேஷ்வரம் செல்லும் போது அவரது யானைக்கு மதம் பிடித்து கட்டுப்பாட்டை இழந்தது. யானையை அடக்குவதில் வல்லவரான ஆவுடை ரகுநாத தொண்டைமான் ஸ்ரீரங்கராயரின் யானையை அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தார். இவரது வீரத்தை கண்டு மெச்சிய ஸ்ரீரங்கராயர் தொண்டைமானுக்கு பல்வேறு விருதுகளை வழங்கினார்.
ஆவுடை ராய தொண்டைமான் மீது பாடப்பட்ட இராய தொண்டைமான் அணுராகமாலை எனும் நூலில் ” இந்நீலமன் ஸ்ரீரங்கராயருக்கு ராயத் தொண்டை மன்னன் பிடித்தனுப்பும் மால்யானை” என குறிப்பிடப்பட்டுள்ளது. தொண்டைமான் யானைகளை பயிற்றுவித்து அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்ததை இது விளக்குகிறது.

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதியுடன் எல்லைப் பிரச்சனையில் ஈடுபட்ட தஞ்சை நாயக்க மன்னரின் பட்டத்து யானையை புதுக்கோட்டை ரகுநாதராய தொண்டைமான் கவர்ந்து மன்னார்குடி வழியாக இராமநாதபுரத்தில் சேர்த்தார். இது தஞ்சை மன்னருக்கு மிக்ப்பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது.
ஒரு சமயம் கிழவன் சேதுபதியின் பட்டத்து யானை மதம் பிடித்து ராம்நாட்டை சூரையாட தொடங்கியது. அக்காலத்தில் யானைகளை கையாளைவதில் புகழ்பெற்று விளங்கிய புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தை சேர்ந்த நமண தொண்டைமான் வீரத்துடன் யானையை அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தார்.

இதே போல் தொண்டைமான்களின் அரச முத்தியரையிலும் யானைகளே இடம்பெற்று இருந்தது.
சங்க காலத்தில் திருப்பதியில் யானைகளுக்கும் தொண்டையர்களுக்கும் தோன்றிய தொடர்பு பிற்காலத்தில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களின் காலம் வரையிலும் தொடர்ந்ததை வரலாற்று ஆவணங்கள் உணர்த்துகின்றன.
Article by www.sambattiyar.com
Total views 103 , Views today 1