சோழப் பேரரசின் காலம் தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலமாகும். சோழர் காலத்தில் தமிழக மக்களின் வாழ்க்கை முறை உயர்ந்த நிலையில் இருந்தது. சோழர் காலத்தில் சமூக கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. செம்பியன் மாதேவியார், குந்தவை நாச்சியார் முதலிய சோழப் பெருந்தேவிகள் பொது அரசியலிலும் பொது வாழ்விலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
அவ்வகையில் சோழர் காலத்தில் வேளத்துப் பெண்டாட்டி எனும் அதிகாரிகள் பல கல்வெட்டுகளில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றனர். வேளம் என்பதற்கு சோழர் காலத்தில் இருந்த அரச மரபினர் மற்றும் அரண்மனை பணியாளர்களின் குடியிருப்பு என பொருள்படும். ( தமிழ் கல்வெட்டு சொல்லகராதி : பக் 581).இதில் அரச மரபினர் வசிக்கும் பகுதியான வேளத்தில் பணிபுரியும் அலுவலர் வேளத்து பெண்டாட்டி என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சோழர் காலத்தில் தஞ்சையில் பல்வேறு வேளங்கள் குடியிருப்புகள் இருந்ததை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. தஞ்சையில் இருந்த வேளங்கள் பஞ்சவன் மாதேவியார் வேளம், உத்தமசீலியார் வேளம், திருமஞ்சனத்தார் வேளம், திருப்பரிகலத்தார் வேளம் என பல பெயர்களில் இருந்துள்ளன.

கல்வெட்டுகளில் வேளத்துப் பெண்டாட்டி
தஞ்சாவூரில் இருந்த தெரிஞ்ச திருமஞ்சனத்தார் வேளத்துப் பெண்டாட்டி வரகுணன் எழுவாத்தூர் என்பவர் தஞ்சை பெரிய கோயிலில் விளக்கு எரிப்பதற்கு சேனாதிபதி குரவன் உலகளத்தானோடு சேர்ந்து 12 பசுக்களை தானமாக அளித்துள்ளதை தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டு உணர்த்துகிறது.

மேலே குறிப்பிடப்பட்ட வரகுணன் எழுவாத்தூர் மற்றொரு சமயத்தில் தஞ்சை பெரிய கோயிலுக்கு ராசராசசோழன் 45 ஆடுகளை கொடுக்கும் போது இவர் நான்கு காசுகளும் பன்னிரண்டு ஆடுகளையும் கொடுத்துள்ளார்.
மற்றொரு தருணத்தில் ராசராசன் 42 பசுக்களை பெரிய கோயிலுக்கு அளித்த போது இவரும் 6 பசுக்களை தானமாக அளித்துள்ளார்.( SII vol 2 no 95)
முதலாம் இராசராசனின் ஒன்பதாம் ஆட்சியாண்டை சேர்ந்த ஆடுதுறை கல்வெட்டில் தஞ்சாவூர் உடையார் கோதண்ட வேளத்துப் பெண்டாட்டி அடியள் சோலை, அடியள் பிரமாணி, சண்டனவல்லி,முருகன் திருவடி முதலிய நால்வரின் பெயரிலும் ஆடுதுறை கோயிலில் விளக்கு எரிப்பதற்கு பராந்தக தெரிஞ்ச கைக்கோளரில் சாத்தன் என்பவன் விலைக் கொடுத்து நிலம் வாங்கியதை கல்வெட்டு தெரிவிக்கிறது.( ARE 356 OF 1907)

முதலாம் பராந்தக சோழன் காலத்தில் தஞ்சாவூர் கற்றளிப் பிராட்டியார் வேளத்துப் பெண்டாட்டி மாநெநங்கண்டி என்பவர் 20 காசினை கும்பகோணம் நாகேஸ்வரசாமி கோயிலுக்கு அளித்துள்ளார். அதனைக் கொண்டு காவிரியில் இருந்து கோயிலுக்கு நீர் கொண்டு வருபவனுக்கு நிலம் அளிக்கப்பட்டது. ( ARE 234A OF 1911)

கிபி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு கல்வெட்டு” உடைய பிராட்டியார் கிழானடிகள் கீழைவேளத்துப் பெண்டாட்டி அவனிசிகாமணி என்பவர் திருக்கீழ்கோட்டத்து கோயிலுக்கு 90 ஆடுகளை” தானமாக அளித்ததை குறிப்பிடுகிறது.( கல்வெட்டு எண் : 226 of 1911)

கிபி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த ஆதித்த கரிகாலன் காலத்து கல்வெட்டில் ” தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சை பழைய வேளத்துப் பெண்டாட்டி பெரியான் திரிபுனசுந்தரி 85 கழஞ்சு பொன்னை விற்று அதன் மூலம் கிடைத்த வருவாயை திருக்கீழ் கூட்டத்து திருக்கோயிலுக்கு தானமாக அளித்துள்ளது” குறிப்பிடப்பட்டுள்ளது. ( 226 of 1911)
பராந்தக சோழன் காலத்து மற்றொரு கல்வெட்டில் ” தஞ்சாவூர் கிழானடிகள் வேளத்துப் பெண்டாட்டி பாளூரான் பொற்றாமரை என்பாள் திருச்சேறை கோயிலுக்கு 96 ஆடுகளை தானமாக அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது.( 123 of 1979)

கிபி 1015 ஆம் ஆண்டு முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் ஆழ்வார் வேளத்து பெண்டாட்டி ஆயிரவன் ஆயிரவன் கற்றளி என்பவள் தன்னுடைய தமையர் விச்சாதரன் மற்றும் தனது தாய் கரோகியின் நினைவாக 53 காசுகளை தஞ்சை திருவிசலூர் கோயிலுக்கு அளித்துள்ளார்.( SII vol 23- page 24)

வேளத்துப் பெண்டாட்டி எனும் அலுவலர்கள் சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையில் மதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என மூத்த தொல்லியல் அறிஞர் திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் தனது நூலான “தஞ்சாவூரில்” குறிப்பிட்டு உள்ளார்.
இவ்வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் முசுகுந்தேஸ்வரர் கோயிலில் கிடைத்த பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டு பின்வரும் செய்தியை தருகிறது.(பு.க 82)

கிபி பத்தாம் நூற்றாண்டில் மதுராந்தக சுந்தரசோழன் வேளத்து பெண்டாட்டி கள்ளச்சி உத்தம…என்பவள் பூதி பட்டாலகன் எனும் கொடும்பாளூர் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவரோடு நகர முக்கியஸ்தர்கள் முன்னிலையில் வழக்காடியது தொடர்பாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கொடும்பாளூரில் வேளத்து பெண்டாட்டி எனும் அலுவலராக கள்ளர் மரபினை சேர்ந்த ஒரு பெண் பணி புரிந்ததையும், இவர் அரச குடும்பத்தோடு தொடர்புடைய பூதி பட்டாலகன் என்பவரோடு ஏதோ ஒரு வழக்கு தொடர்பாக வாதத்தில் ஈடுபட்டதை கல்வெட்டு உணர்த்துகிறது.
இக்கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துவது வேளத்து பெண்டாட்டிகள் எனும் அலுவலர்கள் சோழர்களின் அரண்மனை நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் என்பதும், இவர்கள் செல்வ வளத்திலும் செல்வாக்கிலும் சிறந்து விளங்கியதால், ராசராச சோழனோடு இணைந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு தானம் அளிக்கும் அந்தஸ்தை பெற்று இருந்ததனர் என அறிகிறோம். கொடும்பாளூரை சேர்ந்த கள்ளர் வம்சத்து பெண் கொடும்பாளூர் அரண்மனை நிர்வாகத்தில் ஒர் முக்கிய பொறுப்பை வகித்து இருந்ததை புதுக்கோட்டை கல்வெட்டு உணர்த்துகிறது. சோழர் காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்ததும் , அரசு நிர்வாகத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகித்ததையும் கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் உறுதிபடுத்தப்படுகிறது.
Article by: www.sambattiyar.com
Total views 2,799 , Views today 1