தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் வழிதடத்தில் 12 கீமீ தூரத்தில் உள்ள ஒர் சிற்றூர் வல்லம். சங்க கால சோழ மன்னன் கோச்செங்கண்ணனுக்கு பிறகு சோழ நாட்டை ஆண்ட நல்லடி என்பவர் வல்லத்தில் இருந்தே ஆட்சி செய்துள்ளதை பின்வரும் அகநானூற்று பாடல் வரிகள் குறிப்பிடுகிறது.
“யானைச் சோழர் மருகன் நெடுங்கதிர் நெல்லின் வல்லங் கிழவோன் நல்லடி யுள்ளா னாகவும்”(அகம் 356) எனும் பாடல் வரிகள் சோழர்களின் முக்கிய ஆட்சி பகுதியாக வல்லம் விளங்கியதை குறிப்பிடுகிறது.
செந்தலையில் கிடைத்த முத்தரைய மன்னர்களின் கல்வெட்டுகளில் தங்களை ” வல்லக்கோன்” என்றும் கள்வர் கள்வன் என்றும் குறிப்பிட்டுள்ளனர். வல்லக்கோன் என்பது வல்லத்தின் தலைவன் என்று பொருள்படும். கள்வர் கள்வன் என்பது கள்வரில் சிறந்த கள்வன் என பொருள்படும். இதன் மூலம் வல்லத்தை ஆண்ட கள்ளர்களின் தலைவன் என முத்தரய மன்னர் குறிப்பிடப்பட்டுள்ளார். ( ஆதாரம்: Epigraphica indica vol 13- இந்திய தொல்லியல் துறை)

இக்கல்வெட்டு மூலம் வல்லத்தில் பூர்வீகமாகவே கள்ளர்கள் ஆட்சி செய்து வந்தது உறுதியாகிறது. சோழர்களின் எழுச்சிக்கு பிறகு வல்லத்தை ஆண்ட கள்ளர்கள் சோழர்களின் மேலாண்மையை ஏற்று படைத் தளபதிகளாக இருந்துள்ளனர்.
வல்லம் படைப்பற்று
வல்லம் கோட்டை சோழீசுவரன் கோயிலில் கிடைத்த கிபி 1131 ஆம் ஆண்டை சேர்ந்த விக்கிரம சோழன் கால கல்வெட்டு வல்லம் படை முதலிகள் பற்றிய தகவலை தருகிறது.

” திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் வல்லத்துப் படை முதலிகளுக்கு”
என தொடங்கும் கல்வெட்டு வாசகம் வல்லத்தில் செயல்பட்டு வந்த படைபற்றின் முதலிகளை குறிப்பிடுகிறது. மருதக்குடி வண்டாழையை சேர்ந்த 40 வேலி நிலம் கரிகால சோழீஸ்வரமுடைய நாயனாருக்கு இறையிலியாக தரப்பட்டுள்ளது. இதே போல் கூத்தக்குடியில் உள்ள இருபது வேலி நிலம் விக்ரம சோழ நல்லூர் என பெயரிடப்பட்டு விக்ரம சோழ விண்ணகர் ஆழ்வாருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது.
கோயில்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தானங்கள் ” வல்லத்து படை முதலிகளுக்கு” தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம் வல்லத்தில் வலுவான கள்ளர் படைப்பற்று செயல்பட்டு வந்ததை நாம் அறிகிறோம்.
வல்லத்தின் அரசுகளான வல்லத்தரசுகள்
கிபி 1659 ஆம் ஆண்டு பீஜப்பூர் சுல்தான்கள் தஞ்சை மீது படையெடுத்து தஞ்சை மற்றும் மன்னார்குடி பகுதிகளை கைப்பற்றினர். தஞ்சை இளவரசன் விஜயராகவர் வல்லம் கோட்டையில் தஞ்சம் புகுந்தார். வல்லம் கோட்டையில் இருந்த கருவூலத்தை வல்லம் கள்ளர்கள் தலைமையிலான படை காவலில் எடுத்தது. கோட்டையில் இருந்த செல்வத்தை மூட்டைகளில் கட்டி அங்கிருந்து எடுத்து சென்று தங்களது பகுதிகளில் பாதுகாப்பாக வைத்தனர். கோட்டையில் சிறை வைக்கப்பட்டு இருந்த நாயக்கர் குடும்பத்தினரை விடுவித்தனர். முஸ்லீம் படை வல்லம் கோட்டையை அடைந்தது. கோட்டையில் இருந்து எதையும் கைப்பற்ற முடியாத நிலையில் வெறுங்கையுடன் திரும்பியது. சுல்தான் ப அங்கு முகாமிட்டு இருந்த சுல்தான் படையினர் மீது கள்ளர்கள் இரவு நேர கொரில்லா தாக்குதல்களை நடத்தினர். பதினேழாம் நூற்றாண்டில் இத்தகைய நிகழ்வுகளை நேரில் கண்ட பாதிரியார்கள் தங்களது குறிப்புகளில் ” தஞ்சையை தாக்கிய சுல்தான் படைகள் கள்ளர்களின் தாக்குதல்களுக்கு அஞ்சியே நாட்டை விட்டு அகன்றதாக ” குறிப்பிட்டுள்ளனர். சுல்தான் படை சென்ற பிறகு அரண்மனை கஜானாவில் இருந்த பொக்கிசங்களை கள்ளர்கள் தஞ்சை நாயக்கரிடம் ஒப்படைத்து தஞ்சையின் செல்வங்களை காத்தனர். (Nayaks of tanjore: Srivasachariar 1942)



கிபி 1835 ல் எழுதப்பட்ட Alexander east india magazine எனும் நூலில் விசங்கி நாட்டு கள்ளர்களின் தலைமைக் கிராமங்களில் ஒன்றாக வல்லம் குறிப்பிடப்பட்டுள்ளது.

1946 ஆம் ஆண்டு எழுதப்பட்ட தமிழகம் ஊரும் பேரும் எனும் நூலில் ரா.சேதுப்பிள்ளை அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
” தஞ்சையில் சோழர் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பே வல்லத்தில் கள்ளர் வகுப்பினர் கோட்டை கட்டி ஆண்டு வந்துள்ளனர். வல்லத்தில் பழங்கால கோட்டை இருந்ததன் அடையாளங்கள் தற்போதும் உள்ளன. வல்லத்தை ஆண்ட வல்லத்தரசு பட்டம் கொண்ட கள்ளர்கள் தற்போது கள்ளர் முதுகுடியில் உள்ளனர்”

வல்லதரசு பட்டம் கொண்ட கள்ளர்கள் இன்றும் வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் இருந்த புகழ்பெற்ற திராவிட இயக்க தலைவர்களில் புகழ் பெற்றவரான ” முத்துசாமி வல்லத்தரசு ” வல்லத்தை ஆண்ட கள்ளர் தலைவர்களின் வழிவந்தவர் ஆவார். புதுக்கோட்டையின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.






சங்க காலம் முதலே வல்லத்தை ஆண்ட கள்ளர் குல வீரர்கள் இன்றும் வல்லத்தில் உள்ள ஏகௌரி அம்மன் கோயிலில் முதல் மரியாதை பெறுகின்றனர். வல்லத்தரசு பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.
முத்தரைய மன்னர்களின் காலத்தில் தலைநகராக செயல்பட்டு வந்த வல்லம் பிற்காலத்தில் முக்கியமான படைப்ற்றாக விளங்கியதை கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன.
தொகுப்பு: www.sambattiyar.com
Total views 2,096 , Views today 3