உடையாளூரில் இருப்பது இராசராசன் சமாதியா?

தஞ்சை மாவட்டம் கீழப்பழையாறை அருகில் உடையாளூர் எனும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள வயல்வெளியில் ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதே ஊரில் அமைந்துள்ள பால்குளத்து அம்மன் கோயிலில் கிடைத்த கல்வெட்டையும் இங்கு கிடைத்த சிவலிங்கத்தையும் தொடர்பு படுத்தி சிவலிங்கம் கிடைத்த இடமே முதலாம் ராஜராஐசோழனின் நினைவிடம் எனும் தகவல் மக்களிடையே பரவியது.  பால்குளத்து அம்மன் கோயிலில் கிடைத்த கல்வெட்டைக் கொண்டு இத்தகவலை ஆராய்வோம்.

பால்குளத்து அம்மன் கோயில் கல்வெட்டு

ஸ்வஸ்திஸ்ரீ சகலபுவன சக்கரவரத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு நாற்பத்திரண்டாவது ஸ்ரீ சிவபாதசேகர மங்கலத்து எழுந்தருளி நின்ற ஸ்ரீ ராஜராஜ தேவரான ஸ்ரீ சிவபாதசேகர தேவர் திருமாளிகை முன்பில் பெரிய திருமண்டப முன்பில் எடுப்பு ஜீநித்தமையால் இம்மண்டபம் எடுப்பித்தார் பிடவூர் பிடவூர் வேளான வேளிர் அரிகேசவனான கச்சிராஜர்காக இவ்வூர் நாயகம் செய்துநின்ற ஜயசிங்க குலகால வளநாட்டு குளமங்கலநாட்டு சாத்தமங்கலத்து சாத்தமங்கலமுடையான் நம்பிடாரன் நாடறிபுகழன் இவருடன் விரதங்கொண்டு செய்தார் இவ்வூர் பிடார்களில் ராஜேந்திர சோழனு(க்க) பநாயகநான ஈசான சிவரும் தேவநாயகமான அறங்காட்டிப் பிச்சரும் “( ARE 315 of 1927)

கல்வெட்டு தரும் செய்தி: கிபி 1112 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட முதலாம் குலோத்துங்க சோழன் காலத்து இக்கல்வெட்டில் சிவபாதசேகரமங்கலம் எனும் ஊரில் ( உடையாளூரில்)  ஸ்ரீசிவபாதசேகர தேவர்  திருமாளிகை எனும் பெயரில் ஒர் மாளிகை அமைந்து இருந்துள்ளது.  இம்மாளிகையின் முன்பகுதியில் அமைந்திருந்த மண்டபம் சிதைவுற்றதால்,  பிடவூர் எனும் ஊரினை சார்ந்த பிடவூர் வேளாண் வேளிர் அரிகேசவனான கச்சிராஜர் என்பவர் சிதைவுற்ற மண்டபத்தை மீண்டும் சீரமைத்து உள்ளார்.  அப்போது இவர் செய்த பணிக்கு உதவியாக ஜெயசிங்ககுலகால வளநாட்டு குளமங்கலநாட்டின் ஒர் ஊரான சாத்தமங்கலம் எனும் ஊரினை சேர்ந்த நம்பிடாரன் நாடறி புகழன் எனும் உடையாளூரின் நிர்வாக அலுவலரும்,  உடையாளூரின் பிடாரர்களில்( சிவாச்சாரியார்களில்)  ராஜேந்திர சோழ அணுக்க நாயகனான ஈசான பண்டிதரும்,  அறங்காட்டி பிச்சர் என்பவரும் விரதம் இருந்து மேலே குறிப்பிட்டுள்ள கச்சிராஜனுக்காக இப்பணியை செய்தனர் என கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ” ஸ்ரீ ராஜராஜ தேவரான சிவபாதசேகர தேவர் திருமாளிகை” எனும் வரியினைக் கொண்டு இப்பகுதியில் கிடைத்த சிவலிங்கமே ராஜராஜ சோழனின் நினைவிடம் அமைந்துள்ள பகுதி என தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

திருமாளிகை என்றால் என்ன?

தஞ்சை பெரிய கோயிலில் கிடைத்த முதலாம் ராஜேந்திர சோழனின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டை சேர்ந்த கல்வெட்டில் கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் இராஜேந்திர சோழனின் அரண்மனையில் அமைந்துள்ள ஒரு மாளிகை ” முடிகொண்டசோழன் திருமாளிகை”  என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்பற்றி குறிப்பிடும் கல்வெட்டு ” உடையார் ராஜேந்திர சோழத்தேவர் கங்கைக்கொண்ட சோழபுரத்து கோயிலினுள்ளால்(palace) முடிகொண்ட சோழன் திருமாளிகை” என உரைக்கிறது. இம்மாளிகையில் இருந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு முதலாம் ராஜேந்திரன் சில கொடைகளை அளித்துள்ளதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.( SII vol 02)

 

SII – vol 02 – pg 109

இதன் மூலம் ராஜேந்திர சோழன் காலத்தில் அவரது பெயராலேயே கங்கை கொண்ட சோழபுரத்தில் ” முடிகொண்ட சோழன் திருமாளிகை” எனும் பெயர் கொண்ட மாளிகை இருந்துள்ளதை அறிகிறோம். சோழ மன்னர்கள் தாங்கள் வாழும் காலத்திலேயே தங்களது பெயரில் மாளிகைகளை எழுப்பியிருந்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மன்னர் வாழும் இடம் மிகவும் புனிதத்திற்கு உரியதாக கருதப்பட்டு ” கங்கைகொண்ட சொழபுரம் கோயில்” என இராஜேந்திர சோழனின் அரண்மனை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் உடையாளூரில் இருந்த திருமாளிகையின் முன் மண்டபத்தை சீரமைக்கும் பணியின்போது பிடாரர்கள் விரதம் இருந்து பணி செய்துள்ளனர்.

சிறுதொண்டர் திருமாளிகை

கிபி 1004 ஆம் ஆண்டை சேர்ந்த திருச்செட்டாங்குடி கல்வெட்டில் அவ்வூரில் உள்ள கடவுள் சீராள தேவரை தரிசிக்க வரும் அடியார்களுக்கு , சிறுதொண்டர் நம்பி மாளிகையில் ஆகாரம் இட அளிக்க கொடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே ஆண்டை சேர்ந்த மற்றொரு கல்வெட்டில் சிறுதொண்டர் நம்பி என்பவர் சீராள தேவருக்கு வழிபாட்டு பணி செய்து வந்தவர் என்றும் இவரது மறைவுக்கு பின்பு சிறுதொண்டர் பெயராலேயே மாளிகை எழுப்பப்பட்டு சிறுதொண்டர் திருமாளிகை என்றும் அழைக்கப்பட்டதை அறிகிறோம்.

கிபி 1196 ஆம் ஆண்டை சேர்ந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டில் ”  திருச்செட்டாங்குடியில் உள்ள சிறுத்தொண்டர் திருமாளிகையில் சீராளப் பிள்ளையார் நின்று அருள் பாலித்து விட்டு திருவீதி உலா சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடியாரான சிறுதொண்டர் நம்பி என்பவரின் பெயரால் திருமாளிகை ஒன்று அமைக்கப்பட்டு இருந்ததையும், இந்த மாளிகை திருப்பணிக்களுக்கு பயன்பட்டுள்ளதையும் அறிகிறோம்.

இவை தவிர சோழ மன்னர்கள் ஆலயங்களில் எடுப்பித்த திருச்சுற்றுகளும்,  மண்டபங்களும் இவர்களின் பெயரிலேயே அழைக்கப்பட்டன. சிதம்பரம் கோயிலில் விக்ரம சோழன் எடுப்பித்த முதல் திருச்சுற்று விக்ரம சோழன் திருமாளிகை என்றும்,  இரண்டாம் திருச்சுற்று குலோத்துங்க சோழன் திருமாளிகை என்றும் குறிப்பிடப்படுகிறது. ( தில்லைப்பெருங்கோயில் வரலாறு: பக் 108: வெள்ளைவாரணனார்)

சோழர் கால பள்ளிப்படைகள்

இறந்தவர்கள் எறியூட்டப்பட்ட பின் அவர்களின் அஸ்திக் கலசங்களை வைத்து அதன்மீது கட்டப்படும் கோயில் பள்ளிப்படை என அழைக்கப்படுகிறது.இவ்வாறு கட்டப்படும் பள்ளிப்படைகளில் சிவலிங்க வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.சோழர் காலத்தில் இவ்வாறு எழுப்பப்படும் நினைவிடங்களை பள்ளிப்படைகள் என்றே கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

முதலாம் ஆதித்த சோழனின் பள்ளிப்படையானது  முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டில் ” பள்ளிப்படை வாகீஸ்வர் பண்டிதப்படாரர் ஸ்ரீ கோதண்டராமீஸ்வரமாகிய ஆதித்தேசுவரம் ” என குறிப்பிடப்பட்டுள்ளது. ( Ins 230 of 1903)

உத்தம சோழன் காலத்தில் பழுவேட்டரையர் மன்னர் மறவன் கண்டனுக்கு அவரது மகன் கண்டன் மறவன் ஸ்ரீகண்டீஸ்வரம் எனும் பள்ளிப்படை கோயிலை எழுப்பியுள்ளார் என்பதை கீழப்பழுவூர் ஆலத்துறையார் கோயில் கல்வெட்டு உணர்த்துகிறது. ( ஆவணம் இதழ் 28)

