தமிழகத்தில் தஞ்சை,திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வாண்டையார் எனும் பட்டம் கொண்ட முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த கள்ளர் மரபினர் பரவி வாழ்கின்றனர். வாண்டையார் மரபில் உதித்த பல சான்றோர்கள் சமுதாய சிற்பிகளாக தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர். வாண்டையார்களின் தொன்மை மற்றும் பெருமைகளை காண்போம்.
தொண்டையர்
சங்க காலத்தில் வேங்கட மலையை தலைமையாக கொண்ட தொண்டை நாட்டை கள்ளர் மரபினர் ஆட்சி செய்து வந்தனர். கள்ளர்களின் தலைவனான புல்லி என்பான் வேங்கட மலையினை ஆட்சி செய்ததாக சங்க கால புலவர்களால் போற்றப்படுகிறார்.
” அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்” ( அகம் பாடல் 61)
– மாமூலனார்-
தலைமை வாய்ந்த யானைகளின் வெள்ளிய கோடுகளை(தந்தங்களை) , கள்ளோடு விற்று அதனால் கிடைத்த நெல்லை கொண்டு, நாளோக்கச் சிறப்பினை செய்யும், கழலினை தரித்த திருந்திய அடிகளை உடைய கள்வர்களின் கோமான் புல்லி என மாமூலனார் புல்லியை போற்றுகிறார்.
” களிற்றுக்கன்று ஒழித்த உவகையர் கலிசிறந்து கருங்கால் மராஅத்து கொழுங்கொம்பு பிளந்து”
“நறவுநொடை நல்இல், பதவுமுதற் பிணிக்கும் கல்லா இளையர் பெருமகன் புல்லி வியன்தலை நல்நாட்டு வேங்கடம்”
(அகநானூறு பாடல் 83)
– கல்லாடனார் –
” மணங்கமழும் வெண்கடம்பின் பூக்களை சுருள்போன்ற தன் தலைமயிரில் சூடிக்கொண்டு , உரல் போன்ற காலினை உடைய பெண் யானையிடமிருந்து களிற்று கன்றை பிரித்து கூட்டி வருவர் கள்வர்கள்! வெண்கடம்பு மரத்தின் நாரைக்கொண்டு யானைக்கன்றை கட்டுவர். அத்தகைய இளையர்களுக்கு பெருமகன், கள்வர் கோமான் புல்லி யின் அழகிய கொடிகளையுடைய வேங்கடமலை என வேங்கடமலையின் சிறப்பினை உணரத்துகிறார் கல்லாடனார்.
” பொருவார் மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை வண்தேர்த் தொண்டையர் வழையம லடுக்கத்துக்
கன்றி லோரா விலங்கிய புன்றா ளோமைய சுரனிறந் தோரே”
( குறுந்தோகை 260)
-கல்லாடனார்-
அகநானூறில் கள்வர் கோமான் புல்லியை புகழ்ந்த கல்லாடனார் , குறுந்தொகையில் வலிய யானைகளையும், அழகான தேரினையும் உடையதாக தொண்டையர்கள் வாழ்ந்த வேங்கடமலை திகழ்ந்ததாக குறிப்பிடுகிறார்.
” வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரு நெருங்கோட்டு ஒங்குவெள், அருவி வேங்கடத்து உம்பர்”
( அகநானூறு பாடல் 213)
– தாயங்கண்ணனார் –
போர் பயிற்சி பெற்ற யானைகளை கொண்ட தொண்டையர் வாழும் வேங்கடமலையானது, மேகங்கள் தவழும், வெண்மையான அருவிகள் விழும் மலை உச்சிகளை உடையது என வேங்கடத்தின் அழகை தாயங்கண்ணனார் புகழ்கிறார்.
மேலை குறிப்பிடப்பட்ட பாடல்கள் மூலம் வேங்கடமலையை ஆட்சி செய்த கள்வர் மக்கள் ‘ தொண்டையர்‘ என குறிப்பிடப்பட்டதை அறியலாம். வேங்கடமலையின் அரசான புல்லி என்பாரே தொண்டையர்களின் முதல்வனாக இருந்துள்ளார்.
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம் வெளியிட்ட ” சங்க கால புலவர் வரிசை ” எனும் நூலில் சங்க கால மன்னரான கள்வர் கோமான் புல்லியே முதல் தொண்டையன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகம் வெளியிட்ட ” தித்தன்” எனும் ஆய்வு நூலில் கள்வர் குலத்தவனான புல்லியே தொண்டையன் என ஆதாரத்துடன் விளக்கப்படுகிறது.

