முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்ட புதுக்கோட்டை மன்னர்

இன்றைய நிலையில் கொரோனா எனும் கொடிய நோய் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.  கொரோனா நோயை தடுக்கும் தடுப்பூசிகள் தயாராகி மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. எனினும் மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதில் இதன் பக்க விளைவுகளை எண்ணி சிறிய அச்ச உணர்வு நிலவுகிறது.

இத்தகைய நம்பிக்கையின்மையை போக்கவும்,  தங்களது அரசியல் பிம்பத்தை உயர்த்திக் கொள்ளவும் மக்கள் தலைவர்கள் சிலர் தாங்களாகவே முன் வந்து கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

அறிவியல் வளர்ச்சி உச்சத்தில் உள்ள இக்காலத்திலும் புதிய தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையின்மையும் அச்சமும் மக்களிடம் பரவலாக உள்ளது.

இன்றைக்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன் அறிவியல் வளர்ச்சிகள் தொடக்க நிலையில் இருந்த காலகட்டம். பெரும்பான்மையான மக்கள் படிப்பறவு இல்லாமல், மூட நம்பிக்கைகளில் சிக்கிக் கிடந்தனர்.

இத்தகைய காலகட்டத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி செய்தவர் மன்னர் விஜய ரகுநாதராய தொண்டைமான். இவரது ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அம்மை நோய் பரவ ஆரம்பித்தது. நூற்றுக்கணக்கில் மக்கள் பலியாயினர்.

அம்மை தடுப்பூசி போட்டுக் கொள்ள அக்கால மக்கள் தயாராக இல்லை.  தடுப்பூசி குறித்த பல்வேறு அச்சங்களும் மூட நம்பிக்கைகளும் மக்களிடம் நிலவி வந்தது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களின் உயிரை காக்க மன்னரே முடிவெடுத்தார்.

பெரிய அளவில் விழிப்புணர்வுகள் அல்லாத அந்த காலகட்டத்திலேயே அம்மை நோயின் தடுப்பூசியை தானே முதல் ஆளாக போட்டுக் கொள்ள சம்மதித்தார் புதுக்கோட்டை மன்னர். மக்களுக்கு முன் உதாரணமாக மன்னரும் அவரது சகோதரரும் கிபி 1812 ஆம் ஆண்டு அம்மை நோயக்கான தடுப்பூசியை புதுக்கோட்டை சமஸ்தானத்தில் முதல் ஆளாக போட்டுக் கொண்டனர்.

மன்னரே அம்மை தடுப்பூசியை போட்டுக் கொண்டதை அறிந்த மக்களும் அரசன் வழியில் தாங்களும் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர்.  இதன் மூலம் அம்மை நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு பல நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப் பட்டது.

விஞ்ஞான வளர்ச்சி மிகுந்த இன்றைய காலத்தில் தலைவர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்வதை பெரிய சாதனை போல பேசப்படுகிறது. ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்பே  மக்களை காக்க முதல் ஆளாக தானே தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களிடம் நம்பிக்கை விதையை விதைத்த புதுக்கோட்டை மன்னர் விஜய ரகுநாதராய தொண்டைமான் அவர்கள் எக்காலத்திலும் போற்றுதலுக்கு உரியவர்……

அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே….!

தொகுப்பு: www.sambattiyar.com

( ஆதார நூல்: புதுக்கோட்டை மாவட்ட வரலாறு : ராஜா முகமது பக்கம் -120)/Manual of pudukkottai state vol 2 part 1 – pg 866)

Total views 1,883 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *