தீவுக்கோட்டை எனும் கற்பனைக் கோட்டை

அண்மைக் காலங்களில் சோழர்கள் பற்றிய தேடல்கள் மக்களிடம் அதிகரித்து வருகின்றது.  சோழர்கள் பற்றிய தமிழர்களின் தேடல்களை பயன்படுத்தி சில பொய்யான பரப்புரைகளை சமூக வலை தளங்களில் பல சாதி அமைப்புகள் பரப்பி வருகின்றனர்.  இத்தகைய பல பரப்புகரைகளில் ஒன்றாக தீவுக்கோட்டை எனும் பகுதியை சோழர்கள் ஆட்சி செய்ததாகவும் அவர்களின் வம்சாவழியினர் இன்றும் சோழர்களாக வாழ்ந்து வருவதாகவும் பல புரளிகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றது.  இத்தகைய பரப்புரைகளுக்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்பதே உண்மையாகும்.

வரலாற்றில் மூன்று நிகழ்வுகளை கோர்வையாக கொண்டு இவர்கள் கட்டிய கற்பனை கோட்டையை காண்போம்

கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் தஞ்சையை வீரசேகர சோழன் என்பவர் ஆட்சி செய்ததாகவும் , இந்த வீர சேகர சோழனுக்கும் சந்திர சேகர பாண்டியனுக்கும் நடைபெற்ற போரில் விசய நகர பிரதிநிதி நாகம்ம நாயக்கர்  பாண்டிய மன்னனுக்கு ஆதரவாக களமிறங்கி சோழ மன்னனை போரில் வீழ்த்தியபின், அவர் கடற்கரை நகருக்கு தப்பி சென்றதாகவும் குறிப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

அங்கிருந்து தப்பி சென்ற சோழ மன்னன் தீவுக்கோட்டை எனும் பகுதியில் சோழ அரசனாக கோட்டை கட்சி செய்ததாகவும், கிபி பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரால் இந்த சோழ மன்னன் வீழ்த்தப்பட்டதாகவும் பரப்புரை செய்கின்றனர்.

இந்த சோழ மன்னனின் வழிவந்தவர்களே இன்று பிச்சாவரத்தில் வாழும் சூரப்ப சோழகனார் வம்சத்தினர் என்பதே இவர்களின் வாதம்.

வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் இவற்றின் உண்மைத் தன்மையை காண்போம்.

கற்பனையில் ஒர் சோழ மன்னன்

கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் தஞ்சையில் சோழ மன்னர் என யாரும் ஆட்சி செய்யவில்லை என்பதே ஆய்வாளர்களின் முடிவாகும்.  கிபி 1496 ஆம் ஆண்டு காலத்தில் விசயநகர அரச குடும்பத்தை சேர்ந்த நரச நாயக்கர் தென்னாட்டில் திக் விஜயம் மேற்கொண்டு பல பகுதிகளை வெற்றி கொண்டார்.

நரச நாயக்கரால் வெற்றிக் கொள்ளப்பட்ட சோழ நாட்டை ஆண்டவர் கோனேரிராயன் எனும் மகாமண்டலீஸ்வரன் ஆவார். இவரே சோழ நாட்டு அரசன் என குறிப்பிடப்படுகிறார்.

வாதாம்பிகா புராணம் காட்டும் சோழ நாட்டு போர்

விசயநகர மன்னரான அச்சுதராயர் காலத்தில் எழுதப்பட்ட வரதாம்பிகா பரிணயம் எனும் நூலில்,  அச்சுதராயரின் தந்தையான நரசநாயக்கரின் போர் வெற்றிகள் புகழப்பட்டுள்ளன.

இதன்படி அம்பு மழை பொழியும் போர்க்களத்தில் நரச நாயக்கன் சோழ நாட்டு அரசனான கோனேரி ராயனை எதிர்த்து போரிட்டார் என்றும்,  போரின் இறுதியில் சோழ நாட்டு மன்னரின் பட்டத்து யானை கொல்லப்பட்டு  கோனேரிராயன் கைது செய்யப்பட்டதாகவும் போர்காட்சிகள் வர்ணிக்கப்படுகிறது.

கோனேரி ராயன் எனும் சோழ நாட்டு அரசன்

விசய நகர மன்னர் அச்சுதராயரின் புகழ் பேசும் ” அச்சுதராயாபுதயம்”  எனும் நூலிலும் நரச நாயக்கனின் சோழ நாட்டு போர் நிகழ்ச்சிகள் வர்ணிக்கப்பட்டுள்ளது.  இந்த நூலில் சோழ நாட்டு அரசனான கோனேரி ராயன் என நேரடியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.  ” குதா பதந்தம் சவர குஞ்சர ரௌதை கோனேட்டிராஜம் ஷூபிதான்யஸன்ய”  என வரிகள் யானை மீதிருந்த கோனேரி ராஜன் வீழ்த்தப்பட்டதை குறிப்பிடுகின்றது.

சோழ நாட்டு அரசன் பெற்ற கோட்டை

கிருஷ்ணதேவராயர் காலத்தில் எழுதப்பட்ட ” பாரிஜாத பஹ்ரணம் ” எனும் நூலில் நரச நாயக்கனின் படையெடுப்பு பற்றி விவரிக்கப்படுகிறது.  இதில் ” சோழவல்ல புனகு ஸீரவதூ மதுராத ரமு லிச்சி மதுரா புரம்பு கொனியே”  எனும் வரிகள் நரச நாயக்கன் சோழ நாட்டு அரசனான கோனேரி ராயனுக்கு கோட்டையை திருப்பி அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சோழ நாட்டை ஆண்ட எந்த அரசனும் எந்த தீவுக்கும் தப்பி செல்ல வில்லை என முடிவாகிறது.

வரதாம்பிகா பரிணயம் எனும் நூலில் ” மருவ அரசன் என்பவனே நரச நாயக்கனை கண்டு அஞ்சி கடற்கரை நகரை நோக்கி தப்பி ஒடியதாக ” குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக மேற்கூறிய ஆதாரங்கள் நமக்கு உணர்த்துவது ”  சோழ நாட்டை ஆண்ட அரசனாக குறிப்பிடப்படுபவர் கோனேரி ராயன் என்பவர் என்பதும்,   இவரை நரச நாயக்கன் வென்ற பிறகு இவரது கோட்டை திருப்பி அளிக்கப்பட்டது என்பதும் உறுதியாகிறது. 

எந்த சோழ மன்னனும் கிபி 15 ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் ஆட்சி செய்யவில்லை என்பதும், போரில் தோற்ற எந்த சோழ நாட்டு அரசனும் கடற்கரை நகரை நோக்கி செல்லவில்லை என்பதும் உறுதியாகிறது.

( ஆதாரம்: தமிழ் மன்னன் கோனேரிராயன் /  தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் பக் 50-53)

தஞ்சை நாயக்கர் வரலாற்றை எழுதிய அண்ணமலை பல்கலைக்கழக வெளியீடான ” தஞ்சை நாயக்கர் வரலாறு” நூளிலும் கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் சோழநாட்டில் சோழர்கள் ஆட்சி செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ( Nayaks of tanjore: Annamalai university pg 11)

தேவிக்கோட்டை சோழகன்

கிபி பதினாறாம் நூற்றாண்டில் கொள்ளிடம் கடலோடு கலக்கும் தேவிக்கோட்டை எனும் ஊரில் சோழகன் என்பவன் செஞ்சி நாயக்கரான கிருஷ்ணப்ப நாயக்கரின் ஆட்சியில் ஒர் தலைவனாக விளங்கினான். இச் சோழகன் வழிப்போக்கர்களுக்கும் மக்களுக்கும் கொடுமைகள் செய்து வந்ததாக வரலாற்று குறிப்புகள் உணர்த்துகின்றன. சோழகனுக்கு துணையாக செஞ்சி நாயக்கரின் படையும்,  போர்த்துகீசியர் படையும் இருந்தது

பொது மக்களுக்கு துன்பங்களை தந்த சோழனை அழிக்க இரகுநாத நாயக்கர் படையோடு சென்று சோழகனை வீழ்த்தி அவனது குடும்பத்தினரை கைது செய்ததாகவும் , சோழகனுக்கு உதவியாக வந்த செஞ்சி நாயக்கர் தப்பி ஒடியதையும் இரகுநாத நாயக்கர் கால நூல்கள் உரைக்கின்றன.

சோழகன் – சோழகோன் என்பவர்கள் சோழர் காலத்திலும் அதற்கு பிந்தைய கால கட்டத்திலும் அதிகாரிகளாக விளங்கியதை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

கிபி 1036 ஆம் ஆண்டை சேர்ந்த எசாலம் செப்பேட்டில் முதலாம் ராஜேந்திர சோழனின் அதிகாரிகளில் ஒருவராக உத்தம சோழகோன் என்பவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கிபி 1213 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை மடத்துக்கோயில் கல்வெட்டில், மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் உதயப்பெருமாள் சோழகோனார் எனும் அதிகாரி குறிப்பிடப்படுகிறார்.

கிபி 1351 ஆம் ஆண்டை சேர்ந்த உடையார்பாளையம் கல்வெட்டில் பாண்டிய மன்னரின் அதிகாரியாக ” உதையஞ்செய்தானான சோழகோன் என்பவர் குறிப்பிடப்படுகிறார்.