Ancient india south indian history and culture எனும் நூலில் கள்ளர் இனத்தவரான தொண்டையர்கள் வேங்கட மலையை ஆட்சி செய்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட History of pallavas of kanchi எனும் நூலில் இளந்திரையன் எனும் மன்னரின் பகுதிகளில் கள்வர் இன மக்கள் ஆளுமை செலுத்தியதை குறிப்பிடுகிறது.

History of the holy shrine of sri venkatesa எனும் நூலில் தொண்டையர்களான கள்ளர்கள் வேங்கடத்தை ஆட்சி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொண்டையர் வழிவந்த வண்டையர்கோன்

சங்க இலக்கியமான பெரும்பாணாற்றுப்படை நூலில் பாடப்பட்ட இளந்திரையன் தொண்டைமான் , தனது முன்னோரை பற்றி குறிப்பிடும்போது ” பகைவரின் காவல் உடைய அரண்களை அழித்து, எதிரி மன்னர்களை அழித்து வெற்றி விழா கொண்டாடும், வலிய உடலையும் வாளையும் உடைய தொண்டையர்களின் வழியினன் என குறிப்பிட்டுள்ளார். ( பெரும்பாணாற்றுப்படை பாடல் 450)
” கண் ஆகிய சோழன் சக்கரமாம் கருணாகரன் , வாரணம் மேற்கொளவே அத்தண்டு கொண்டு அவன் சக்கரம் வந்ததே”
(கலிங்கத்துப்பரணி)
கலிங்கத்துப்பரணி பாடல்களில் கருணாகர தொண்டைமான், தொண்டையர், தொண்டையர் அரசு, வண்டையர் கோன், வண்டையர்க்கு அரசு என்றெல்லாம் போற்றப்படுகிறார். கருணாகர தொண்டைமானை புகழும் கலிங்கத்துப்பரணி பாக்களை காண்போம்.
“தொண்டையர்க் கரசு முன்வரும் சுரவி
துங்க வெள் விடை உயர்த்தகோன்
வண்டையர்க் கரசு பல்லவர்க் கரசு
மால் களிற்றின்மிசை கொள்ளவே”
“மண்ட லீகரு மாநில வேந்தரும் வந்து ணங்குக டைத்தலை வண்டைமன்தொண்டை மான்முதல் மந்திரப் பாரகர் சூழ்ந்து தன்கழல் சூடியி ருக்கவே”
“இறைமொ ழிந்தளவி லெழுக லிங்கமவை எறிவ னென்றுகழல் தொழுதனன்மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல திலகன் வண்டைநக ரரசனே“
“அடைய வத்திசைப் பகைது கைப்பனென் றாசை கொண்டடற் தொண்டைமான்“
“மறித்தோடி யெவ்வரசுஞ் சரிய வென்றுவருமனுக்கைப் பல்லவர்கோன் வண்டை வேந்தன்எறித்தோடை யிலங்குநடைக் களிற்றின் மேற்கொண்”
“கலிங்கப் பரணிநங் காவலன்மேற்
சூட்டிய தோன்றலைப் பாடீரே
தொண்டையர் வேந்தனைப் பாடீரே”
கலிங்கத்துப்பரணி பாக்களில் கருணாகர தொண்டைமான், வண்டை நகர அரசன், வண்டையர்களின் தலைவன், தொண்டையர்களின் தலைவன், தொண்டைமான் என்றெல்லாம் போற்றப்படுகிறார்.
இதன்மூலம் கருணாகர தொண்டைமான் சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய கள்ளர குல தொண்டையர்கள் வழியினன் என உறுதிப்படுகிறது.
முதலாம் குலோத்துங்க சோழருக்கு கப்பம் செலுத்த மறுத்த அனந்த பன்மன் எனும் கலிங்க அரசனை வென்று திறைக் கொண்டு சாதனை படைத்தவர் கருணாகர தொண்டைமான்.
கலிங்க நாட்டை வென்று உயர்ந்த ரக குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், ஒன்பது வகை ரத்தினங்கள் என பல வளங்களையும் கருணாகர தொண்டைமான் சோழ மன்னரிடம் ஒப்படைத்ததாக கலிங்கத்துப்பரணி கூறுகிறது.
கருணாகர தொண்டைமான் பற்றி குறிப்பிடும் முதலாம் குலோத்துங்கன் காலத்தை சேர்ந்த ( கிபி 1118), காஞ்சிபுரம் வரதராச பெருமாள் கோயில் கல்வெட்டு ” குலோத்துங்க சோழவளநாட்டு திருநரையூர் நாட்டு வண்டழாஞ்சேரியுடையான் வேளான கருணாகரனான தொண்டைமான் ” என குறிப்பிடுகிறது.

கருணாகர தொண்டைமானின் சொந்த ஊராக குறிப்பிடப்படும் வண்டழாஞ்சேரி, தற்காலத்தில் வண்டுவாஞ்சேரி. கும்பகோணம் – குடவாசல் வழிதடத்தில் உள்ள இவ்வூரில், தொண்டைமான் திடல் எனும் பகுதியில் கருணாகர தொண்டைமானின் சிலை உள்ளதை, தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் தனது நூலான ” சோழ மண்டல வரலாற்று நாயகர்களின் சிற்பங்கள்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சங்க காலத்தில் வேங்கட மலையை ஆண்ட கள்ளர் குல தொண்டையர் வழிவந்த கருணாகர தொண்டைமான் , சோழ அரசர்களிடம் தளபதியாக பணியாற்றி பல போர்களில் வாகை சூடியுள்ளார். இவரது ஊரான வண்டழாஞ்சேரியில் வசித்த வண்டையர் எனும் தொண்டையர்களின் தலைவனாக திகழ்ந்தார். இன்றைக்கு பரவலாக வாழும் வாண்டையார்களின் குல முதல்வனாக, கருணாகர தொண்டைமான் திகழந்துள்ளார். இன்றும் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் வாண்டையார்கள் மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றனர்.
கல்வெட்டு ஆவணங்களில் வாண்டையார்கள்




புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்தில் கிடைத்த கிபி 1301 ஆம் ஆண்டை சேர்ந்த குலசேகர பாண்டியன் கால கல்வெட்டில் ” வாண்டான்” என்பவர் புல்வயல் பெருமாள் கோயிலுக்கு அளித்த கொடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் இன்றும் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.



புதுக்கோட்டை மாவட்டம் பழங்கரை பகுதியில் கிடைத்த கிபி 1453 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு, அறந்தாங்கி மன்னரான பெருமாள் தொண்டைமான் என்பவர் தனது மகனான இலக்கண் தெண்ணணாயக்க தொண்டைமானுக்கு காணியாட்சி அளித்ததை பற்றி குறிப்பிடுகிறது.
அறந்தாங்கி மன்னர் காணியாட்சி வழங்கும்போது வாண்டையார் என்பவரின் நிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு மற்ற பகுதிகள் தொண்டைமானாருக்கு அளிக்கப்படுகிறது. காணியாட்சி வழங்கும்போது வாண்டையார் அவர்களின் நிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது, அக்காலத்தில் அரசியலில் அவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்தை விளக்குகிறது.



அறந்தாங்கி தொண்டைமான் மன்னர் ” நம்முடைய ஊரான பாலையூர் நாட்டு” என பாலையூர் நாட்டை தங்களது பூர்வீகமாக குறிப்பிடுகிறார். பாலையூர் நாடு என்பது புதுக்கோட்டை கள்ளர்களின் நாடு என Manual of pudukkottai state vol 1 எனும் நூலில் புதுக்கோட்டை சமஸ்தானத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் ஒரு சமயத்தில் நடந்த போரில் கள்ளர்கள் 50 பேர இழந்ததாகவும் அதற்கு பதிலாக பாலையூர் நாட்டுப் பகுதியில் குடியேறியதாகவும் General history of pudukkottai state 1916 எனும் நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்தில் நெய்வாசல் எனும் ஊரில் கிடைத்த மற்றொரு கிபி 1483 ஆம் ஆண்டை சேர்ந்த மற்றொரு கல்வெட்டில் நெய்வாசல் எனும் ஊரின் பாடிகாப்பாராகும் உரிமையை வாண்டையாத்தேவன் என்பவர் பெற்றதாக கூறுகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளர் சமூக வாண்டையார்கள் பல்வேறு ஊர்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
கிபி 1842 ஆம் ஆண்டை சேர்ந்த தஞ்சை கல்வெட்டில் மாரியப்ப வாண்டையார் என்பவர் குறிப்பிடப்படுகிறார்.


புதுக்கோட்டையை கிபி 17 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சிவந்தெழுந்த பல்லவராயர் என்பவர் மீது பாட்டப்பட்ட சிவந்தெழுந்த பல்லவராயர் உலாவில் ” பரணியில் பாடப்பட்ட கருணாகர தொண்டைமானை ” தனது முன்னோராக குறிப்பிடுகிறார். புதுக்கோட்டை பல்லவராயர்கள் கள்ளர் மரபினர் என புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு கூறுகிறது.



அறந்தாங்கியை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த அறந்தாங்கி தொண்டைமான்கள் தங்களது செப்பேடுகளில் ” கலிங்கத் திறை கொண்ட கருணாகரன், ” வண்டை நகராதபன் ” என கருணாகர தொண்டைமானை தங்களது முன்னோராக குறிப்பிட்டுள்ளனர். ( பெருவயல் செப்பேடு/ அழுஞ்சியேந்தல் செப்பேடு)

அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்கள் கள்ளர் மரபினர் என்றும், புதுக்கோட்டை தொண்டைமான்கள் அறந்தாங்கி தொண்டைமான்களின் வழயினரே என உலக தமிழராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ” அறந்தாங்கி தொண்டைமான்கள்” எனும் நூலல் ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது. சங்க காலங்களில் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த கள்ளர் குல தொண்டையர்கள் வழிவந்த வாண்டையார்கள் பிற்காலத்தில் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி வாழத் தொடங்கினர்.


ஆங்கிலேயர் ஆவணங்களில் வாண்டையார்கள்
கிபி 1835 ல் வெளியிடப்பட்ட Alexander east india magazine எனும் புத்தகத்தில் தஞ்சையில் இருந்த கள்ளர்கள் வாண்டையார் எனும் பட்டத்தை பரவலாக பயன்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிபி 1883ல் வெளியிடப்பட்ட Manual of tanjore in madras presidency எனும் நூலில் கள்ளர்கள் பயன்படுத்திய பட்டங்களில் வாண்டையார் பட்டமும் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிபி 1920ல் வெளியிடப்பட்ட Manual of pudukkottai state vol 1 ல் புதுக்கோட்டை கள்ளர்கள் வாண்டார், வாண்டையார் முதலிய பட்டங்களை பயன்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1933ல் வெளியிடப்பட்ட Gazetter of india எனும் நூலில் “ ராவ் பகதூர் வீரையா வாண்டையார் மற்றும் அப்பாவு வாண்டையார் ஆகியோர் குறிப்பிடப்படுகிறார்.

புகழ்பெற்ற வாண்டையார்கள்
கிபி 1876 ல் தஞ்சை மிராசுதார் மருத்துவமனைக்கு தேவையான கட்டிடங்களை பூண்டியை சேர்ந்த நிலக்கிழார் வீரையா வாண்டையார் கட்டிக் கொடுத்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றது. (தஞ்சை மராத்தியர் கல்வெட்டுகள்)

1913ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயர் பெயரில் நடத்தப்பட்ட ” Martanda exhibition ” எனும் மருத்துவ பொருட்காட்சியில் , பங்கேற்ற TMC குப்புசாமி வாண்டையார் என்பவர் சிறந்த மருத்துவ சேவைக்கான விருது பெற்றுள்ளார்.

தெலுங்கானாவில் பத்ராச்சலம் சமஸ்தானத்தில் சிறந்த மருத்துவ சேவைக்காக மன்னரிடம் ” தங்கப் பதக்க” விருதையும் குப்புசாமி வாண்டையார் பெற்றுள்ளார்.

1916ல் கரந்தை தமிழ் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் , தமிழ் சங்கத்தின் முதன்மை புரவலர்களில் ஒருவராக பூண்டி அப்பாசாமி வாண்டையாரும் குறிப்பிடப்படுகிறார்.

1917ல் வெளியிடப்பட்ட கர்ணாமிர்தசாஎரம் எனும் நூலில், நான்காம் தமிழ் சங்க உருவாக்கம் மற்றும் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தவர்களில் பூண்டி அப்பாசாமி வாண்டையாரும் ஒருவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிபி 1923ல் வெளியிடப்பட்ட ” கள்ளர் சரித்திரம்” எனும் நூலில் பூண்டியை சேர்ந்த நிலக்கிழார் ராவ் பகதூர் அப்பாசாமி வாண்டையார் அக்காலத்திலேயே MLC யாக இருந்ததை குறிப்பிடுகிறது. அக்காலத்தில் பூண்டி குடும்பத்தார் வசம் 7000 ஏக்கர் வரை நிலப்பகுதிகள் இருந்துள்ளது.

1935ல் வெளியிடப்பட்ட ” Indian who’s who” எனும் நூலில் பூண்டி ஜமீனினை சேர்ந்த கிருஷ்ணசாமி வாண்டையார் என்பவர் பற்றி குறிப்பிடுகிறது. தஞ்சை கிருக்கோயில்கள் குழுவின் துணைத்தலைவர் உட்பட பல பதவிகளை இவர் வகித்துள்ளார்.

பூண்டி வாண்டையார்கள் வழிவந்த ராவ் பகதூர் வீரையா வாண்டையார், 1956ல் பூண்டி புஷ்பம் கல்லூரியை தொடங்கி ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்கினார்.


பூண்டி ஸ்ரீமான் ஐயா துளசி வாண்டையார் தஞ்சையின் முடிசூடா மன்னராக திகழ்ந்து வருகிறார். இவர் 1991-1996 காலகட்டத்தில் தஞ்சையின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பூண்டி புஷ்பம் கல்லூரியில் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணம் கட்டி தனது வீட்டிலேயே தங்க வைத்து படிக்க உதவி வருகிறார். பூண்டி துளசி வாண்டையார் தஞ்சை மக்களால் “கல்வித் தந்தை ” என போற்றப்படுகிறார்.

பூண்டி ஸ்ரீமான் கிருஷ்ணசாமி வாண்டையார். பூண்டி இளவல் ஐயா கிருஷ்ணசாமி வாண்டையார் தஞ்சை மக்களால் TKV ஐயா என பாசத்துடன் அழைக்கப்படுகிறார். இவரது தலைமையில் பல தொழிற் கூட்டமைப்புகள் செயல்படுகிறது. தஞ்சை தெற்கு மாவட்டத்தின் காங்கரஸ் தலைவராக TKV ஐயா இருந்து வருகிறார்.

தஞ்சை நகரசபை தலைவராக (1946-1951) காலகட்டத்தில் இருந்த அய்யாசாமி வாண்டையார், மக்கள் சேவையில் சிறந்து விளங்கியதால் , தஞ்சை நகரின் தந்தை என போற்றப்பட்டார். இவரது சேவையை போற்றி தஞ்சை பழைய பேருந்து நிலையத்திற்கு அய்யாசாமி வாண்டையார் நினைவு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு, இவரது பெயரில் நுழைவு வளைவு ஏற்படுத்தப்பட்டது. 1958 ல் தஞ்சை பேருந்து நிலைய வளாகத்தில் அப்பாசாமி வாண்டையாரின் சிலை காமராஜரால் திற்க்கப்பட்டது.


அனந்தநாயகி வாண்டையார் என்பவர் நடராஜ வாண்டையாரின் திருமகளாய் தஞ்சை குமரலிங்கத்தில் 1929ல் பிறந்து சென்னையில் வாழ்ந்தார். இவர் 1946 ம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராகவும் இரு முறை சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் இருந்தவர்.இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக பேசின்பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மூன்றுமுறை – 1957, 1962 மற்றும் 1971ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தமிழ்நாடு காங்கிரஸ்தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் அருந்தொண்டுகள் ஆற்றியவர்.

சிதம்பரத்தில் பெரும் நிலக்கிழார் குடும்பத்தில் உதித்து, இன்று மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவராக விளங்கும் திரு. ஸ்ரீதர் வாண்டையார், மிகச்சிறந்த சமூக பற்றாளர். முக்குலத்தோர் சமுதாயம் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தினருக்காவும் உழைக்கும் தலைவராக விளங்கி வருகிறார் ஐயா ஸ்ரீதர் வாண்டையார். அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் தனது சொந்த செலவில் பல சமூக சேவைகளை ஆற்றி வருகிறார்.



திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய ஆர்வலர் நெல். ஜெயராமன் வாண்டையார். தனது நீண்ட நெடிய தேடல்கள் மூலம், மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, மைசூர் மல்லி, கிச்சடி சம்பா உள்பட சுமார் 170-க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுத்த பெருமைக்குரியவர் நெல் ஜெயராமன். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி, ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக 2 கிலோ வழங்கி, அடுத்த ஆண்டில் 4 கிலோவாக பெறும் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகளை பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்ய வைத்தார்.

திருவாரூர் சட்டமன்ற தலைவனரான பூண்டி கலைவாணன் வாண்டையார் வம்சத்தவர். இவர் திமுகவின் திருவாரூர் மாவட்ட செயலாளராக உள்ளார்.

வாண்டையார்கள் வாழும் ஊர்கள்
சோழவளநாட்டில் பல ஊர்களில் வாண்டையார்கள் பரவி வாழ்கின்றனர். இவர்கள் வாழும் ஊர்களில் சிலவற்றை காண்போம். இந்த பட்டியலில் இடம்பெறாத பல ஊர்களும் இருக்கலாம்.
தஞ்சை,திருவாரூர் மாவட்டங்களில் குடவாசல், எடமேலையூர் , மூவாநல்லூர், பேரையூர், பைங்காநாடு, கரம்பயம், பூண்டி, பொய்யுண்டார்க்கோட்டை, மறவாக்காடு, கண்ணுகுடி , வாண்டையார் குடிகாடு, வாண்டையார் இருப்பு, ஆலம்பாக்கம் , கொரடாச்சேரி , பேராவூரணி , மேலஉளுவூர், புதுப்பட்டி , மேடைக்கொல்லை , பஞ்சவாடி, குன்னூர், இடையூர் , அரிச்சயபுரம், செம்பியன் மாதேவி ,கள்ளர்பசுபதிக்கோயில் , சாந்தமாணிக்கம், சோலைக்குளம், காரக்கோட்டை, பெருகவாழ்ந்தான், திருக்களர், திருமங்கலக்கோட்டை, பூண்டி, கோனூர், திருமங்கலக்கோட்டை, சின்னகரம் , சாத்தனூர் , கத்தரிக்கொல்லை,வேப்பங்காடு முதலிய ஊர்களில் வாண்டையார்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வாண்டையார்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, வாண்டையார் குடியிருப்பு , பள்ளத்துவிடுதி, சூரன்விடுதி, புதுக்கோட்டை விடுதி, இராமுடையான்பட்டி சிக்கப்பட்டி , ஆலங்காடு காட்டுப்பட்டி, கல்லாலங்குடி , உச்சாணி , ஆற்றங்கரைப்பட்டி ஆகிய ஊர்களில் வாழந்து வருகின்றனர்.
இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் கல்லாக்கோட்டை, சங்கம்விடுதி, குருவாண்டார் தெரு, வாண்டான்விடுதி, கல்லுகாரன்பட்டி , கறம்பவிடுதி , உச்சானி , நெம்மேலிபட்டி முதலிய ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
வாண்டையார்களின் பெயரில் அமைந்துள்ள சிற்றூர்கள்
வாண்டையார் தெரு :-தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பொய்யுண்டார்க்கோட்டை ஊராட்சியில் வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் பகுதி.
வாண்டையார் இருப்பு :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
வாண்டையார் குடிகாடு:- திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், பேரையூர் ஊராட்சியில் உள்ள வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்
வாண்டையார் குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், கரும்பிரான்கோட்டை ஊராட்சியில் வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
வாண்டாம்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் கல்லுக்காரன்பட்டி ஊராட்சியில் வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்துள்ள சிற்றூர்.
வாண்டாம்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், ஆற்றங்கரை ஊராட்சியில் வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.
வாண்டான்விடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், வாண்டார், வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்
வாண்டான்விடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், வாணக்கன்காடு ஊராட்சியில் வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.
வாண்டாக்கோட்டை:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.
வாண்டையான்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், வடுகப்பட்டி ஊராட்சியில் வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.
தொண்டை நாட்டில் பழமையான தொண்டையர் குடியில் உருவான வாண்டையார்கள் சோழப் பேரரசு காலத்தில் மிக உயர்ந்த நிலையை எய்தியிருந்தனர்.சோழர்களின் அதிகாரிகளாவும், படைத்தலைவர்களாகவும் பணியாற்றிய வாண்டையர்களின் தலைவன் கருணாகர தொண்டைமான், கலிங்கப் போரை நடத்தி வெற்றி கண்டவராவார். சோழப் பேரரசின் முடிவில் அந்தந்த பகுதிகளின் ஆட்சியாளர்களாக வாண்டையார்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். கருணாகர தொண்டைமான் வம்சத்தவர்களான வாண்டையார்களின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்…
ஆய்வில் பேருதவி: திரு. விக்னேஷ் மாளுசுற்றியார்.
ஆய்வு மற்றும் தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்
Total views 3,136 , Views today 1