முதலாம் ராஜராஜ சோழன் வட ஆர்க்காடு மாவட்டம்  மேல்பாடியில் அரிஞ்சய சோழனுக்காக எடுத்த பள்ளிப்படை அரிஞ்சிகை ஈஸ்வரம் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. இதுபற்றி குறிப்பிடும் மேல்பாடி கல்வெட்டு ” ஆற்றூர் துஞ்சின தேவர்க்கு பள்ளிப்படையாக ஸ்ரீ ராஜராஜதேவர் எடுப்பித்தருளின அரிஞ்சிகை ஈஸ்வரம் ” என குறிப்பிடுகிறது.( SII vol 3- No 15)

முதலாம் ராஜேந்திர சோழன் தனது தாயான பஞ்சவன் மாதேவிக்கு பழையாறை மாநகரில் எடுப்பித்த பள்ளிப்படை பஞ்சவன் மாதேவி ஈஸ்வரம் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. ( சோழ மண்டல வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஒவியங்களும்: பக் 22)

விக்கிரம் சோழன் தனது அக்காவுக்கு சிதம்பரம் அருகே எடுத்த பள்ளிப்படை ” அக்கன் பள்ளிப்படையாகிய விக்ரமசோழ நல்லூர்” என குறிப்பிடப்படுகிறது(  முப்பது கல்வெட்டுகள்: சுந்தரேச வாண்டையார் : பக் 45)

இரண்டாம் இராஜராஜனுக்கும் அவரது தேவிகளுக்கும் பள்ளிப்படைகளை அமைக்கப்பட்டதை தாராசுரம் கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது.அவை பள்ளிப்படை ராஜகம்பிரீச்சரம், பள்ளிப்படை புவனமுதுடையாள் ஈச்சரம்,  பள்ளிப்படை ஏழ் உலகுமுடையாள் ஈச்சரம், பள்ளிப்படை புவன முழுதுடையாள் ஈச்சரம்,  பள்ளிப்படை உலகுடை முக்கோகிழானடிகள் ஈச்சரம் ஆகும். ( நந்திபுரம் : குடவாயில் பாலசுப்ரமணியன் : பக் 42)

வரலாறு உணர்த்துவது……

சோழர் காலத்தில் மன்னர் குடும்பத்தினர் எரியூட்டப்பட்ட  அல்லது அஸ்திகலசங்கள் புதைக்கப்பட்ட இடத்தில் சிவலிங்கம் அமைத்து பள்ளிப்படை கோயில் எழுப்பப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இத்தகைய நினைவாலயங்கள் அனைத்தும் “பள்ளிப்படை ” என்றே கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.

சோழர் காலத்தில் கிடைத்த எந்தவொரு கல்வெட்டும் மன்னர் குடும்பத்தினரின் நினைவாலயங்களை ” திருமாளிகை” என குறிப்பிடவில்லை. மாறாக மன்னர் குடும்பத்தினரின் நினைவாலயங்கள் அனைத்துமே ” பள்ளிப்படை” என்றே கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.

சோழர் கால கல்வெட்டுகளில் ” திருமாளிகை” எனும் சொல் மன்னரின் அரண்மனையையும்,   ஆலயங்களில் அமைந்துள்ள முற்றங்களையுமே குறிப்பிட பயன்பட்டுள்ளது. சில நேரங்களில் பக்தியில் சிறந்து விளங்கியவர்களின் பெயர்களிலும் திருமாளிகை அமைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.(எ.கா சிறுதொண்டர் மாளிகை)

இதற்கு எடுத்துக்காட்டாக ராஜேந்திர சோழனின் மாளிகை ” முடிகொண்ட சோழன் திருமாளிகை” என தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு குறிப்பிடுவதை கண்டோம். தில்லையில் சோழ மன்னர்கள் எடுப்பித்த திருச்சுற்றுகள் விக்ரம சோழன் திருமாளிகை என்றும் குலோத்துங்க சோழன் திருமாளிகை என்றும் அழைக்கப்பட்டதை கண்டோம்.

எனவே உடையாளூர் கல்வெட்டு குறிப்பிடும் ” சிவபாதசேகரன் திருமாளிகை “ என்பது ராஜராஜ சோழனின் பெயரில் அமைந்திருந்த ஒர் மாளிகை என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தியாகும். முடிகொண்ட சோழன் திருமாளிகைப் போல உடையாளூரிலும் ராஜராஜன் பெயரில் சிவபாதசேகரன் திருமாளிகை எனும் அரண்மனை இருந்து பிற்காலத்தில் அழிந்துபட்டதை நாம் அறிகிறோம்.

உடையாளூரில் இன்று வழிபாட்டில் உள்ள லிங்கம் தஞ்சை வளநாடு எங்கும் வயல்வெளிகளில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான லிங்கங்களில் ஒன்றே தவிர இது ராஜராஜனின் சமாதி என்பதற்கான எந்த சான்றும் இல்லை என்பதே உண்மை.  வரலாறு ஆதாரங்களால் எழுப்பப்பட வேண்டுமே தவிர யூகங்களால் அல்ல…..

Article by: www.sambatiyar.com

Total views 2,790 , Views today 2 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *