நிமிர்ந்த நடை ,நேர்க்கொண்ட பார்வை, உதடுகளுக்கு மேலே உரை விட்டெழுந்த வாள் இரண்டைப் பதித்தது போல மீசை, கம்பீரத்தையும் கருணையின் சாயலையும் காட்டும் விழிகள், நீண்டுயர்ந்து வளைந்த மகுடத் தலைப்பாகை, நெடிய காதுகளில் தங்க வளையங்கள், விரிந்த மார்பகத்தில் விலை உயர்ந்த பதக்க மணிச்சரங்கள், இரும்புத்தூண் அனைய கால்களிலும் எஃகுக் குண்டனைய புஜங்களிலும் காப்புகள், கையிலே ஈட்டி, என கம்பீரத்தின் முழு வடிவமாக கத்தப்பட்டில் காட்சியளிக்கிறார் கள்ளர் குல மாவீரன் வாளுக்கு வேலி அம்பலக்காரர்.


சிவகங்கை சீமை கள்ளர் நாடுகளில் ஒன்றான பாகனேரி நாட்டு அம்பலக்காரராக வாளுக்கு வேலியார் திகழ்ந்துள்ளார். அரசுக்கு வாய்ச்சான் எனும் தந்தை வழி பட்டத்தின் இரு பிரிவுகளாக வாளுக்குவேலி மற்றும் வேங்கைப்புலி வகையராக்கள் உள்ளது.

பாகனேரி நாடு
பாகனேரி நாடு கள்ளர்களால் உருவாக்கப்பட்டு ஆளப்படும் நாடும் என Caste and tribes of southern india vol 3(1908) ல் Edgor thurston குறிப்பிட்டுள்ளார். பாகனேரி நாட்டு தலைவரான வாளுக்கு வேலியார் பற்றிய குறிப்புகளை 18 ஆம் நூற்றாண்டு ஒலைச்சுவடிகளில் காணப்படுகிறது.

ஒலைச்சுவடிகளில்
” கிபி 1777ல் கேரளசிங்கவள நாடு மேலத்திருத்தியூர் முட்டத்து பாகனேரியில் வாளுக்குவேலி நல்லத்தம்பி” என்பவர் குறிப்பிடப்படுகிறார். வாளுக்கு வேலியார் குடும்பத்து உறுப்பினராகவோ, பங்காளியாகவோ இவர் இருக்கலாம். வாளுக்கு வேலி நல்லத்தம்பி மகன் பெரிய ஆதப்பன் என குறிப்பிடப்பட்டுள்ளது.(ஒலைச்சுவடி எண்: 25 ,பாகனேரி நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்)

” கிபி 1779ல் கேரளசிங்க வளநாடு மேலதிருத்தியூர் முட்டத்து பாகனேரியில் இருக்கும் கள்ளரில் வாளுக்குவேலி அம்பலம் முத்துக்கருப்பன் சேர்வை” என வாளுக்குவேலி பட்டத்துடன் கள்ளர் தலைவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.

கிபி 1222ஆம் ஆண்டை சேர்ந்த பாண்டியர் கால புதுக்கோட்டை கல்வெட்டு எண் 260, திருத்தியூர் முட்டத்து கள்ளர்கள் வண்டாங்குடி எனும் ஊரை விற்பனை செய்தது பற்றி கூறுகிறது. பாகனேரி நாடு அமைந்திருக்கும் பகுதி பன்னெடுங் காலமாகவே கள்ளர்களின் ஆளுமையில் உள்ள பகுதி என இக்கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது.
வேலுநாச்சியாருக்கு ஆதரவாக களம் கண்ட வாளுக்கு வேலியார்:-

கிபி 1780 ல் ஐதர் அலியின் படை உதவியை பெற்ற வேலுநாச்சியார் மருதுசகோதரர்களுடன் சேர்ந்து சீமை மீட்க புறப்பட்டபோது அவருக்கு ஆதரவாக களம் கண்ட கள்ளர் தலைவர்களில் வாளுக்கு வேலி அம்பலம் குறிப்பிடப்பட்டுள்ளார். சிவகங்கை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட சிவகங்கை சரித்திர அம்மானையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. இத்தகவலை பின்வரும் அம்மானை வரிகள் மூலம் அறியலாம்:-
” தாட்சிணிய மில்லாச் சனமும் விருதுடனே நாச்சியப்பன் சேர்வையும் வெகு கள்ளர் பெருஞ்சனமுங் கடுங்கோபமுள்ளவர்கள் மல்லாக்கோட்டை நாட்டவரும், சேதுபதியம்பலம் தீரனவன் சனமும், பேதகமில்லா பெரியபிள்ளை அம்பலமும் , துடியன் வயித்தியலிங்க தொண்டைமான் தன்சனமும், மருவத்த மன்னன் மா வேலி வாளனுடன் வெரிமருது சேர்வை“( சிவ அம் பக் 150-151)
வேலுநாச்சியாருக்கு ஆதரவாக மல்லாக்கோட்டை நாட்டை சேர்ந்த நாச்சியப்பன் சேர்வையும், கள்ளர் பெருஞ்சனமும், மல்லாக்கோட்டை நாட்டு வீரர் சேதுபதியம்பலம், பெரியபிள்ளையம்பலம், பட்டமங்கல நாட்டு வீரர் வயித்திலியங்க தொண்டைமான்( திருப்பத்தூர் கோட்டை கருப்பர் கோயிலில் இவரது சிலை உள்ளது), மருவத்த மன்னன் மா வேலி வாளன்( வாளுக்கு வேலி) முதலானோர் வீரப்போர் புரிந்துள்ளனர். கிபி 1780 லேயே பாகனேரி நாட்டின் தலைவரான வாளுக்கு வேலிக்கு அம்பலம் சிவகங்கை சமஸ்தான மீட்பு போரில் ஈடுபட்டுள்ளது உறுதிபடுகிறது.
கிபி 1801 ல் வெள்ளையருக்கு எதிரான போரின் முடிவில் மருதுபாண்டியரை தூக்கிலடப்போகும் முன், அவர்களை காக்க புறப்பட்ட வாளுக்கு வேலி அம்பலம் வெள்ளையர்களால் வஞ்சனையாக கொல்லப்பட்டார். கத்தப்பட்டு எனும் ஊரில் வாளுக்கு வேலியார் உயிர் பிரிந்த இடத்தில் அவரது சிலை நிறுவப்பட்டு இன்று வரை ஊர்மக்களால் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
வழக்கத்தில் உள்ள செவி வழித்தகவல்:–
பாகனேரி நாட்டு வாளுக்கு வேலியார் தனது தங்கையை பட்டமங்கல நாட்டு தலைவருக்கு மணம் செய்து வைத்ததாகவும், ஆனால் இரு குடும்பத்திற்கும் இடையில் பிற்காலத்தில் பகைமை உருவானதால் , வாளுக்கு வேலியாரின் தங்கையை பட்டமங்கல நாட்டு தலைவர் பிறந்த வீட்டிற்கே அனுப்பிவிட்டதாகவும், இதற்கு பதிலடியாக தங்கையின் கழுத்தில் இருந்த தாலியை ஒரு நாயின் கழுத்தில் கட்டி பட்டமங்கல நாட்டிற்கு வாளுக்கு வேலியார் விரட்டியதாகவும் செவிவழி தகவல்கள் இன்றும் வழக்கில் உள்ளன. இரு நாட்டிற்கும் இடையேயான முரண்பாடுகள் இன்றளவும் உயிர்ப்போடு உள்ளதாகவும், கொள்வினை கொடுப்பினை இல்லையென்றும் கள ஆய்வில் கிடைத்த தகவல் உறுதிப்படுத்துகிறது.
கோயில் உரிமைகள்:-
பாகனேரி நாட்டில் வழக்கத்தில் உள்ள புல்வநாயகி அம்மன் தல வரலாறு கூறும் ஒலைச்சுவடியில் பின்வரும் தகவல் வாளுக்குவேலி வம்சத்தை பற்றி தரப்பட்டுள்ளது, அதன்படி:-



பாகனேரியில் உள்ள புல்வநாயகி அம்மன் கோயிலின் திருவிழா ஆனி மாதத்தில் நடைபெறும். திருவிழாவின் போது நடத்தப்படும் மண்டகப்படிகளில் ஆறாம் நாள் மண்டகப்படியை வாளுக்குவேலி வம்சத்தார் நடத்தி வருகின்றனர். மண்டகப்படியின் போது ” முத்துவிசய ரகுநாத கரியான் வாளுக்குவேலி பேரன்மார்கள் புல்வநாயகி அம்மனுக்கு மண்டகப்படி வைத்துக் கேளிக்கை பார்க்கிற பிரஸ்தாபத்தினாலே” எனும் வாசகம் இன்றும் வாசிக்கப்படுகிறது.
இதுதவிர எட்டாம் நாள் மண்டகப்படி வாளுக்குவேலிபுரத்தை சேர்ந்த பில்லப்பன் அம்பலம் மற்றும் உடையப்பா அம்பலம் ஆகியோரும் நடத்தும் உரிமை உடையவர்கள். மண்டகப்படியின் போது ” முத்துவிசய ரகுநாத கரியான் வாளுக்குவேலி பில்லப்பா அம்பலம், உடையப்பா அம்பலம் புல்வநாயகி அம்மனுக்கு மண்டகப்படி வைத்துக் கேளிக்கை பார்க்கிற பிரஸ்தாபத்தினாலே” எனும் வாசகம் வாசிக்கப்படுகிறது.



திருவிழாவின் ஒன்பதாம் நாளில் நாட்டார்கள் விருதுகளுடன் வருவது வழக்கம். அவர்களில் வாளுக்கு வேலி வம்சத்தவரும் ஒரு வெள்ளைக்குடை, இரண்டு தீவட்டி முதலிய விருதுகளுடன் கலந்துகொள்வது வழக்கம்.

18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு சுவடியில் அரசுக்கு வாய்ச்சான் பேரன்மார்கள் வாளுக்கு வேலி மற்றும் வேங்கப்புலி ஆகியோருக்கு அய்யனார்கோயிலில் காளாஞ்சி வகைகள் திருநீறு தீர்த்தம் முதலியவை அளிக்கப்பட்ட தகவலை தருகிறது.
வாளுக்கு வேலி வம்சத்தார்கள் இன்றளவும் பழமையான பாரம்பரியத்தை மறவாது , சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகின்றனர். வலிமையான நாட்டமைப்பை உருவாக்கி ஆட்சி செய்து, அயலார்க்கு எதிரான போர்களில் பங்கேற்று உயிர் நீத்த வாளுக்கு வேலி அம்பலத்தாரின் புகழை நிலைக்கச் செய்யும் வகையில் தமிழக அரசு மூலம் விழா எடுத்து சிறப்பித்தலே அன்னாரின் தியாகத்திற்கு நாம் செய்யும் உரிய மரியாதையாகும்.
ஆதார நூல்கள்: பாகனேரி நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்:-டாக்டர் ஆத. முத்தையா/ தென்பாண்டி சிங்கம் மு. கருணாநிதி/ கள ஆய்வு தகவல்கள்/ நாட்டார் ஒலைச்சுவடிகள்
Article by : www.sambattiyar.com
Total views 3,266 , Views today 1