கிபி 1232 ஆம் ஆண்டை சேர்ந்த கடலூர் கல்வெட்டில் ” மூன்றாம் ராஜராஜ சோழனை சிறைப்பிடித்த கோப்பெருஞ்சிங்கனின் அதிகாரிகளில் சோழகோன் என்பவரும் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
( Ins 142 of 1902)

கிபி பதினேழாம் நூற்றாண்டில் கள்ளர் நாடான செங்கிளி நாட்டில்( புதுக்கோட்டை -தஞ்சை) பெரிச்சி சோழகர் மற்றும் பலபத்ர சோழகர் முதலானோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த சான்றுகள் நமக்கு உணர்த்துவது சோழகன் , சோழகோன் போன்ற பெயர்கள் சோழர் காலத்தில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பெயர்களாகும். தேவிக்கோட்டை சோழகன் வாழ்ந்த காலத்திலேயே பல்வேறு பகுதிகளில் சோழகர்கள் எனும் குறுநில தலைவர்கள் புதுக்கோட்டை,  தஞ்சை பகுதிகளில் வாழ்ந்து வந்துள்ளதை உணர்த்துகின்றன.  எல்லாவற்றிக்கும் மேலாக மூன்றாம் ராசராச சோழனை சிறைபிடித்தவர்களில் ஒருவரே சோழகோன் எனும் பட்டம் தரித்தவன் என இருக்கும்போது சோழகன் என்பவர்கள் சோழ கால அதிகாரிகள் என்பது தெளிவாக விளங்கும்.

பிச்சாவரம் சூரப்ப சோழகனார்கள்

பிச்சாவரத்து குடும்பத்தார்கள் தங்களை  20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பரத்துவாஜ கோத்திரமான பல்லவர்களின் வம்சம் என அழைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். அதிலிருந்து சிறிது காலத்தில் தங்களை காசிப கோத்திரத்தில் உதித்த சோழர்கள் என்றும் கூறலாயினர். அதே நேரத்தில் தங்களை அக்னிக் கோத்திரம் என்றும் கூறிவருகின்றனர். அக்னி கோத்திரத்தில் உதித்து பரத்துவாஜ கோத்திர பல்லவர்களாகவும், காசிப கோத்திரத்தில் உதித்த சோழர்களாகவும் தங்களை கூறி வரும் பிச்சாவர குடும்பத்தார்கள் உண்மையில் தாங்கள் எந்த கோத்திரம் என அவர்கள்தான் விளக்க வேண்டும்! சோழப் பேரரசு மறைந்து கிட்டதட்ட 600 ஆண்டுகள் கழிந்த பின்னால் 20 ஆம் நூற்றாண்டில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களை சோழர் வாரிசு என கூறிக்கொள்ளும் பிச்சாவரத்தார்களால், கிபி 14- 19 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அப்பகுதியின் ஆட்சியாளர்களாகவோ அல்லது வேறேதும் கோயில்களுக்கு கொடை அளித்தததாகவோ கூறும் எந்த ஆதாரமும் இல்லை.

இடைக்காலங்களில் தில்லை நடராசர் கோயில் தொடர்பான வரலாற்று ஆவணங்கள் எதிலுமே, அப்பகுதியில் சோழர்கள் வாழ்ந்ததாகவோ, ஆட்சி செய்தததாகவோ, முடி சூட்டிக் கொண்டதாகவோ எந்த குறிப்பும் இல்லை. தில்லையில் 20 ஆம் நூற்றாண்டில் வெள்ளாளர்களைக் கொண்டு முடிசூட்டும் படலத்தை ஆரம்பித்து இன்று ஊடகங்களின் துணையோடு சோழ வம்சம் என தங்களை கூறிக்கொள்ளும் பிச்சாவரத்தார்கள் தான் அனைத்து வரலாற்று முடிச்சுகளுக்கும் விடையளிக்க வேண்டும்.

சிதம்பரம் செப்பேடுகள் எனும் தொகுப்பை சேர்ந்த 24 செப்பேடுகள்,  கிட்டத்தட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன் நானூறு ஆண்டு கால கொடைகளைப் பற்றிய ஆதாரங்களை கொண்டுள்ளது. இந்த 24 செப்பேடுகளிலும்,  சிதம்பரம் கோயில் கல்வெட்டுகளிலும் எங்கும் இப்பகுதியை சிதம்பரம் சூரப்ப சோழகனார்கள் ஆட்சி செய்தததாகவோ, இவர்கள் சோழ வம்சத்தினர் என்றோ எந்த சான்றுகளும் இல்லை என்பதே உண்மை நிலையாகும். 

Total views 76 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *